பதவி மோகம்  ஒரு  நோயா?

-கி. சீலதாஸ், டிசம்பர் 12, 2017.   இறந்த  வெள்ளையனைத்தான்  நம்ப  முடியும்  என்று  சொன்னவர்  சிம்பாப்வே  நாட்டின்  முன்னாள்  அதிபர்  ரோபர்ட்  கேப்ரியல்  முகாபே.  முப்பத்தேழு  ஆண்டுகள்  சிம்பாப்வே  நாட்டை  தம்  சர்வாதிகார  சூட்சமத்தால்  ஆண்டவர்,  ஆட்டிப்படைத்தவர்.  தொன்ணூற்று  மூன்று  வயதாகிவிட்டபோதிலும்  தாம்  வகித்த  அதிபர்  பதவியை  விட்டுக்  கொடுக்க  மறுத்தவர்.  பதவிமீது  தமக்கு  இருந்த  ஆசையை நீண்ட  காலத்திற்கு   தக்கவைத்துக்கொள்ளும்  நோக்கத்தில்  துணை  அதிபருக்குக்  கல்தா  கொடுத்தார்.  தமது  மனைவியை  தமக்குப்  பிறகு  அதிபராக்கவும்  தீர்மானித்தார்.  குடும்ப  அரசியலுக்கு  வழி  வகுத்தார்.

இருபதாம்  நூற்றாண்டு,  ஜனநாயகத்திற்கு  முக்கியத்துவம்  கொடுத்த  நூற்றாண்டாகக்  கருதப்படுகிறது;  எனினும்  ஜனநாயக  நாடுகளிலும்  அமைப்புகளிலும்  (அரசியல்  இயக்கங்களில்)  ஜனநாயகம்  காக்கப்படுகிறதா  என்ற  கேள்வி  எழுந்துகொண்டே  இருக்கிறது.

இந்தியாவை  எடுத்துக்  கொண்டால்  காஷ்மீர்  பண்டிதர்  நேருவின்  குடும்ப  அரசியல்  நீடித்துக்கொண்டே  இருக்கிறது.  1964ஆம்  ஆண்டு  நேரு  காலமானார்.  அவர்  மகள்  இந்திரா  காந்தி  1966ஆம்  ஆண்டு  இந்தியாவின்  முதல்  பெண்  பிரதமர்  ஆனார்.  அவர்  கொல்லப்பட்டபின்,  மகன்  ரஜீவ்  காந்தி  பிரதமர்  ஆனார்.  அவருடைய  இறப்புக்குப்  பிறகு  அவர்  மனைவி  சோனியா  காந்தியைப்  பிரதமராக்க  முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன.  அவர்  ஏற்றுக்கொள்ளவில்லை.  ஆனால்  காங்கிரஸ்  கட்சியின்  தலையெழுத்தை  நிர்ணயிக்கும்  சக்தியை  அவர்  கொண்டிருப்பதற்கான  அறிகுறிகள்  தென்படுகின்றன.

தமிழ்  நாட்டில்  மு.கருணாநிதி  குடும்ப  அரசியல்  பலமாக  நடைபோடுகிறது.  நம்  அண்டை நாடான  சிங்கப்பூரில்  முன்னாள்  பிரதமர்  லீ  குவான்  யூவின்  மகன்  பிரதமராக  இருக்கிறார்..  லீ குவான்  யூ  சுமார்  முப்பத்திரண்டு  ஆண்டுகள்  பிரதமாராக  இருந்தார்.  துன்  மகாதீர்  முகம்மது  இருபத்திரண்டு  ஆண்டுகளாக  மலேசியாவின்  பிரதமராக  இருந்தார்.  அவரின்  வாரிசுகள்  அரசியலில்  இருப்பதை  மறுப்பதற்கு  இல்லை.  இன்றைய  மலேசிய  பிரமரின்  தந்தை  இந்நாட்டின்  இரண்டாம்  பிரதமராக  இருந்தவர்.  நஜிப்பின்  நெருங்கிய  உறவினர்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  ஹூசேன்.  ஹூசேன்  ஓன்  இந்நாட்டின்  மூன்றாம்  பிரதமராக  சேவையாற்றியவர்.  குடும்ப  அரசியல்  எளிதில்  பின்வாங்கிவிடும்  என்று  சொல்ல  இயலாது.  இந்தக்  கட்டுரை  எழுதி  முடிக்கும்  தருவாயில்  இந்தியாவின்  காங்கிரஸ்  கட்சி  நேருவின்  பேரன்  ராகுல்  காந்தியைத்  தனது  தலைவராகத்  தேர்ந்தெடுக்கத்  தயாராகி  விட்டது.  ராகுல்  காந்தியின்  தலைமையில்    பொதுத்  தேர்தலில்  பெரும்பான்மைப்  பெற்று  ஆட்சி  அமைத்தால்  அவர்தான்  பிரதமர்  என்று  உறுதியாகிவிட்டது  என்று  சொல்லப்படுகிறது.  இது  இந்தியாவின்  எதிர்காலத்திற்குச்  சாதகமானது  என  கருத  இயலாது  என்றப்  பேச்சும்  பரவுகிறது.

