பாகிஸ்தான் : பெஷாவர் கல்லூரியில் கடும் துப்பாக்கி சூடு

பாகிஸ்தான் பெஷாவரில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூடு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெஷாவரில் உள்ள விவசாய பயிற்சி கல்லூரியில் புர்கா அணிந்து வந்த இருநபர்கள் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று வரும் இந்த இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக பாகிஸ்தானிய தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈத் கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய இருவரில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஊடக செய்திகள் கூறுகின்றன.

சமீபத்தில் ஏற்பட்ட தாலிபான் கிளர்ச்சியைத் தொடர்ந்து, பெஷாவரை ஒட்டியுள்ள ஆஃப்கான் எல்லையில் சில மோசமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன

இந்நிலையில், கல்லூரியில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

“காவல்துறையினர் மற்றும் ராணுவ தளபதிகள் இந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளதாக” தலைமை போலீஸ் அதிகாரி டாஹீர் கான் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெஷாவரில் ராணுவம் நடத்தி வந்த ஒரு பள்ளி மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 141 பேர் கொல்லப்பட்டனர். அண்மைய வரலாற்றில் நடைபெற்ற மோசமான தாக்குதல்களில் இது ஒன்றாகும். -BBC_Tamil