அரசாங்கம் : பள்ளி பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்யுங்கள்

அடுத்த ஆண்டு பள்ளி அமர்வுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரையை ஆய்வு செய்யுமாறு, மலேசியப் பள்ளிப் பேருந்து தொழில் முனைவோர் சங்கத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

துணையமைச்சர் டத்தோ பி.கமலநாதன், பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் முன், பெற்றோர், ஆசிரியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

இன்னும் ஆழமான விவாதம் (இரு தரப்பினர்களுக்கும் இடையே), சுமூகமான தீர்வைக் கொடுக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்,” என்று, நேற்று பேராங், காதோயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில், பாலர் பள்ளி அடிக்கல் நாட்டு விழாவின் போது, செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மலேசியப் பள்ளிப் பேருந்து தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் முகமட் ரோஃபிக் முகமட் யூசோப், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் உதிரி செலவுகள் காரணமாக அடுத்த ஆண்டு பள்ளி பேருந்து கட்டணத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதை மறுக்க இயலாது என்று அண்மையில் கூறியிருந்தார்.

நகர்ப்புறங்களுக்கு ரிம 20, கிராமப்புறங்களுக்கு ரிம 10 ஆக கட்டணம் அதிகரிக்கப்படலாம் என ரோஃபிக் கூறினார்.