அவதூறு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடாது: குவான் எங் காட்டம்

பினாங்கு    முதலமைச்சர்    லிம்  குவான்    எங்,  பிரதமருக்கு   எதிரான   அவதூறுகளையும்    தமக்கும்    சிலாங்கூர்     மந்திரி  புசார்,  முன்னாள்  பிரதமர்   ஆகியோருக்கும்   எதிராகக்  கூறப்படும்    அவதூறுகளையும்    வேறுபடுத்திப்  பார்ப்பதைச்   சாடினார்.

“பிரதமரை   அவமதிப்பது   ஒரு   குற்றம்   எனில்,   பினாங்கு   முதலமைச்சர்    தாக்கப்படுவார்    என்று  மிரட்டுவதையும்    சிலாங்கூர்   மந்திரி  புசாரையும்   ஒரு  முன்னாள்  பிரதமரையும்   இழித்துரைப்பதை    என்னவென்பது?.

“என்னைப்  பழித்துரைத்தது   மட்டுமல்ல,  தாக்கப்படுவேன்    என்றும்   மிரட்டியுமிருக்கிறார்கள்.  போலீசில்   புகார்   செய்தேன். இதுவரை   எந்த   நடவடிக்கையும்   இல்லை”,  என்று   லிம்   இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

தம்  மகனுக்கு   ஆறு   வயதாக   இருந்தபோது    அவன்   இன்னொரு  மாணவரைப்  பாலியல்   தொல்லைகளுக்கு   உள்ளாக்கியதாக  “பொல்லாத  பொய்களைக்  கூறி  அசிங்கப்படுத்தினார்கள்”  என்றும்  லிம்   கூறினார்.  அக்குற்றத்தைப்   புரிந்தவர்களுக்கு  எதிராக   சட்டப்படி    நடவடிக்கை   எடுக்கப்படவில்லை.

பிரதமரோ   சிலாங்கூர்  மந்திரி  புசாரோ   பினாங்கு   முதலமைச்சரோ   பழிப்புரைகளுக்கு   அப்பாற்பட்டவர்கள்   என்பதைத்   தாம்  ஒப்புக்கொள்ளவில்லை   என  லிம்  குறிப்பிட்டார்.

“பழிப்புரைகளில்   உண்மையில்லை    என்றால்   அவதூறு   வழக்குகள்   தொடர்ந்து   இழப்பீடு   கேட்கலாம்”,  என்றாரவர்.

பிரதமரைப்  பழித்துரைக்கக்கூடாது    என்று   அவரை    ஆட்சியாளர்களுக்குச்  சமமாக   வைக்கக்கூடாது.

“தேர்தல்  களத்தில்  ஆடுகளம்  சமமாக  இருக்க   வேண்டும்.   அங்கு  பிரதமரும்  மற்ற  வேட்பாளர்களைப்  போல்   ஒரு  வேட்பாளர்  மட்டுமே”,  என்று  லிம்  கூறினார்.

அந்த   வகையில்,   பிரதமரைப்  பழித்துரைத்ததாகக்  கூறப்படும்   த  மலேசியன்  இன்சைட்(எம்டிஐ)மீது    தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்   சாலே  சைட்   கெருவாக்   விசாரணை  மேற்கொள்வதுகூட   தவறுதான்.   அவர்   தம்   அதிகாரத்தைத்   தவறாகப்   பயன்படுத்திக்  கொண்டிருப்பதாக   லிம்   நினைக்கிறார்.

“பிஎன் கட்டுப்பாட்டில்   உள்ள     நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்,   பெரித்தா  ஹரியான்,   த   ஸ்டார்,  உத்துசான்   மலேசியா    ஆகியவை   என்னைப்  பற்றிப்  பொய்யான    செய்திகளை  வெளியிட்டு   அவை   தொடர்பான   வழக்குகளில்    இழப்பீடு  கொடுத்தும்   மன்னிப்பு  கேட்டும்    குறிப்பிட்ட    செய்திகளை  மீட்டுக்கொண்டும்  இருக்கின்றன.  அப்போதெல்லாம்   அவற்றுக்கு   எதிராக   எந்த   விசாரணையும்   மேற்கொள்ளப்படாதது  ஏன்?

“மிச்சம்மீதியுள்ள     நம்பகாத்தன்மையைக்  காப்பாற்றிகொள்ள     இப்படி  இரட்டை   நியாயங்கள்  கடைப்பிடிப்பதை   நிறுத்த    வேண்டும்,  தவறினால்      மலேசியாகினி,  ஃபிரி   மலேசியா  டுடே,   மலேசியன்   இன்சைட்   ஆகியவற்றின்   வாசிப்பாளர்   எண்ணிக்கை  கூடி   பிஎன் -கட்டுப்பாட்டில்   உள்ள   ஊடகங்களின்   விற்பனை  படுவீழ்ச்சி  காணும்”, என  லிம்   கூறினார்.