பத்மாவதி பற்றி பிரகாஷ்ராஜ் – தமிழோசை சிறப்பு நேர்காணல்

 

வில்லன், குணசித்தரப் பாத்திரம், நாயகன் என்றெல்லாம் எல்லா வகையாலும் தன்னுடைய நடிப்புத் திறமையை செம்மாந்த நிலையில் வெளிப்படுத்தி வருபவரும் தமிழ்கன்னட இரசிகர்களை வெகுவாகவும் மலையாள திரைப்பட இரசிகர்களை ஓரளவிற்கும் கவர்ந்தவருமான பிரகாஷ் ராஜ், ஒரு சமூக ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் தாய்மொழியான கன்னட மொழியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், அண்மையில் துப்பாக்கி இரவைகளுக்குப் பலியானார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜனநாயகக் குடியரசு என்றும் தீபகற்க சிறு கண்டம் என்றும் பாராட்டப்படும் இந்தியாவில், ஒரு பத்திரிகையாளரின் கருத்துக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதை சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் கருத்தால்தான் எதிர்கொண்டிருக்க வேண்டுமே அல்லாமால், வஞ்சகமான முறையில் துப்பாக்கிக் குண்டுகளைக் கொண்டு அல்ல என்று  பொங்கி எழுந்தார் பிரகாஷ் ராஜ்.

அதுமுதலே சமூக வலைதளங்களில் அடிக்கடி வந்து போகிறார் பிரகாஷ் ராஜ். இப்படிப்பட்ட நிலையில், இலண்டன் தமிழோசை சார்பில் செய்தியாளர் கே.முரளிதரனுக்கு பிரகாஷ் வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஒரு பகுதி, இதோ செம்பருத்தி  இணைய வாசக அன்பர்களுக்காக.. ..!

அண்மைக் காலமாக உங்களின் கருத்துகளை சமூகவலை தளங்களிலும், பேட்டிகளிலும் மிகத் தீவிரமாக தெரிவிக்க காரணம் என்னவென்று முரளீதரன் வினவியதற்கு,

“நான் நீண்ட காலமாகவே என் எண்ணங்களைத் தெரிவித்துதான் வருகிறேன். அப்போது பெரிதாக யாரும் கவனிக்கவில்லை. ஒருவேளை, இப்போது நீங்கள் சொல்வதுபோல, இவ்வளவு தீவிரமாக வெளிப்படுத்துவதற்குக் காரணம், ஒரு கொலை. ரொம்ப மோசமான ஒரு கொலை. எழுத்தாளர் கௌரி லங்கேஷின் கொலை” என்று கூறிய பிரகாஷ் ராஜ், மேலும், கௌரி லங்கேஷின் கருத்துகள் சில பிடிக்கும், சில பிடிக்காது. எல்லோருடைய கருத்துக்களையும் முழுமையாக ஏற்க முடியாது. சில வேளைகளில் கௌரி கருத்தைத் தெரிவிக்கும் விதம் பிடிக்காது. நானே அவரிடம் பேசியிருக்கேன். அதற்காக அவரைக் கொன்றுவிட வேண்டுமா? ஒரு குரலை அடக்குவதற்கான தைரியம் எங்கிருந்து வருகிறது?

அப்படிப்பட்ட கொலையை கொண்டாடுபவர்களைப் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடுகிறார்கள். இம்மாதிரி கொலையைக் கொண்டாடும் மனப்பான்மை எங்கிருந்து வந்தது என்றெல்லாம் கொந்தளிக்கிறார் பிரகாஷ்.

தொடர்ந்து, இம்மாதிரியான மனப்பான்மை எங்கிருந்து வந்ததாக நினைக்கிறீர்கள் என்று முரளீதரன் தொடர,

“யார் தூண்டுகிறார்கள் என்று எப்படி அடையாளம் காட்டுவது? எல்லோரும் ஒரு முகமூடிக்குப் பின்னால் பதுங்கி இருக்கின்றனர் என்பது மட்டும் புரிகிறது என்று பதில் சொல்லியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பொருள்-சேவை வரி குறித்தும் பத்மாவதி திரைப்பட சிக்கல் குறித்தும்கூட வினாத் தொடுத்திருக்கிறீர்களே என்று முரளீதரன் அடுத்தத் தகவலுக்கு தாவியபோது, இவர்கள் யாரும் என் கேள்விக்குப் பதில் கொடுக்கவில்லை; மாறாக, “நீங்க யார் மோடியைக் கேட்பதற்கு” என்கிறார்கள். என் பிரதமரைக் கேட்பதற்கு எனக்கு உரிமை இல்லையா என்று முரளீதரனின் கேள்விக்கு இன்னொரு கேள்வியையே பதிலாகத் தருகிறார் பிரகாஷ் ராஜ்.

தொடர்ந்து, “ஜி.எஸ்.டி. என்னும் பொருள்-சேவை வரியைஅறிமுகப்படுத்துவது தவறென்று சொல்லவில்லை. என்னைப் போல லட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்கள் கட்ட முடியும். ஆனால், சாதாரண தொழிலாளர்கள், பானை செய்பவர்கள் போன்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை வரும் நவம்பர் மாதம் ‘ஜிஎஸ்டி கவுன்சிலி’ல் பேசும்போது நீக்குவீர்களா என்றுதான் கேட்டேன். உடனே, நான் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். இந்துத்துவாவிற்கு எதிரானவன் என்கிறார்கள். இந்துத்துவாவுக்கும் ஜி.எஸ்.டிக்கும் என்ன சம்பந்தம் என்று வரிசையாக கேள்விகளையே முரளீதரனிடம் முன்வைக்கிறார்;

அடுத்ததாக பத்மாவதி பட விவகாரம்.

இந்த நாடு பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும், கலாசாரத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. என்னுடைய தனித்துவத்தை புண்படுத்தியிருக்கிறீர்களா என்ற அச்சம் வருவதிலோ, கேள்வி கேட்பதிலோ தவறில்லை. ஆனால், அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

இன்றைக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று பத்மாவதி படத்திற்கு தடை கோருகிறார்கள். தணிக்கை வாரியத்திடம் சென்று உங்கள் அச்சங்களைச் சொல்லுங்கள். அவர்கள் பார்த்து முடிவெடுத்த பிறகு இங்கு வாருங்கள் என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். அதெல்லாம் முடியாது, நான் தலையை வெட்டுவேன், கழுத்தை வெட்டுவேன் என்கிறார்கள்.

அதெப்படி மற்றவர்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுக்க முடியும் என்று சிரித்துக் கொண்டே கொந்தளிக்கிறார் பிரகாஷ் ராஜ். 

ஆக, உங்கள் விமர்சனங்கள் எல்லாமே  பொது விஷயங்கள் சம்பந்தப்பட்டவைதானே தவிர, பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிராக அல்ல என்கிறீர்களா என்ற அடுத்தக் கேள்விக்கு,

ஆமாம். என் விமர்சனங்களை ஏன் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிரானதாக எடுத்துக்கொள்கிறீர்கள்? நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது, நீங்கள் ஒரு கட்சியைச் சார்ந்தவர் இல்லை. எல்லோருக்குமான ஆட்சியைத்தான் நீங்கள் தர வேண்டும். ஒரு குடிமகனாகத்தான் நான் கேள்வி கேட்டேன்; கேட்பேன். இதற்கு ஏன் கோபப்பட வேண்டும் என்று மீண்டும் கேள்வியாகவே பதிலைத் தந்துள்ளார் நடிகரும் தயாரிப்பாளர் சங்க செயலாளருமான பிரகாஷ் ராஸ்ஜ்.

தொடர்ந்து, இந்தியை ஏன் திணிக்கிறீர்கள் என்கிறேன். கேட்கக்கூடாதா? கர்நாடகாவில் கன்னடம் இருக்க வேண்டும்; தமிழனுக்கு தமிழ் இருக்க வேண்டும்; மலையாளிக்கு மலையாளம் இருக்க வேண்டும்; இந்தியை நான் ஏன் கற்க வேண்டும்? இதைக் கேட்டால் இந்திய எதிரி, மோடியின் எதிரி என்கிறார்கள் என்று உணர்ச்சி வயப்பட்டார் பிரகாஷ்ர ராஜ்.

(தமிழக அரசியல் களம், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், தமிழ்த் திரை உலகம் போன்ற பல அம்சங்கள் குறித்து அடுத்தப் பகுதியில் காண்போம்).

தொகுப்பு: ‘ஞாயிறு’ நக்கீரன்.