பழனிவேலு அரசியலில் ஓர் அப்பாவி!

‘ஞாயிறு’ நக்கீரன் – காலம் என்னும் நல்லாள் தங்கத் தாம்பூலத்தில் வைத்துத் தந்த, தங்க – வைர அணிமணிகளைப் போன்ற பொன்னான வாய்ப்பை புறந்தள்ளிவிட்டதுடன் அன்றி, கண்களைத் திறந்து கொண்டே பாழும் கிணற்றில் விழுந்த  நிலைதான் ம.இ.கா.வின் எட்டாவது தேசியத் தலைவராக விளங்கிய கோ.பழனிவேலுவிற்கும் நிலைத்துவிட்டது!.

நமக்குப் பின் அன்வார் அம்னோவின் தலைவராக வந்தால் நமக்கு எதிராக உறுதியாக காய் நகர்த்துவார் என்று பயந்து பயந்து அப்துல்லா படாவியைக் கொண்டு வந்த மகாதீர், பின்னர் மனம் நொந்து, அவரை நீக்கிவிட்டு நஜிப்பைக் கொண்டு வந்தார். இப்பொழுது நஜிப்பையும் எதிர்கொண்டு மல்லுக்கு நிற்கிறார்.

பதவியை விட்டுப் போகும் தலைவர்கள் அத்தனைபேரும், தங்களுக்குப்பின் அடுத்துவரும் தலைவர்கள் தங்களின் இசைவறிந்துதான் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறியாமை; முதலில், இவர்கள் தங்களின் முன்னோரின் காட்டிய வழியிலும் அவர்களின் மனமறிந்தும் நடந்து கொண்டோமா என்று தங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து கொள்வதில்லை; அவ்வாறு எண்ணிப் பார்த்தால், இப்படி நடைமுறைக்கு ஒவ்வாத எண்ணங்களை தத்தம் மனதில் பதிய வைக்கவும் மாட்டார்கள்; பின்னர் மனம் நொந்து சங்கடப்படவும் மாட்டார்கள்.

ஏறக்குறைய மகாதீரைப் போல, சுப்ராவிற்கு தடைபோட்டுவிட்டு சோதிநாதனையும் புறந்தள்ளிவிட்டு, நமக்குக் கீழ் பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வார் என்று எதிர்பார்த்துதான் பழனியை தலையில் வைத்து கொண்டாடாத குறையாக உச்சி மோந்து ஆரத்தழுவி துணைத் தலைவராக ஆக்கினார் சாமிவேலு. அப்படியே தலைவராகவும் உருவாக்கி வைத்துவிட்டு, தனக்கு கட்சியில் ஒரு பாதுகாப்பான சுழலை ஏற்படுத்திவிட்டுத்தான்  நகர்ந்தார் சாமிவேலு.

தேசிய முன்னணியின் பெருங்கட்சிகளான அம்னோவின் தலைவர் மகாதீர், மசீச-வின் தலைவர் லிங் லியோங்  சிக் ஆகியோர் துன் பதவியை வாங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொண்ட நிலையில் இந்த சாமிவேலு மட்டும் ம.இ.கா. தலைவர் பதவியில் இருந்து ஒதுங்க மாட்டேன் என்கிறாரே, சுப்ராவாலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று தேசிய முன்னணியின் தலைமை கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க, அதற்கேற்ப சாமிவேலுவும் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றாண்டு தொடங்கிய பின்னும் தேர்தல்களில் 100 விழுக்காட்டு வெற்றியைப் பதிவு செய்து அசத்திக் கொண்டிருந்ததால் எவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பன்னிரண்டாவது பொதுத் தேர்தல் இதற்கெல்லாம் ஒரு முடிவை எட்டியது.

ஒருவழியாக, 2008 மார்ச் 8-ஆம் நாள் சாமிவேலுவின் மமதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது. அவரின் அரசியல் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள், அந்த 2008 மார்ச் 8, சனிக்கிழமைதான்; எந்த மார்ச் 8-ஆம் நாள் தமக்கு  அதிர்ஷ்டமான நாள் என்று கருதி அந்த நாளில் தன்னுடைய பிறந்த நாளை காலமெல்லாம் கோலாகலமாகக் கொண்டாடி வந்தாரோ, அதே மார்ச் 8-இல்தான் (2008-ஆம் ஆண்டு) நாட்டின் பன்னிரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்று, முடிவு அறிவிக்கப்பட்டபோது, சுங்கை சிப்புட்டில் ஏற்பட்ட அரசியல் ஆழிப் பேரலை சாமிவேலுவை சுருட்டிக் கொண்டு போனது.

