உள்ளூராட்சித் தேர்தலினால் பொறுப்புக்கூறலுக்குப் பின்னடைவு

கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதாலும், உள்ளூராட்சித் தேர்தலினாலுமே, காணாமல்போனோர் பணியகத்தை செயற்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இழுபறிப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,

“தற்போதைய  அரசாங்கம்  நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை வாக்குறுதியளித்தபடி முன்னெடுக்கும் என்ற  நம்பிக்கை உள்ளது.

இந்த செயற்பாடுகள்  தாமதம் அடைந்தாலும் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை   வலுவாகவே உள்ளது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு  தொடர்பாக, புரிந்து கொண்டுள்ள அரசாங்கத்தின் தலைமையே தற்போது பதவியில் உள்ளது.

நல்லிணக்கம் எந்தளவு தூரம்  முக்கியத்துவம்  மிக்கது என்பதனை இந்த அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது.

ஆனால் கூட்டு எதிரணி  மிகவும் பலமான முறையில் செயற்படுவதன் காரணமாக  அரசாங்கத்தினால் இந்த செயற்பாடுகளை  சரியான முறையில் முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளது.

காணாமல் போனோர்  பணியகத்துக்கான ஆணையாளர்களை  நியமிக்கும்  சாத்தியம் இருந்தும் அதனை  அரசாங்கம்  தாமதிக்கின்றது.

அத்துடன் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நட்டஈடு வழங்கும் பணியகம் என்பனவற்றை    அமைப்பதற்கான ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை     சட்டமாக்குவதற்கு அரசாங்கம்  தயங்குகின்றது.

தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலும்  நடைபெறவிருப்பதால் நல்லிணக்க மற்றும்  பொறுப்புக்கூறல் விடயங்களை அரசாங்கம்   மேலும் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில்   காணாமல் போனோர் அலுவலகத்துக்கு  ஆணையாளர்களை நியமித்தால்    எதிர்க்கட்சிகள்  அதனை    வேறுவிதமாக   தேர்தல் காலத்தில் பரப்புரை  செய்ய ஆரம்பித்துவிடும்.

அரசாங்கத்துக்கு இந்த  சூழலில் காணப்படுகின்ற சவால்களையும்  நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு காணப்பட்டாலும் எதிர்க்கட்சிகள் அதனை  மக்கள் மத்தியில் வேறுவிதமாக பிரசாரம் செய்துவிடும் என்ற அச்சமும் உள்ளது.

தேர்தல் காலத்தில்  குழப்பம் ஏற்பட்டு விடும் என்று  அரசாங்கம் கருதலாம்.  ஆனால் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற தேவையும் அரசாங்கத்துக்கு உள்ளது.

எனவே   தாமதித்தாவது  இந்த செயற் பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று  நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: