மகாதிர் ஆட்சியில் குறைகூறும் உரிமை இல்லை- கேஜே

டாக்டர்   மகாதிர்   முகம்மட்டுக்கு   எதிராக   முழுமூச்சான   போரைத்  தொடங்கியுள்ள    அம்னோவும்  பிஎன்னும்   அவர்  கடந்த   காலத்தில்   செய்தவற்றைச்  சுட்டிக்காட்டி   அவரைச்   சாடி   வருவதைக்   கண்டு   மகாதிர்  பிரதமராக   இருந்தபோது   ஏன்  அவற்றை   எடுத்துரைக்கவில்லை   என்று  விமர்சகர்கள்    கேள்வி   எழுப்புகிறார்கள்.

இதற்கு   அம்னோ  இளைஞர்      தலைவர்  கைரி  ஜமாலுடின் (கேஜே)  பதில்  அளித்துள்ளார்.

“சிலர்  கேட்கிறார்கள்   முன்பு  ஏன்  வாயை  மூடிக்கொண்டிருந்தீர்கள்,   ஏன்  எதுவும்  சொல்லவில்லை   என்று.

“இதற்குப்  பதிலளிப்பது   எளிது. கடந்த   காலத்தில்   கட்சிக்கு   உள்ளேயோ   வெளியிலோ  பேச்சுரிமை  இல்லை.

“செய்தித்தாள்கள்   குறை  சொன்னால்  மூடப்படும்.   குறைகூறும்   அரசியல்வாதிகள்  சிறையில்   போடப்படுவார்கள்”,  என்று  கைரி   கூறினார்.

புத்ரா  உலக  வணிக  மையத்தில்       அம்னோ   பேரவையில்  இன்று  கைரி   பேசினார்.

“கட்சியிலும்  அரசாங்கத்திலும்     நாட்டிலும்   பயம்   என்ற  கலாச்சாரம்  நிரம்பியிருந்தது.

“(அவர்)  இரும்புக்கரம்   கொண்டு   ஆட்சி   புரிந்தார்.  இப்போது  என்னவென்றால்  குற்றமே   செய்யாதவர்போலவும்    நாங்கள்தான்   கொடிய  சார்வாதிகாரிகள்போலவும்   பேசுகிறார்”,  என  மகாதிரைச்   சாடினார்  கைரி.