ஏமன்: முன்னாள் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு சௌதிக் கூட்டணி வரவேற்பு

சௌதி தலைமையிலான கூட்டணி, தன்னோடு போரிட்டுவரும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ்வின் பேச்சுவார்த்தை அழைப்பை வரவேற்றுள்ளது.

இந்த கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நகர்வை தொடர்ந்து, தமது மக்கள் பக்கம் நிற்க முடிவு செய்துள்ளதன்மூலம், இரானுக்கு விசுவாசமான கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஏமன் விடுதலைபெறும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

கூட்டணியாளர்கள் தடைகளை உடைத்து, தாக்குதலை நிறுத்திவைத்தால், அடுத்த நகர்வை செய்ய தயாராக உள்ளதாக சலேஹ் கூறியுள்ளார்.

இந்த வாரம் வரையில், சலேஹ்வின் கூட்டாளியாக இருந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள், அவர்மீது ஆட்சிக்கவிழ்ப்பு செய்கிறார் என குற்றம்சாட்டினர்.

தலைநகர் சனாவில், சலேஹ் படையினருக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான சண்டை தொடர்கிறது.

செஞ்சிலுவை சங்கத்தில் சர்வதேசக்குழு, இந்த சண்டையால், தலைநகர் சனாவில், டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

ஹூதிக்கள் இரானால் அதரவு அளிக்கப்பட்டாலும், 2014ஆம் ஆண்டு முதல், சர்வதேச அரங்கில், அரசாக அங்கீகரிக்கப்பட்ட அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக, சலேஹ்வுடன் இணைந்து போராடி வந்தது.

தொலைக்காட்சியில் பேசிய சலேஹ், அண்டை மாநிலங்களில் உள்ள சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகள், சண்டையை நிறுத்தி, முற்றுகையை அகற்றி, விமான நிலையங்களை திறக்க அழைப்பு விடுகிறேன். தேவையானவர்களுக்கு உணவு சென்றடைய செய்து, காயமடைந்துள்ளவர்களை காப்பாற்றுவதன் மூலம், நமது ஒற்றுமையான நல்லொழுக்கம் குறித்த புதிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று பேசினார்.

இதுவரை ஏமனுக்கு நடந்தவை போதும், நாம் நேர்மறையான வழிகள் மூலம், இந்த பிரச்சனையை கையாள்வோம் என்றும் தெரிவித்தார்.

சலேஹ்வின் அறிக்கையை வரவேற்றுள்ள மன்சூர் ஹாதி, ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அவருடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

அரசியல் பக்கங்கள் கொண்ட, புதிய பகுதியை, தேசிய அளவில் பரந்த கூட்டணியாக அமைப்பது என்பது புதிய அத்தியாயத்தை தொடங்க உதவுவதோடு, ஆட்சிக்கவிழ்ப்புக்காக பணியாற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கும் என்று தெரிவித்தார்.

இருந்தபோதும், ஹூதிக்கள் அவரின் யோசனையை சரியான அளவிற்கு ஏற்கவில்லை. சலேஹ்வின் பேச்சு, எங்களின் கூட்டணிக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு. இது ஆக்கிரமிப்பிற்கு எதிராக நிற்கிறோம் என்று கூறிக்கொள்பவர்களின் மோசடியை வெளிக்கொண்டுவந்துள்ளது என்று ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த இரு குழுக்களும், சரியில்லாத ஒரு கூட்டணி சூழலில், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக ஹாதி அரசை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.

நகரின் முக்கிய மசூதி வளாகத்திற்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நுழைந்துவிட்டனர் என்று, சலெஹ்வின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியதுமுதல், இந்த புதிய பகை எழுந்துள்ளது.

சனிக்கிழமை, தலைநகர் சனாவில் நடந்த சண்டையில், சலேஹ்வின் உறவினர்கள் வாழும், ஹத்தா பகுதியில் துப்பாக்கிச்சூடும், குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாகவும், அறிக்கைகள் கூறுகின்றன.

சில அறிக்கைகள், சலேஹ்வின் சண்டையாளர்கள், ஹூதி குழுவின் முக்கிய பதவியை பிடித்துவிட்டதாக கூறுகின்றன.

ஐ.நா அறிக்கையின்படி, சௌதியின் தலைமையிலான கூட்டணி, ஏமன் நெருக்கடியில் தலையிட்டது முதல், 8,670 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 49,960 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறுகிறது.

இது, 20 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளுக்கான தேவையை அங்கு உருவாக்கியது. உலகிலேயே மிகப்பெரிய உணவுப்பாதுகாப்பு அவசரநிலையை உருவாக்கியது.

கடந்த 2011ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் அங்கு பரவிய காலரா நோயால் 2,211 பேர் இறந்துள்ளதாக கருதப்படுகிறது. -BBC_Tamil