மகாதிர் பிரதமர் ஆவதற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை; வேறு வழியில்லை என்கிற நிலையில் அப்படி நடக்கலாம் என்றார்

2003வரை  இருபதாண்டுகள்    பிரதமராக   இருந்த    டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  மீண்டும்  பிரதமராகும்   ஆசையெல்லாம்  கிடையாது.

“அப்பதவிக்குப்  பொருத்தமாக   வேறு   ஒருவர்   கிடைக்கவில்லை    என்ற   நிலை   உருவானால்  ஒரு  வேளை   இந்த  92வயது  மனிதன்   பிரதமர்  வேட்பாளராகலாம்”,  என்றாரவர்.

பக்கத்தான்    ஹராபான்     தலைவரான    மகாதிர்,   இரண்டு   வாரங்களுக்கு  முன்பு   எதிரணியினர்   தேர்தலுக்கு  முந்திய   ஆலோசனைக்  கலப்புக்  கூட்டம்  நடத்தியபோது    பிரதமர்   விவகாரம்   குறித்து     எந்த  முடிவும்  செய்யவில்லை   என்றார்.

“என்னை    அவர்கள்  நியமிக்கவில்லை.  அதன் தொடர்பில்   எவ்வித   முடிவும்   எடுக்கப்படவில்லை”,  என  இன்று   பிற்பகல்    பெட்டாலிங்   ஜெயாவில்  பிகேஆர்   தலைமையகத்தில்    கூறினார்.

டிசம்பர்   1-2இல்   நடந்த   அக்கூட்டத்துக்குப்  பின்    வெளிவந்த    செய்திகள்   மகாதிரைப்  பிரதமராகவும்    பிகேஆர்   தலைவர்   டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயிலைத்   துணைப்  பிரதமராகவும்   நியமிக்க   முடிவு   செய்யப்பட்டிருப்பதாக   தெரிவித்தன.