ஹிசாமுடின்: பெல்டா ரிம270 மில்லியன் நிலம் மாற்றம் குறித்து ஊகம் செய்தீர்கள்

 

கோலாலம்பூர், ஜாலான் செமராக்கிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பெல்டாவின் நிலத்தின் சொத்துரிமையை அது இழந்துவிடக்கூடும் என்பது குறித்து ஊகங்கள் செய்ய வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் அம்னோ உதவித் தலைவர் ஹிசாமுடின் ஹுசேன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அது பற்றிய அதிகாரிகளின் விசாரணை முடியும் வரையில் அவர்கள் காத்திருக்க வேண்டும் என்றாரவர்.

விசாரணை வழக்கமான முறையில் நடைபெறட்டும். ஊடகம் அல்லது சமூக ஊடகம் மூலம் யாரும் முன்னதாகவே தண்டிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என்று பாலோவில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்காப்பு அமைச்சரும், சிறப்பு கடமைகளுக்கான அமைச்சருமான ஹிசாமுடின், பெல்டா சமூகத்தினர் அவர்களின் நலன்களை தொடர்ந்து உறுதி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட மேம்பாட்டு திட்டங்களைப் புரிந்து கொண்டுள்ளனர் என்று மேலும் கூறினார்.

பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு உதவுவதில், செம்புரோங் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள ஆறு பெல்டா இடங்கள் உட்பட, மந்திரி பெசார் காலிட் நோர்டின் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்றும் ஹிசாமுடின் கூறினார்.

ஜாலான் செமராக்கிலுள்ள ரிம270 மில்லியனுக்கு கூட்டுதலான மதிப்புடைய பெல்டா நிலங்கள் 2015 இல் செய்துகொள்ளப்பட்ட சந்தேகத்திற்குரிய ஓர் ஒப்பந்தத்தின் மூலம் அச்சொத்தை இழக்கும் அபாயத்தில் பெல்டா இருப்பதாக டிசம்பர் 21 இல் ஓர் ஊடகச் செய்தி கூறிற்று.