சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?

சீன பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, அந்நாட்டின் புதிய ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை DF-17 (கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் அதிவேக ஏவுகணை) அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

12,000 கி.மீ. தொலைவுவரை தாக்கும் திறன் கொண்ட DF-17, அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் ஒரு மணி நேரத்திற்குள் சென்றடைந்துவிடும்.

வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் பறக்கக்கூடிய இதை தடுப்பது எளிதானதல்ல. பாலிஸ்டிக் ஏவுகணை DF-17 குறித்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘செளத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிகையில் மக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் ஏண்டனி வாங் டாங்கின் கருத்தை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அமெரிக்க ஏவுகணைத் தடுப்பு அமைப்பை செயலிழக்கச் செய்யும் திறன் பெற்றது இந்த பாலிஸ்டிக் ஏவுகணை என்று அவர் நம்புகிறார்.

இதற்கு முன்னர் ‘த டிப்ளமேட்’ பத்திரிகையில் வெளியான செய்தியின்படி சீனா இதுவரை இதுபோன்ற இரண்டு சோதனைகள் செய்துள்ளது.

சீன ராணுவம் கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு மணி நேரத்திற்கு 7680 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடிய ராக்கெட்டுகளை ஏவி பரிசோதித்தது. DF-17 போன்ற ஏவுகணைகளை ஏவுவதற்கு இந்த ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படலாம்.

சீனாவிற்கு சாதனையாக இருக்கும் இந்த ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியாவிற்கு பாதகமானதா? இதுபற்றி பாதுகாப்பு நிபுணர் மற்றும் ‘Society for policy studies’ என்ற அமைப்புடன் இணைந்து பணியாற்றும் பாதுகாப்புத்துறை பகுப்பாய்வாளரான உதய பாஸ்கரின் கண்ணோட்டத்தை தெரிந்துக்கொள்வோம். அவரிடம் உரையாடினார் பிபிசி செய்தியாளர் மானசி தாஸ்.

ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை என்றால் என்ன?

இது, புதுவகையான ஹைபர்சோனிக் கிளைட் ஏவுகணையாகும். கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் அதிவேக ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் க்ரூஸ் ஏவுகணையின் திறன்கள் இணைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.

பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, பூமியின் பரவளைய பாதையில் சென்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்பி வருகிறது.

3000 முதல் 7000 கிலோமீட்டர் தொலைவுவரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை ஹைபர்சோனிக் எச்.ஜி.வி (hypersonic glide vehicle (HGV)) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஏவுகணையின் வரம்பிற்குள் அமெரிக்காவும் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தியாவும் அதன் வரம்பிற்குள் இருக்கும் சாத்தியங்கள் அதிகமே.

ஆனால் இதுவரை சீனா வழங்கிய தகவல்களின்படி, இந்த ஏவுகணை 3,000 கிமீ வரை மட்டுமே பயன்படுத்தக்கூடியது.

ஹைபர்சோனிக் HGV சாதாரண ஏவுகணைகள் போல் அல்லாமல், வளிமண்டலத்தில் தாழ்வான நிலையிலே செல்லக்கூடியது.

இதனால்தான் அதன் தாக்கும் திறன் அதிகரித்து, எதிர்ப்பு ஏவுகணைகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்குகிறது.

உலகத்திற்கே அச்சுறுத்தல் விடுப்பதால் தடை செய்யப்பட வேண்டும்

பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்க, வல்லரசுகள் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளன.

ஆனால் HGVவை தடுப்பது அவற்றின் திறனுக்கும் அப்பாற்பட்டது. ஆனால் தொழில்நுட்பம் முன்னேறி வரும் நிலையில் அசாத்தியமானவை அனைத்தும் சாத்தியமாக்கப்படுகின்றன. வல்லரசுகளும் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும், ஆயுதங்களையும் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்.

தற்போது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே HGV ஏவுகணையை வைத்துள்ளன. இந்த மூன்று நாடுகளுக்குமிடையில் உடன்பாடு இல்லையென்றால் அதன் விளைவு என்னவாகும்?

ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக செயல்படும் HGV ஏவுகணை, அதை புறக்கணிக்கின்றன.

அதாவது, அவர்கள் நிலைத்தன்மையை எதிர்த்து நிற்கிறார்கள். அதனால்தான் கடந்த பனிப்போரின்போது, தொழில்நுட்பத்தை ஏமாற்றும் திறனை தடை செய்ய வேண்டும் என்று வல்லரசு நாடுகள் எச்சரித்தன.

அதன்படி, சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் பாலிஸ்டிக்-எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றில் (Anti-ballistic missile agreement) கையெழுத்திட்டன.

இதுவரை அதுகுறித்து பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், இப்போது சீனாவிடம் இந்த புதிய திறன் வந்த பிறகு, அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா – சீனா பதற்றம்

வடகொரியாவின் தொடர்ச்சியான அணுஆயுத சோதனைகளை அடுத்து, ‘தாட்’ (Terminal High-Altitude Area Defense) என்ற சொந்த ஏவுகணை தடுப்பு அமைப்பை தென் கொரியாவில் நிறுவியது அமெரிக்கா. பாலிஸ்டிக் ரக குறுகிய மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் அதன் கடைசிக் கட்டத்தை அடையும்போது, அதை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது அமெரிக்காவின் ‘தாட்’.

எதாவது ஆபத்து நேரிட்டால் வட கொரியாவிற்கு எதிராக அவை பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.

தென் சீனக்கடலில் அத்துமீறி உரிமை கோரும் சீனாவின் மேல் ஏற்கனவே சீற்றத்தில் இருக்கும் அமெரிக்கா, அண்மையில் வட கொரியா மேற்கொண்ட அணுசக்தித் திட்டத்தை நிறுத்துவதற்கு சீனா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது.

சீனாவின் நடவடிக்கைகளால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளிட்ட தேசிய பாதுகாப்பு கொள்கைத்திட்டத்தில் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில், சீனாவின் HGV சோதனை தாக்கம் உடனடியாக இருக்காது. ஆனால் இது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்களை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.

ஆரம்பமான ஆயுதப் போட்டி

ஒருகாலத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே இருப்பதாக நம்பப்பட்ட மேம்பட்ட ஆயுதங்கள் தற்போது தன்வசமும் உள்ளது என்று சீனா வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா சமீபத்தில் கட்டமைத்துள்ள பிரம்மோஸ் ஏவுகணையும் ஹைப்பர்சோனிக் குரூஸ் ரக ஏவுகணை ஆகும்.

சீனாவின் அண்மைய ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, சீனா-அமெரிக்கா-ரஷ்யாவிற்கும் இடையிலான ஆயுதப் போட்டியை ஆரம்பித்து வைத்துவிட்டது.

சீனாவிற்கு அமெரிக்காவை நினைத்து அச்சம் என்றால், அமெரிக்காவோ ரஷ்யாவின் அணுசக்தி வல்லமையை சற்று கவலையுடன் பார்க்கிறது. ஆனால் ரஷ்யாவிற்கோ சீனா ஆயுத ஆதிக்கத்தில் மேலெழும்புவது ஆதங்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், அந்நாடு தனது வியூகங்களை அதற்கேற்றாற்போல் மாற்றத் தயாராகிவிட்டது.

ஆயுதங்கள் பலத்தை மட்டுமே கொடுப்பதில்லை, கூட்டு மதிப்பாக அச்சத்தையும் போட்டியையும் ஏற்படுத்துகின்றன. ஆயுத ஆதிக்கத்தில் இந்த மூன்று நாடுகளின் கவலைகள் சுற்று வட்டத்தில் இல்லை, வித்தியாசமான முக்கோண வடிவத்தில்.

ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கவலைகள்! ஆயுதப்போட்டியில் இந்த மூன்று நாடுகளுக்கும் எந்தவித கருத்தொற்றுமையும் ஏற்படும் என்று தோன்றவில்லை. -BBC_Tamil