பேங்க் நெகாரா போரெக்ஸ் இழப்பைத் தீர்க்க போலீஸ் இரவும் பகலும் உழைக்கிறதாம்

 

 

பேங்க் நெகாராவுக்கு அந்நியச் செலவாணி சந்தையில் ஏற்பட்ட இழப்பைக் கண்டுபிடித்து தீர்ப்பதற்கு போலீசார் இரவும் பகலும் உழைத்து வருகிறார்கள் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகம்மட் பூஸி ஹருண் இன்று கூறினார்.

மிக விரைவில் இந்த வழக்கைத் தீர்ப்பதற்கு மிகத் தீவிரமான புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் இன்று மதியம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

போரெக்ஸ் ஊழல் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) அறிக்கை நவம்பர் 30 வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புக்கிட் அமான் அந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு பணிப்படையை புக்கிட் அமான் வாணிக குற்ற விசாரணை இலாகாவின் இயக்குனர் அமர் சிங்கின் தலைமையில் அமைத்துள்ளது.

அந்த ஆர்சிஐ அறிக்கை 524 பக்கங்களைக் கொண்டுள்ளது. ஆகவே, அது நேரம் பிடிக்கும், ஏனென்றால் அதில் குறிப்பிட்டுள்ள நபர்களை நாங்கள் அடையாளம் காணவேண்டியுள்ளது. என்று ஐஜிபி கூறினார்.

முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, இதற்கு உடனடியாகப் பதில் கூற முடியாது என்றாரவர்.