கலிஃபோர்னியா காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

நள்ளிரவில் வேகமாகப் பரவிய காட்டுத் தீ நகருக்குள் புகுந்ததால் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பிச்சென்றனர்.

லாஸ் ஏஞ்சலீசுக்கு வடக்கில் உள்ள வென்சுரா மற்றும் சான்டா பவுலா ஆகிய நகரங்களில் 8,000 வீடுகளில் வசித்தவர்கள் கட்டாயம் வெளியேறவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ வெகு வேகமாகப் பரவி வருவதாகவும் தங்களால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

திங்கள்கிழமை மாலை தொடங்கிய காட்டுத் தீ செவ்வாய்க்கிழமை காலையில் 26,000 ஏக்கர் பரப்பை பொசுக்கிவிட்டது. தீயில் இருந்து தப்பிச் சென்றபோது சாலை விபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்துவிட்டார்.

மின்சாரம் துண்டிப்பு

2,60,000 மின் நுகர்வோர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வென்சுரா நகருக்குள் தீ பரவியதால் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட பல கட்டடங்கள் எரிந்தன என்று லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் வீடுகளையும் கட்டடங்களையும் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவசரகாலப் பணியாளர்கள் வீடுவீடாகப் போய் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி வலியுறுத்திவருகிறார்கள்.

“தீ பரவுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. உண்மையில் இயற்கை அன்னைதான் முடிவு செய்வாள்,” என்றார் வென்சுரா நகரின் தீயணைப்புத் துறைத் தலைவர் மார்க் லோரென்சென்.

அடைக்கல மையங்கள்

வீடுகளில் இருந்து வெளியேறுகிற மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான மையங்கள் பள்ளிகளிலும் கண்காட்சி மைதானங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

லாஸ் ஏஞ்சலீசுக்கு 80 கி.மீ. வடக்கில் சான்டா பவுலாவில் உள்ள தாமஸ் அக்கினாஸ் கல்லூரி அருகே தீ மூண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றினால் தீ வேகமாகப் பரவியது. அக்கினாஸ் கல்லூரியில் இருந்து மாணவர்கள், ஊழியர்கள் உள்பட 350 பேர் வெளியேற்றப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் காட்டுத் தீயால் கலிஃபோர்னியா மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியாவின் வைன் பகுதியில் கடந்த அக்டோபரில் மூண்ட கடும் காட்டுத் தீ நகருக்குள் பரவியபோது 40 பேர் கொல்லப்பட்டனர், 10 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்தன. -BBC_Tamil