வடகொரியாவின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்..

ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா பல தடவை ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அந்த நாடு பரிசோதனை செய்துள்ளது.

இதையடுத்து, வடகொரியா மீது ஐ.நா. சபை புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. எங்கள் மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, வடகொரியா ஏவுகணை சோதனையை நேற்று மீண்டும் நடத்தியது. தனது கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது என ஜப்பான் நாட்டு அதிபர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது உண்மைதான் என வாஷிங்டனில் உள்ள பென்டகனும் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம் என
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில், வடகொரியா நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த நிலைமையை நாங்கள் எதிர்கொள்வோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாகவே வடகொரியாவை நாங்கள் பார்த்து வருகிறோம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.