டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 4-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி

‘ஞாயிறு’ நக்கீரன், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் நான்காவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. இலக்கியப் படைப்பு ஓர் இனத்தின் காலக் கண்ணாடி என்பதாலும் சமூக-பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடு என்பதாலும் கடந்த 2012 முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை இந்த அறவாரியத்தால் நடத்தப்படும் பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியின் தொடர்ச்சியாக இப்பொழுது நான்காவது போட்டி அறிவிக்கப்படுவதாக சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் அறங்காவலரும் கூட்டுறவு சங்க தலைமை இயக்குநருமான டத்தோ பா.சகாதேவன் இதன் தொடர்பில் டிசம்பர் 15, வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்க் கூட்டத்தில் அறிவித்தார்.

தரம் வாய்ந்த இலக்கியப் படைப்புகள் வெளிவர வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் பன்னாட்டுப் பிரிவில் ஒரு வெற்றியாளரும் மலேசிய அளவில் ஒரு வெற்றியாளரும் ஒவ்வொரு போட்டியின்போதும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை நாடுகளில் இருந்த நான்கு நடுவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒரு நடுவரும் என ஐந்து நடுவர்கள் இந்தப் போட்டிக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வருக்கின்றனர். பன்னாட்டுப் பிரிவு வெற்றியாளருக்கும் ஆயிர அமெரிக்க டாலரும் மலேசிய வெற்றியாளருக்கு ஆயிர மலேசிய வெள்ளியும் வழங்கப்படும் இந்தப் போட்டியில் 2012-ஆம் ஆண்டில் ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற படைப்பிற்காக ஈழ எழுத்தாளர் மு.பொன்னம்பலம் ஆயிர டாலரும் விடியல் என்ற நூலிற்காக மலேசியப் படைப்பாளி அ.ரெங்கசாமி ஆயிர வெள்ளியும் பரிசாகப் பெற்றனர்.

2014-ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாவது போட்டியில் பன்னாட்டுப் பிரிவில் ‘மூன்றாம் உலகப் போர்’ என்ற நூலிற்காக தமிழகத்தின் கவிப்பேரரசு வைரமுத்துவும் மலேசியப் பிரிவில் ‘செலாஞ்சார் அம்பாட்’ என்னும் படைப்பிற்காக கோ.புண்ணியவானும் பரிசுகளை வென்றனர். அதைப்போல, கடந்த ஆண்டு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் பன்னாட்டுப் பிரிவு, உள்நாட்டுப் பிரிவு ஆகிய இரண்டிலுமே மலேசியர்கள் வென்றனர். அழகான மௌனம் நூலிற்காக முனுசாமி கன்னியப்பன் ஆயிர டாலரும் காத்திருந்த விடியலுக்காக திருமதி விமலா ரெட்டி ஆயிர வெள்ளியும் பரிசாகப் பெற்றனர்.

தற்பொழுது நடைபெறவுள்ள நான்காவது போட்டியில் 2016, 2017-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட நூல்களை சம்பந்தப்பட்ட படைப்பாளர்கள் போட்டிக்கு அனுப்பலாம் என்று சகாதேவன் அறிவித்தார். நாவல், ஆய்வுப் படைப்பு, வரலாற்று நூல், ஒரே எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு, அதைப்போல ஒரே எழுத்தாளரின் கவிதைத் தொகுப்பு ஆகிய படைப்புகளை இந்தப் போட்டிக்கு அனுப்பலாம்.

ஒரு போட்டியாளர் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒரு நூலை வெளியிடும் பதிப்பகத்தாரும் சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் சார்பில் போட்டிக்கு அனுப்பலாம். ஒரு படைப்பாளர் ஐந்து பிரதிகளை இப்போட்டிக்காக அனுப்ப வேண்டும். இந்தப் போட்டி குறித்த மேல் விவரத்திற்கு 03-22721250 என்ற எண்ணிலும் http://tansrikrsomabookaward.com.my என்னும் அகப் பக்கத்திலும் தொடர் கொள்ளலாம் என்றும் டத்தோ சகாதேவன் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.

இதன் தொடர்பில் செய்தியாளர்கள் தெரிவித்த ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கையில், “தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் மிகுபயனை விளைவிக்கக்கூடிய சிறந்த  இலக்கியப் படைப்புகள் உருவாக வேண்டும் என்பதுதான் இந்த அறவாரியத்தின் தலையாய நோக்கம். அத்துடன், மொழி வளம் செழிக்கும் வண்ணம், இலக்கணக் கூறுகள் தப்பாலும் சிறந்த சொல்லாட்சியுடனும் தமிழிய மரபு நிலைக்கும்படியும் தமிழ் நூல்கள் உலகளாவிய அளவில் இயற்றப்பட வேண்டும். அது, வளரும் தலைமுறையினருக்கு பயன்பட வேண்டும் என்பதும் இந்த அறவாரியத்தின் இலக்காகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அச்சு ஊடகம், மின் ஊடகங்களின் சார்பில் செய்தியாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் டான்ஸ்ரீ க.குமரன், கரு.பன்னீர்செல்வம், தோ.மாணிக்கம், திருமதி பார்வதி, இராம.வடி. பெருமாள் ஆகியோர் அறவாரியத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.