‘தமிழர் தாயகம் என்பது தவறானது’

“கிழக்கு மாகாணம் என்பது, கிழக்கில் வாழும் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மக்களினது தாயக பூமியாகும். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பது தவறான கருத்தாகும்” என்று  கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்பின் முன்னாள்  தலைவரும், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான மௌலவி. இஸட்.எம். நதீர் (ஷர்க்கி) தெரிவித்தார்.

“கிழக்கில் பல்லின சமூகத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.  கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்தோடு இணைத்து முஸ்லிம் சமூகத்தைச் சிறுபான்மை சமூகத்துக்குள் மேலும் சிறுபான்மையாக மாற்ற  எடுக்கப்படும் முயற்ச்சிகள் முஸ்லிம் சமூகத்துக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த ”இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் முஸ்லிம் சமூகமும்” எனும் தலைப்பில் உலமாக்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு, மருதமுனை அன்- நஹ்லா அரபுக் கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் அண்மையில்  நடைபெற்றது. இதில் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு விளக்கமளிக்கும் போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மௌலவி எம்.ஐ.ஹூசைனுத்தீன் (றியாழி) தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் மௌலவி. இஸட்.எம். நதீர் (ஷர்க்கி) மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் அல்லது தென்கிழக்கு அலகு என்பது கூட இன ரீதியான பிரிவினையை வளா்ப்பதாகவே அமையும். பல்லின சமூகத்தவா்களும் நிம்மதியாக வாழும் கிழக்கு மாகாணம் கிழக்காகவே இருக்க வேண்டும். வடக்கும் கிழக்கும் வரலாற்றில் ஒருபோதும் இணைந்திருக்கவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவே இணைக்கப்பட்டிருந்தன. வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்ற முஸ்லிம்களது கோரிக்கை, தமிழர்களது நியாயமான உரிமைகளுக்கு குறுக்கே நிற்பதாக ஒருபோதும் அமையாது என்பதை தமிழ் சமூகத்தினர் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்” என்றார்.

“நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய அரசியல் யாப்பு தொடர்பாக முஸ்லிம் சமூகம் விழிப்படைய வேண்டும். இந்த விடயத்தில் முஸ்லிம் உலமாக்களும் தவ்வா அமைப்புகளும் சிவில் சமூகத்தினரும் அரசுக்கு சில முன்மொழிவுகளையும் அழுத்தங்களையும் வழங்குவதற்கு முன்வர வேண்டும். குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, அதிகாரப் பகிர்வு- சமஷ்டி, தேர்தல் முறை சீர்திருத்தம் போண்றவற்றில் முஸ்லிம் சமூகத்தால் அவதானிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் காணப்படுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த விடயங்கள் மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட வேண்டும். ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சமூகத்தின் குரலாக இவைகளை ஆராய்ந்து முஸ்லிம் சமூகம் மற்றும் எதிர்கால சந்ததிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அரசாங்கத்துக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

-tamilmirror.lk

TAGS: