அரசியலுக்கு வருவது பற்றி டிசம்பர் 31ல் அறிவிப்பேன்: ரஜினிகாந்த்

வரும் டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வருவது பற்றி அறிவிக்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ஐந்து மாவட்ட ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலுக்கு வரப்போவதாக அறிவிக்கப்போவதில்லையென்றும் அரசியலுக்கு வருவது பற்றிய தனது முடிவைத்தான் தெரிவிக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தனது ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். கடந்த மே மாதம் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களைச் சந்திப்பது தள்ளிப்போனது.

இந்த நிலையில், மீதமுள்ள மாவட்டங்களின் ரசிகர்களை செவ்வாய்க்கிழமை முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த். முதல் நாளான இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்துவருகிறார்.

டிசம்பர் 27ஆம் தேதியன்று நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களையும் 28ஆம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் மாவட்ட ரசிகர்களையும் 29ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களையும் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மாவட்ட ரசிகர்களையும் ரஜினிகாந்த் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு அடையாள அட்டை வைத்துள்ள ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள்.

புதன்கிழமை காலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் பேசினர்.

அதற்குப் பிறகு பேசிய ரஜினிகாந்த், “காலா படத்தின் படப்பிடிப்பு, மழை, மனம் சரியாக இல்லாத காரணத்தால் மீதமிருக்கும் ரசிகர்களை சந்திப்பது தள்ளிப்போனது” என்று தெரிவித்தார்.

50 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக கதாநாயகனாக மாறினேன்

வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் தன்னை பைரவி பட தயாரிப்பாளர் கலைஞானம் அணுகி, கதாநாயகனாக நடிக்கும்படி கேட்டபோது தான் மிகவும் தயங்கியதாகவும் அதனால், ஒரு படத்திற்கு தான் வாங்கிக்கொண்டிருந்த 25 ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாகக் கேட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் அந்த சம்பளத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த 28-30 ஆண்டுகளாக தனது பிறந்த நாளின்போது வீட்டில் இருப்பதில்லையென்றும் தனியாக இருக்க வேண்டுமென விரும்பியதாகவும் ரஜினி கூறினார். ஆனால், இந்த முறை தன்னுடைய வீட்டின் அருகில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள்கூடியதாவும் அவர்கள் ஏமாற்றமடைந்ததற்கு வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் ரஜினி கூறினார்.

தான் அரசியல் குறித்து என்ன சொல்லப்போகிறேன் என்பது குறித்து மக்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, ஊடகங்களுக்கு பெரும் ஆர்வம் இருப்பதாகவும் தான் ஏற்கனவே போர் வரும்போது அரசியல் குறித்து யோசிக்கலாம் என்று சொல்லியிருந்த நிலையில், இப்போது போர் வந்துவிட்டதா என்றும் ரஜினி கேள்வியெழுப்பினார்.

அப்படியிருக்கும் நிலையில், ஏன் தன்னை இழுக்கிறார்கள் என்று யோசிப்பதாகவும் ரஜினி கூறினார். அரசியலில் இருக்கும் கஷ்ட – நஷ்டங்கள் தெரிந்திருப்பதால்தான் தயங்குவதாகவும் யுத்தத்திற்குச் சென்றால் வெற்றிபெற வேண்டும் என்றும் கூறிய ரஜினி அதற்கு வீரம் மட்டும் போதாது என்றும் வியூகம் தேவை என்றும் தெரிவித்தார்.

இதற்கு அடுத்ததாக, வரும் டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்போவதாக ரஜினி கூறியதும் ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து குறுக்கிட்ட ரஜினி, தான் அரசியலுக்கு வரப்போவதாகத் தெரிவிக்கவில்லையென்றும் அரசியல் குறித்து அறிவிக்கப்போவதாக மட்டுமே கூறியதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஊடகங்களில் வரும் மோசமான செய்திகள் மனதை பாதிக்கும்வகையில் இருப்பதாகவும் அதனை மனதில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் ரசிகர்கள் தங்கள் குடும்பங்களை முதலில் காப்பாற்ற வேண்டுமென்றும் குறிப்பிட்டு ரஜினி தன் பேச்சை முடித்துக்கொண்டார்.

இதற்குப் பிறகு, ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு துவங்கியது. -BBC_Tamil