குடிநுழைவுத்துறையினரால் தாக்கப்பட்டதாக வங்காளதேசி புகார்

வங்காள  தேசத்தின்   தொழிற்சங்கத்   தலைவர்    ஒருவர்   கோலாலும்பூர்   அனைத்துலக    விமான   நிலையத்தில்    குடிநுழைவுத்  துறையினர்   தம்  பணத்தையும்   கைபேசியையையும்    பிடுங்கிக்கொண்டு   உதைத்துத்   துன்புறுத்திப்    பின்னர்   வங்காள  தேசத்துக்கே   திருப்பி   அனுப்பி  வைத்தனர்   எனக்  கூறியுள்ளார்.

வங்காள   தேச  ஆங்கில   மொழி   நாளேடான   த   டெய்லி    ஸ்டாரில்   வெளிவந்துள்ள    செய்தி   இது.  வங்காள   தேச    ஆடை  தயாரிப்புத்   தொழிலாளர்   சங்கச்  சம்மேளத்தின்    தலைமைச்   செயலாளர்   தாபன்   சாஹா  மலேசியாவில்    ஒரு   மாநாட்டில்   கலந்துகொள்ள    வந்தபோது   விமான   நிலையத்தில்    தடுத்து   நிறுத்தப்பட்டாராம்.

இதன்  தொடர்பில்   குடிநுழைவுத்துறை   தலைவர்   முஸ்டபார்   அலியைத்   தொடர்புகொண்டபோது   அவ்விவகாரத்தை    விசாரித்துக்   கொண்டிருப்பதாக   தெரிவித்தார்.

கோலாலும்பூரில்   உள்ள   North South Initiative  ஏற்பாடு   செய்த   மாநாட்டில்   கலந்துகொள்ள   தாபான்   நவம்பர்   17-இல்  மலேசியா   வந்ததாக   அந்நாளேடு   கூறியது.

அதிகாலை  மணி   3.30க்கு   வந்திறங்கிய   அவரிடம்  குடிநுழைவுத்துறை   அதிகாரி   ஒருவர்  கடப்பிதழ்,  பயணச்  சீட்டு,  அழைப்பிதழ்    ஆகியவற்றைக்  கேட்டிருக்கிறார்.

பிறகு    பணம்   எவ்வளவு   இருக்கிறது    என்று  வினவினார்.

“என்னிடம்  யுஎஸ்$50  இருப்பதாகச்  சொன்னேன்.  ஏற்பாட்டாளர்கள்   என்   செலவுகளைக்   கவனித்துக்  கொள்வார்கள்    என்பதால்    நான்  கூடுதல்  பணம்   வைத்துக்கொள்ளவில்லை”,  என்றவர்   சொன்னார்.

பிறகு  இன்னோர்  அதிகாரி       இவருடைய  பணம்  கைபேசி,  பெட்டி   ஆகியவற்றை   எடுத்துக்கொண்டு   இவரை   70  வெளிநாட்டவர்   இருந்த   ஒரு   அறைக்குள்   விட்டுச்   சென்றார்.

அங்கு  வங்காளதேசிகள்,  இந்தியர்கள்,  பாகிஸ்தானியர்  ஆகியோர்  இருந்தனர்.  அனைவரும்    தரையில்   உட்கார  வைக்கப்பட்டிருந்தனர்.

“குடிநுழைவுத்துறை   அதிகாரிகள்   முரட்டுத்தனமாக    நடந்துகொண்டார்கள்.  சில  வங்காளதேசிகள்  காலையில்   தரையில்   படுத்து  உறங்கிக்  கொண்டிருந்தபோது   ஒரு   அதிகாரி   எழுந்திருக்குமாறு    சத்தம்   போட்டதுடன்   அவர்களைக்  காலாலும்    உதைத்தார்” ,  என்றார்.

மதிய  உணவுக்குப்  பிறகு  தனக்கு  உடல்நிலை   சரியில்லை  என்பதால்  அங்கிருந்த   சோபாவில்   அமர்ந்ததாக   தாபான்   கூறினார்.  அப்போது   அதிகாரி  ஒருவர்   விரைந்து   வந்து   காலால்  வயிற்றில்   உதைத்திருக்கிறார்.

“நீ   என்ன   பெரிய  தொழில்  அதிபரா?”,  என்றும்   அதிகாரி  கிண்டலாகக்   கேட்டாராம்.

அந்தத்  தொழிற்சங்கத்   தலைவர்  நவம்பர்   18  மாலை   அவரது   நாட்டுக்கே   திருப்பி   அனுப்பப்பட்டார்.  அதற்குமுன்   குடிநுழைவுத்துறை    அதிகாரிகள்     அவரிடம்   ரிம200   கேட்டிருக்கிறார்கள். இவர்  தன்னிடம்   இருந்த  ரிம 30ஐக்  கொடுத்திருக்கிறார்.

அவர்  நாடு  கடத்தப்பட்டதற்குக்  காரணம்   எதுவும்   தெரிவிக்கப்படவில்லை.

குடிநுழைவுத்  துறையிடமும்   டாக்காவில்   மலேசியத்   தூதரகத்திலும்      புகார்  பதிவு   செய்திருப்பதாக    தாபான்  கூறினார்.  புகாருக்கு  இதுவரை  பதில்  இல்லை.

இதற்குமுன்  ஜூலை  மாதம்   வங்காளதேச   மனித  உரிமை    ஆர்வலர்   அடிலூர்  ரஹ்மான்   மலேசியா   வந்தபோதும்    குடிநுழைவுத்துறையினர்  இப்படித்தான்   தடுத்து  நிறுத்தித்   திருப்பி   அனுப்பி   வைத்தனர்.   அதற்கும்   காரணம்   கூறப்படவில்லை.