ஒரே  கட்சியை  நம்புவது,  குறிப்பிட்ட  ஒரு  தலைவருக்கு  விசுவாசமாக  இருப்பது  விசித்திரமான  கலாச்சாரமாகும்.  பதவியை  விட்டுக்கொடுக்க  விரும்பாத  தலைவர்  மக்களின்  ஆதரவு  இருக்கிறது  என்ற  நம்பிக்கையை  மக்கள்  மனத்தில்  பதித்து  விடுவதில்  மிகுந்த  கவனம்  காட்டுவதும்,  அந்தத்  தலைவர்  இல்லாவிட்டால்  அவர்கள்  சார்ந்திருக்கும்  இயக்கம்  அழிந்துவிடும்  என்ற  எண்ணத்தை  வலுப்படுத்துவதும்  ஒருவகை  கலாச்சாரமாகும்.  சுருக்கமாகச்  சொல்ல  வேண்டுமானால்  ஒரே  தலைவரை  நம்பி “உன்னைவிட்டால்  எனக்கு  வேறு  கதி  இல்லை”  என்ற  மனப்பான்மை  பிச்சைக்காரப்  புத்தி  என்றால்  மிகையாகாது.

அடுத்து,  பெரும்பான்மையான  ஆசிய  –  ஆப்பிரிக்க  நாடுகளில்  பிரதமர்,  அதிபர்  பதவிகளுக்கு  காலவரையறை  விதிக்கவில்லை.  அதுபோலவே  அரசியல்  கட்சிகளும்  பொது  இயக்கங்களும்  வயது  கட்டுப்பாடு  கொண்டிருக்கவில்லை.

அமெரிக்காவின்  அதிபர்  இரண்டு  தவணை  அதிபராக  தேர்ந்தெடுக்கப்படலாம்.  ஜப்பான்  பிரதமர்களில்  ஒரு  தவணை  நீடிப்பது  ஆச்சரியம்.  ஆகமொத்தத்தில்,  இந்தப்  பதவிகளின்  மோகம்  எப்படி  எல்லாம்  செயல்படுகிறது  என்பதை  சிந்தித்துப்  பார்க்கும்போது,  அது  பண  ஆசை,  பெண்  ஆசை  போன்றவற்றோடு  ஒப்பிட்டுப்  பார்க்கத்  தூண்டுகிறது.   பண  ஆசைப்பிடித்தவர்  மேலும்  பணத்தைச்  சேர்ப்பத்தில்தான்  கவனம்.  பெண்  ஆசைக்காரன்  பெண்  தரும்  சுகத்தில்   லயித்துக்  கிடப்பான்.   இப்படிப்பட்டவர்களிடம்  நாட்டுப்  பொறுப்பை  கொடுத்தால்  என்னவாகும்!

நீண்டகால  அரசியல்  வாழ்க்கை,  அதிலும்  தலைமைத்துவப்  பொறுப்பு  வகித்தவர்கள்  அவர்களை  விட்டால்  வேறு  கதி  இல்லை  என்ற  இறுமாப்புதான்  காரணம்.  அதே  சமயத்தில்  குடும்ப  அரசியலை  ஆதரிக்கும்  மக்கள்  மற்றத்  திறமையானவர்கள்  இருப்பதைக்  கண்டு  கொள்ள  மறுக்கும்  குணம்.  இதை  ஆழமாகச்  சிந்துக்கும்போது  மக்கள்  தன்னம்பிக்கை  அற்றவர்கள்  என்று  சுயநலமிக்கத்  தலைவர்கள்  தீர்மானித்து  நடக்கின்றனர்.  மக்களும்  அதற்கு  ஒத்து  தாளம்  போடுவது  சகஜமாகிவிட்டது.  மக்கள்  சிந்திக்க  வேண்டும்  என்பதை  மறக்கக்கூடாது  என்பதை  நினைவுறுத்தும்போது   உயர்  பதவியில்  இருக்கும்  தலைவர்கள்  மக்கள்  சிந்திக்கக்  கூடாது  என்பதில்  மிகுந்த  கவனத்துடன்  செயல்படுகின்றனர்   என்பதையும்   மனத்தில்  கொள்ளவேண்டும்.

இந்தப்  பதவி  ஆசையானது,  நீண்ட  காலம்  பதவியில்  இருக்கவேண்டும்  என்கின்ற  ஆசை  ஒரு  நோய்  என்ற  கருத்தும்  பரவி  வருகிறது.  அது  ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  பணத்தை  சம்பாதித்தவன்  அதை  இழந்ததும்  அல்லது  இன்னும்  சம்பாதிக்க  முடியவில்லை  என்ற  ஏக்கத்தில்  வாழ்கிறான்  பண  ஆசைக்காரன்.  புதுப்  பெண்  கிடைப்பாளா   என்று  ஏங்குவான்.  பதவி  மோகம்  பிடித்தவன்  இருக்கின்ற   பதவியை  விட்டுக்கொடுக்கமாட்டான்.  அதைத்  தக்கவைத்துக் கொள்ள  செயல்படுவான்.  நேரடியாக  இல்லாவிட்டாலும்  தம்  குடும்பக்  கட்டுப்பாட்டில்  இருக்க  வேண்டும்  என்று  நினைத்துச்  செயல்படுவார்கள்.  அந்த  வகையில்  சேர்ந்தவர்தான்  சிம்பாப்வேயின்  முன்னாள்  அதிபர்  முகாபேயின்  நிலை. அப்படிப்பட்ட  வழக்கம்  ஜனநாயகக்  கோட்பாட்டிற்கு  உகந்தது  அல்ல