செகாமாட்டில் இராணுவ வாக்காளர்கள் பதிவை எதிர்க்கும் டிஏபி முயற்சி தோல்வி

ஜோகூர்     டிஏபி,    செகாமாட்டில்   இன்னமும்  கட்டப்பட்டுக்  கொண்டிருக்கும்       இராணுவ   முகாமுக்கு   1,051   இராணுவ  வாக்காளர்கள்   மாற்றிவிடப்பட்டதற்கு   ஆட்சேபனை   தெரிவிப்பதில்   தோல்வி   கண்டுள்ளது.

ஆட்சேபனை   நிராகரிக்கப்பட்டதை     அடுத்து    ஆட்சேபனை     தெரிவிக்கப்பட்ட    ஒவ்வொரு    வாக்காளருக்காகவும்   தேர்தல்    ஆணையம்(இசி)  ரிம100  அபராதம்   விதித்து   பின்னர்   அபராதத்   தொகை  ஒவ்வொருவருக்கும்   ரிம150  ஆக   உயர்த்தப்பட்டது   என   கூலாய்  எம்பி   தியோ   நை    சிங்  இன்று   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

அக்டோபர்  25-இலிருந்து   நவம்பர்     6வரை     காட்சிக்கு    வைக்கப்பட்ட    2017  மூன்றாவது    காலாண்டு   துணை   வாக்காளர்   பட்டியலில்   காணப்பட்ட   பெயர்களுக்கு    எதிராக   டிஏபி    ஆட்சேபனை    தெரிவித்தது.  ஆட்சேபனை    தெரிவித்தபோதே    ஆட்சேபனை    தெரிவிக்கும்   செலவுக்காக   ஒரு   நிதியையும்  அது   திரட்டியது.

மூன்றாவது   காலாண்டு   வாக்காளர்   பட்டியலில்    புதிய    வாக்காளர்களைப்    பதிவு   செய்தது   நியாயமல்ல   என்பது   டிஏபியின்   வாதம்.  அதுவும்   இன்னும்   கட்டி  முடிக்கப்படாதிருக்கும்   ஒரு   முகாமில்   வாக்காளர்கள்   இருப்பதாக   பதிவு   செய்வது   ஏன் என்று   அது  வினவியது.

ஒருவர்   இசியிடம்   ஆட்சேபனை    தெரிவிப்பதாக   இருந்தால்   அதற்கு   ஒரு   கட்டணம்   செலுத்த    வேண்டும். ஆட்சேபனை    நிராகரிக்கப்பட்டால்   அபராதம்   விதிக்கப்படும்.   அபராதம்   ஆட்சேபம்    தெரிவிக்கப்பட்ட    வாக்காளர்களைக்  கணக்கிட்டு   தலைக்கு  ரிம200வரைகூட  விதிக்கப்படலாம்.

டிஏபியின்  ஆட்சேபனை    நிராகரிக்கப்பட்டதால்   அது   இப்போது  இசிக்கு   ரிம157, 650   அபராதம்   செலுத்த     வேண்டும்.  ஆட்சேபனை    செலவுகளுக்காக    அது   திரட்டி   வைத்திருப்பது   ரிம10,000தான்.

டிஏபின்   ஆட்சேபனைக்காக   நேற்று   ஏசி   ஏற்பாடு   செய்திருந்த பொது   விசாரணைக்கு    இராணுவத்தினர்  “தங்கள்   வாழ்க்கைத்   துணையுடனும்  குழந்தைகளுடனும்    பேருந்துகளில்    வந்திறங்கினார்கள்”,  என   தியோ   கூறினார்.

“எனக்கு    வியப்பாக    இருந்தது. இவர்கள்   செகாமாட்டில்   வசிப்பவர்களாக   இருந்தால்    இப்படி   பேருந்துகளிலா   வர   வேண்டும்?   அதிலும்   சில  பெட்டிகளும்   வைத்திருந்தனர்”,  என்றார்.