அந்த நேரத்தில் ஹிண்ட்ராஃப் எழுச்சியினால் தேசிய அளவில் அரசியல் மறுமலர்ச்சி துளிர் விட்டதை அனைத்து அரசியல் தலைவர்களும் அவதானித்துவிட்டதுடன் சற்று எச்சரிக்கை அடைந்த நிலையில், சாமிவேலு மட்டும் ஹிண்ட்ராஃபா? அப்படி என்றால்?? என்ற தோரணையில் நடந்து கொண்டார்.

இந்திய சமுதாயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை; அதனால், ஹிண்ட்ராஃப்  சொல்வதெல்லாம் புரட்டுத்தனம் என்பதைப் போல நடந்து கொண்டார்; செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் தொடர்ந்து அப்படியேத்தான் பதில் அளித்து வந்தார். சுங்கை சிப்புட் லோக நாதன் ம.இ.கா. தொகுதித் தலைவராக வர முடியாமல் சாமிவேலு செய்தது போன்ற காரியமெல்லாம் படை திரண்டு அவருக்கு எதிராக போர் முரசம் கொட்டியதையும் ஜெயக்குமாருக்கு ஆதரவு பெருகி இருந்ததையும் சாமிவேலுவால் அவதானிக்க முடியவில்லை.

அந்தத் தேர்தலில் இன்னும் ஐந்நூறு வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருந்தால், அவர்தான் அப்போது வெற்றி வீரர்; தேசிய அரசிய வரலாற்றில் பெருஞ்சாதனையாளராகவும் வலம் வந்திருப்பார். என்ன செய்வது? அதீத நம்பிக்கையாலும் அசட்டுத்தனத்தாலும் அலட்சியப் போக்காலும் சுங்கை சிப்புட்டில் மண்டியிட்டு மண்ணைக் கவ்விய பிறகுதான் சாமிவேலுவால் நிதானிக்க முடிந்தது.

இதுதான் சாக்கென்று அவரை ம.இ.கா. தலைமைப் பொறுப்பில் இருந்து விலகும்படி தேசிய முன்னணி நெருக்குதல் கொடுக்க ஆரம்பிக்கவும் வேறு வழியின்றி அரை மனதுடன் சம்மதித்தார். ஆனாலும், தயக்கம் காட்டி தயங்கி நின்ற வரை கட்டமைப்பு தூதர் பதவியைக் காட்டி, அழுது அடம் பிடிக்கிற பிள்ளையின் கையில் பொம்மையைக் கொடுத்து  சமாதானப் படுத்துவதைப் போல சாமிவேலுவை சமாதானப் படுத்தி ஒரு வழியாக தலைவர் பதவியில் இருந்து இறங்கச் செய்தனர்.

கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகுவது சாமிவேலுவிற்கு ஒரு பொருட்டல்ல; தனக்குப் பின் தப்பித் தவறியேனும் எஸ்.சுப்ரா வந்துவிடக் கூடாதே என்பதுதான் அவருக்கு பெருங்கவலை. அதனால்தான், தன்னிடம் செயலாளராக வந்த பழனிவேலுவை, பின் கட்சியிலும் வளரவைத்து தேர்தலிலும் நிற்க வைத்து துணை அமைச்சராகவும் உயர் வைத்து, கட்சி உதவித் தலைவராகவும் உருவாக்கி, கடைசியில் துணைத் தலைவர் பொறுப்பிலும் அமர வைத்த பின்னர்தான், ‘சுப்ரா ஒழிந்தார் ஒரு வழியாக’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சாமிவேலு!.

இதற்கிடையே, தேசிய முன்னணி தலைமை கொடுத்த நெருக்கடியை தாங்க முடியாத சாமிவேலு, கட்சியை விட்டு போக வேண்டிய நிலை வந்தபோது, அதே பழனியை இடைக்காலத் தலைவராக ஆக்கி வைத்துவிட்டுத்தான் நகர்ந்தார்.

அப்படி இப்படியென்று பழனியின் கைக்குள் கட்சி முழுமையும் வந்துவிட்டது. ம.இ.கா.-விற்கு இரு முழு அமைச்சர்கள் என்ற நிலையை உருவாக்கி, சாமிவேலுவால் ஆகாததைக் கூட பழனிவேலு சாதித்துவிட்டார் என்று சமுதாயம் பெருமை கொள்ளும் அளவிற்கு சூழ்நிலையும்  தோதாக அமைந்தது பழனிக்கு!

