‘போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்’: அமெரிக்கா எச்சரிக்கை

அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பியாங்யாங்கிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை துண்டிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவை கேட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்தார்.

அமெரிக்கா முரண்பாடுகளை விரும்பவில்லை என்று கூறிய அவர், எனினும் போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி “முழுமையாக அழிக்கப்படும்” என்று எச்சரித்தார்.

தென் பியாங்யாங் பிராந்தியத்தில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வட கொரியா நிகழ்ந்தியதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமையன்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை 4,475 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்ததாக வட கொரியா கூறியுள்ளது – சர்வதேச விண்வெளி நிலையத்தை விட இது 10 மடங்கு உயர்ந்ததாகும் – இது பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் திறன் வாய்ந்ததாகும்.

எனினும், இந்த கூற்று நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான தொழில்நுட்பத்தை அமைப்பதற்கான அந்நாட்டின் திறன் குறித்து வல்லுநர்களும் சந்தேகித்துள்ளனர்.

இந்த சோதனையை “குறை கூற முடியாது” என்றும் இது “ஒரு பெரிய திருப்புமுனை” என்றும் வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன் கூறியுள்ளார்.

இது போன்ற “தொடர்ச்சியான தாக்கும் மனப்பான்மை நடவடிக்கைகள்” உறவை சீர்குலைக்கவே செய்கிறது என அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே எச்சரித்தார்.

இதற்கிடையில், வரி சீர்திருத்தம் குறித்து மீசூரியில் பேசிய டிரம்ப், வட கொரியத் தலைவர் கிம்மை “மோசமான மனநிலை உடையவர்” என்றும் “குட்டி ஏவுகணை மனிதர்” என்றும் விமர்சனம் செய்தார்.

இதனை தொடர்ந்து, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், வட கொரியாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்வதை சீனா நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் நிக்கி ஹாலே குறிப்பிட்டார்.

மேலும்,”ஆத்திரம் மூட்டுவதை நிறுத்திக் கொள்ளவும், அணுஆயுத பாதையில் இருந்து விலகவும் வட கொரியாவை சமாதானப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என ஷி ஜின்பிங்கிடம் டிரம்ப் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை கூறியது.

இதற்கு பதிலளித்த ஷி ஜின்பிங், வடகிழக்கு ஆசியாவில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டி, வட கொரிய தீபகற்பத்தை முடித்து வைப்பதே தமது இலக்கு என்று கூறியதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.

சீனா, வட கொரியாவின் மிகப் பெரிய கூட்டாளியாகவும், மிக முக்கியமான வர்த்தக பங்குதாரராகவும் மற்றும் நில எல்லைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது. -BBC_Tamil