டிஎல்பி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 8-ம் நாள், நெகிரி செம்பிலான் மாநிலத்தில்

டிசம்பர் 2, 2017 – நடைப்பயணத்தின் 8-ம் நாள், நேற்றிரவு லாபிஸ்சில் சற்று தாமதமாகப் படுக்கச்சென்றதால், இன்று காலை 5.30 மணியளவில்தான் தங்கள் பயணத்தைத் தொடங்கி உள்ளனர்.

காலை மணி சரியாக 11.25-க்கு, ஜொகூர் – நெகிரி செம்பிலான் எல்லையான கெமாஸ் பட்டணத்தை வந்தடைந்தனர் தியாகுவும் அஞ்சாதமிழனும். அவர்களைப் பின்தொடர்ந்து, மகிழுந்தில் கௌதமனும் வந்தார்.

இன்று அவர்களை நெகிரி செம்பிலான் மாநில எல்லையில், டிஏபி-யைச் சேர்ந்த செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, தனது தோழர்கள் மற்றும் கட்சி ஊறுப்பினர்களுடன் வந்து அன்புடன் வரவேற்றார். தியாகு, அஞ்சாதமிழன் இருவருக்கும் மாலை, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து, நடைப்பயணத்தின் நோக்கம் மற்றும் இருமொழி திட்டம் பற்றி கலந்துரையாடியதாக தியாகு தெரிவித்தார்.

“அரசாங்கம் நமக்கு இந்தத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கத் தேவை இல்லை, இது மக்களைக் குழப்பும் திட்டமாகும். நிறைய பேருக்கு இத்திட்டம் பற்றி தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு விளக்கம் கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால், நாளை நாம் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்,” என்று தியாகு தெரிவித்தார்.

“இந்த இளைஞர்களின் முயற்சி பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும். இதுவும் ஒருவகைப் போராட்டம், அகிம்சை வழியில்,” என்றார் டிஏபி குணா.

கடந்த எட்டு நாள்கள் நடைப்பயணத்தில், அவர்களை வந்து சந்தித்த முதல் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா ஆவார். இரண்டு நாள்களாக அவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் பயணம் குறித்து விசாரித்து, தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் நெகிரி செம்பிலான் மாநில டிஏபி துணைத் தலைவருமான பி.குணா தெரிவித்தார்.

“சுயநலமற்ற அவர்களின் பயணத்திற்கு, மக்கள் பக்கபலமாக இருக்க வேண்டும், ஆதரவு தெரிவிக்க வேண்டும். நெகிரி மாநிலத்தில் என்னால் முடிந்த உதவிகளை நான் அவர்களுக்கு வழங்குவேன்,” என்றார்.

மதிய உணவுக்குப் பிறகு, கெமாஸ் பட்டணத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று, அன்றிரவு அங்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, கெமிஞ்சே வட்டாரத்தில் ஏற்பாடாகியிருந்த மாவீரர் நினைவெழுச்சி நாளில் இந்த இருமொழி திட்டம் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. டிஎல்பி திட்டம் என்றால் என்ன, அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றியும் பேசப்பட்டது.

“இன்று, தியாகுவை அழைத்துவந்து இந்நிகழ்ச்சியில் பேசவைக்க எண்ணினேன். ஆனால், தியாகு நடைப்பயணம் முடியும் வரை, காரில் ஏறி பயணிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். அதனால், மேலும் விளக்கம் பெற விரும்புபவர்கள், நாளை மாலை அல்லது இரவில் அவரைச் சந்தித்து பேசுங்கள்,” என்றும் பி.குணா தெரிவித்தார்.

230 கிலோ மீட்டர் தூரத்தை, 8 நாள்களில் நடந்து, கடந்துவந்துள்ளனர் இந்த இளைஞர்கள். ஆங்காங்கே நின்று, ஓய்வெடுத்து, மக்களைச் சந்தித்து, கருத்து பறிமாற்றம் செய்து, இன்று ஜொகூர் மாநிலத்தைக் கடந்து, நெகிரி மாநிலத்தினுள் நுழைந்துள்ளனர்.

நாளை கெமெஞ்சே சுற்றுவட்டாரத் தமிழ் உணர்வாளர்கள், அவர்களை அங்குச் சென்று காணலாம்.

மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.

அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள்,  012 4341474 –  தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன்  என்ற எண்களில் அழைக்கலாம்.

  • ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்