ஐ.நா. மன்றத் தலைவர் தொடக்கி வைத்த சுங்கை சிப்புட் காந்தி தமிழ்ப்பள்ளி

‘ஞாயிறு’ நக்கீரன் – மலாயா எங்கும் விடுதலை வேட்கையும் சுதந்திர தாகமும் பரவியும் விரவியும் இருந்த நேரம் அது; மெர்டேக்கா கிடைக்கப் போகிறது என்ற நிலையில்.. .. கிடைத்தே விட்டது என்னும் மனப்பான்மையில் மலாயா மக்கள் இனம்-மொழி-சமயம் பாராது ஒருமித்த உணர்வில் இன்ப வெள்ளத்தில் திளைத்திருந்த நேரம் அது.

கோலாலம்பூரில் இருந்து தலைவர்கள் இலண்டனுக்கும் புதுடில்லிக்கும் பறந்து கொண்டிருந்தனர்; இடைவிடாத தொலைபேசி தொடர்பு வேறு..!

இப்படிப்பட்ட அமர்க்களத்திற்கு நடுவே மகாத்மா காந்தி கலாசாலை என்ற பெயரில் ஒரு தமிழ்ப்பள்ளியை சுங்கை சிப்புட் நகரில்(ஜாலான் பெசார் கோலகங்சார்) திறந்து வைக்க ம.இ.கா.-வின் அப்போதையத் தலைவர் துன் வீ.திருஞான சம்பந்தன் பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தார்.

அந்தப் பள்ளியின் கட்டுமானத்தைத் தொடங்கி வைத்தவர் கவியோகி சுத்தானந்த பாரதி. அப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு அதைத் திறந்து  வைக்க அந்நாளைய ஐ.நா. மன்றத்தின் தலைவரை வரவழைத்ததுதான் பெருஞ்சிறப்பு.

அந்த நேரத்தில்  புது டில்லியுடன் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, குறிப்பாக பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் இருந்த அணுக்கமான நட்பை துணை கொண்டு அவரின் தங்கையான திருமதி விஜயலெட்சுமி பண்டிட்டை வரவழைத்து அவரின் தலைமையில் காந்தி தமிழ்ப் பள்ளியை திறந்து வைக்க ஆசைப்பட்டார்.

அந்த நேரத்தில் விஜயலெட்சுமி பண்டிட், சாதாரணப் பெண் அல்ல; ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைவராக பெரும்பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தார். அதைவிட, மலாயாவில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கெடுபிடியும் அதிகமாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரெல்லாம் முடிந்து, ஜப்பானியர்கள், ஜெர்மனியர்களின் மருட்டல் எல்லாம் முற்று பெற்றிருந்தாலும் இந்த மண்ணில் தங்களின் கொட்டமும் ஒரு முடிவிற்கு வரவிருப்பதை எண்ணியெண்ணி கவலையிலும் பதற்றத்திலும் ஆங்கில ஆட்சியாளர்கள் இருந்த நேரமது.

அதனால், விஜயலெட்சும் பண்டிட் இங்கு வருவதற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தினர். இருந்தாலும் அவற்றை யெல்லாம் சமாளித்து அந்த அம்மையாரை மலாயாவிற்கு வரவழைத்து தான் பிறந்த மண்ணில் தன் சொந்த முயற்சியில் இடமும் பொருளும் தந்து எழுப்பிய தமிழ்ப் பாடசாலையைத் திறந்து வைக்கச் செய்தார். அந்தக் காலக்கட்டத்தில் ஆற்றலும் செல்வாக்கும் பொதுநல நோக்கும் நிறைந்த தலைவராக விளங்கினார் துன் சம்பந்தன்.

அப்படிப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தமான தமிழ்ப் பள்ளி, அரச நகரான கோல கங்சார் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் இன்றளவும் செம்மையாக திகழ்ந்து வருகிறது. இந்த மண்ணில் ஒரு தமிழ்ப் பள்ளியைத் திறந்து வைத்த வரலாறு சமைத்த விஜயலெட்சுமி பண்டிட் அம்மையாருக்கு டிசம்பர் முதல் தேதியில் பிறந்தவர். நேற்று முந்தினம் அவரின்  நினைவு நாள்.