சாமிவேலு : மைக்கா ஹோல்டிங்ஸ் ‘முடிந்துபோன’ பிரச்சனை

இந்திய சமூகத்திற்குப் பெருத்த இழப்பை ஏற்படுத்திய மைக்கா ஹோல்டிங்சை விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ.) அமைக்க வேண்டும் என்ற, பிகேஆர் இளைஞர் பிரிவின் அழைப்பை, முன்னாள் ம.இ.கா. தலைவர் ச.சாமிவேலு தள்ளுபடி செய்ததோடு; அது ‘முடிந்து போன’ பிரச்சனை என்றார்.

ஃப்.எம்.தி– இடம் பேசிய அவர், மைக்கா ஹோல்டிங்ஸைப் பற்றி கூற, கருத்து எதுவும் இல்லை என்றார்.

“நான் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

“அவர்கள் (பிகேஆர் இளைஞர்கள்) எதுவும் செய்யவில்லை. அவர்கள் எல்லோரும் ‘சாப்பிடுவதற்கு’ ஏதாவது இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.

மைக்கா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டை விசாரிக்க, ஆர்.சி.ஐ. அமைக்க வேண்டும் என புத்ரா ஜெயாவை வலியுறுத்திய, பிகேஆர் இளைஞர் பிரிவின் அழைப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

பினாங்கு பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் எ.குமரேசன் கூறுகையில், 66,400 பங்குதாரர்களிடம் இருந்து, ரிம100 மில்லியனுக்கும் அதிகமான பணம் திரட்டப்பட்டது, அவர்களில் பெரும்பாலோர் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் நபர்கள் என்றார்.

மலேசிய இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, சாமிவேலுவால் 1982-இல் நிறுவப்பட்ட மைக்கா ஹோல்டிங்சால், நல்ல வருமானத்தை வழங்க முடியவில்லை. அதோடு, பலர் இத்திட்டத்தால் திவால் ஆனார்கள் என்றும் குமரேசன் தெரிவித்தார்.

2000-ஆம் ஆண்டில், பங்குதாரர்களின் பணத்தைத் திரும்பச் செலுத்தி, பிரச்சனைகளைத் தீர்க்க, ஜி.ஞானலிங்கத்திற்குச் சொந்தமான ஜி டீம் ரிசோர்சஸ் மைக்கா பங்குகளை ரிம106 மில்லியனுக்குக் கையகப்படுத்தியது.