இடைக்காலத் தலைவராக வந்தவர், இடைக்காலத் தலைவராகவேத் தொடரப் பார்த்தார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சலசலப்பு எழுந்தபோது, கட்சித் தேர்தலை நடத்த முன் வந்த பழனி, 2013 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் என்னை எதிர்த்து யாரும் போட்டியிட வேண்டாம்; இந்த ஒரு தவணையுடன் சென்று விடுகிறேன் என்றெல்லாம் மன்றாடி ஒரு வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியத் தலைவராக உலா வந்தார் பழனி.

தொடந்து அந்த ஆண்டில் நவம்பர் திங்கள் 30-ஆம் நாள் மலாக்கா வரலாற்று நகரில் நடைபெற்ற தேசியப் பேராளர் மாநாட்டில்  நடைபெற்ற உதவித் தலைவர்  தேர்தலும் மத்திய செயலவைத் தேர்தலும் முறையாக நடைபெறவில்லை என்று சலசலப்பும் கொந்தளிப்பும் கட்சி மட்டத்தையும் தாண்டி அரசாங்க அளவில் எதிரொலிக்க ஆரம்பித்தது.

இதன் தொடர்பில் புகாரைப் பெற்ற சங்கப் பதிவகம் ம.இ.கா. தேசிய உதவித் தலைவர்களுக்கும் மத்திய செயலவைக்கும் தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டது. அதை நடத்திவிட்டு தன்போக்கிற்கு போவதை விட்டுவிட்டு சோதி நாதன், பாலகிருஷ்ணன், சிவ சுப்பிரமணியன், ஏ.கே.இராமலிங்கம், ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம், சிகாம்புட் இராஜு, காஜாங் ஆனந்தன்போன்றோரின் பேச்சையும் பொருத்தமற்ற ஆலோசனையயையும்  கேட்டுக் எடுப்பார்க் கைப் பிள்ளையாக மாறினார் பழனி; அத்துடன் குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்கும் செவி சாய்த்து, சொந்தமாக முடிவெடுக்கும் திராணியற்று விளங்கிய பழனி, தான் ஒரு பொறுப்புள்ள தலைவர், இயற்கை வள, சுற்றுச்சுழல் துறை அமைச்சர் என்பதை யெல்லாம் மறந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமர், அம்னோ பொதுச் செயலரும் கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆகியோரிடம் கூட ம.இ.கா. ஒற்றுமைக் குறித்த பேச்சுக்கு ஒப்புதல் தந்துவிட்டு பின்னர் மாயமானவர் பழனி என்றால் பார்த்துக் கொள்ளலாம் இவரின் நாணயத்தையும் சொல் நயத்தையும்.

பழனித் தரப்பில் மிகவும் துடிப்புடனும் பிடிவாதப் போக்குடனும் நடந்து நடந்து கொண்டவர்களில் சோதிநாதன், பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன், இராமலிங்கம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர். இதன் தொடர்பில் நீதிமன்ற படிக்கட்டுவரை சென்று போராடிய நிலையில் இன்று (டிசம்பர் 5) எல்லாம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இன்றைய தீர்ப்பு டாக்டர் சுப்ராவின் கரங்களை மேலும் வலுப்படுத்திவிட்டது.  பழனித் தரப்பில் இருந்து வருடக் கணக்கில் சலசலப்பை ஏற்படுத்திய அனைவரும் இன்று அரசியல் பயணத்தைத் தொலைத்துவிட்டனர்.

இவர்களில் தேசிய உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோதிநாதன், பாலகிருஷ்ணன், தொகுதித் தலைவர்களாக இருந்த இராமலிங்கம் போன்றோர், தேசிய தகவல் பிரிவுத் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்த சுவசுப்பிரமணியன் போன்றவர்களெல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதில் இன்னும் கொடுமையானது தேவையில்லாமல் அமைச்சர் பதவியையும் ம.இ.கா. தேசியத் தலைவர் பதவியையும் இழந்து மலேசிய அரசியலில் இருந்தும் இந்திய சமூகத்திடம் இருந்தும் ஒதுங்கி இருக்க வேண்டிய நிலையை பழனிவேலு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டதுதான் மிச்சமும் மீதியும்!! மொத்தத்தில் சாமிவேலுவிடம் இவர் அரசியல் பாடம் கற்றவர் என்பதற்கு பொருளே இல்லாமல் போய்விட்டது.