தமிழ்ப் பாத்தியில் வெந்நீர் பாய்ச்சும் மஇகா

முக்கால் நூற்றாண்டு வரலாற்றை எட்டப் போகும் மஇகா, இந்த மண்ணில் நிலைத்துள்ள தமிழ்வழிக் கல்விக்கு இரண்டக வேலையை வஞ்சகமில்லாமல் செய்து வருகிறது. இருமொழிக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டால், அது எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; அத்துடன், மாணவர்களின் தமிழ் மொழி ஆற்றலையும் சிதைக்கும் என்று சமூகத்தின் பல தரப்பிலிருந்தும் குரல் எழும்பி வரும் வேளையில், இதைப் பற்றி இதுவரை மஇகா எந்தக் கருத்தையும் சமூகத்திடம் வெளிப்படையாக முன்வைக்கவில்லை.

மாறாக, இருமொழிக் கொள்கை அமுலாக்கத்தில் மட்டும் கருத்தாக இருக்கிறது.

மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் கல்வித் துறை துணை அமைச்சருமான ப.கமலநாதன், இந்த நாட்டில் இருமொழிக் கொள்கை எதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இதன் தொடர்பில் சமூக –  மொழி இயக்கங்களுடன் கலந்துரையாடலோ, ஆலோசனையோ நடத்தவில்லை.

தமிழ்க் கல்விக்கும் தமிழ்ப் பள்ளிக்கும் மறுட்டலை ஏற்படுத்தும் இதுபோன்ற சிக்கலான சந்தர்ப்பங்களில்  பொது மக்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கலந்துரையாடி பொதுக் கருத்தை உருவாக்கவும் மொழிக் காப்பிற்கும் தமிழ் வளர்ச்சிக்கும்  என ஓர் அமைப்பு மஇகா-வில் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இப்படிப்பட்ட நிலையில், மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான த. மோகன், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தாய்மொழிக் கல்வி மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் இருள்படரச் செய்யும் இருமொழிக் கொள்கைக்கு மறுப்பு தெரிவிப்போர்மீது வசையும் பாடியுள்ளார்.

அதற்கு அவர் முன் வைத்துள்ள ஒரே காரணம், மாணவர்கள் ஆங்கில மொழியில் ஆற்றல் பெற வேண்டும் என்பதுதான். இருமொழிக் கொள்கை போன்ற ஆழமான பிரச்சினைகளில் அந்தக் கட்சி சார்பில் மொழி அறிஞர்களோ அல்லது கல்விமான்களோ கருத்து சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அவ்வாறின்றி, தொலைநோக்குப் பார்வையும் இன்றி போகிற போக்கில் இப்படி கருத்து சொல்லும் மோகன் போன்றவர்கள் நிதானமாக கருத்து சொல்ல வேண்டும்.

குறிப்பாக, இருமொழிக் கொள்கையை எதிர்ப்போர், மாணவர்கள் ஆங்கில மொழியில் ஆற்றலும் ஆளுமையும் பெறுவதை விரும்பாதவர்கள் என்று சொல்லி இருப்பது அபத்தம்; அபாண்டம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இது, பிற்போக்குத்தனமான கருத்தாகும்.

தற்போதைய நிலவரப்படி, கணித-அறிவியல் பாடங்களையும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்க முற்பட்டிருப்பதால் ஆங்கிலம், கணிதம், ஆங்கில மொழி ஆகிய மூன்று பாடங்கள் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்படும். அதைப்போல தேசிய மொழிப் பாடம் மலாய் மொழியில் என்பது கட்டாயம். அப்படி யென்றால், தமிழ்ப் பள்ளியில் தமிழ்மொழிப் பாடம் மட்டுமே தமிழில் பயிற்றுவிக்கப்படும்.

அவ்வாறெனில், தமிழ்ப் பாடத்தை மட்டும் படிப்பதற்காக தமிழ்ப் பள்ளி என்ற கட்டமைப்பு தேவையா என்பதை மோகன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் ஆற்றலும் புலமையும் வேண்டுமென்றால், அந்தப் பாடத்தை இன்னும் எழுச்சியுடன் கற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் தொடர்பில் நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளும் பொது இயக்கங்களும் துணை நிற்கலாம். அத்துடன், இத்தகைய நடவடிக்கையை கல்வி அமைச்சும் ஒருமுகப்படுத்தி மாணவர்களின் ஆங்கில மொழி மேம்பாட்டிற்கு வழிவகுக்கலாம்.

இதையெல்லாம் விடுத்து, தாய்மொழிப்பள்ளியில் அறிவியல், கணிதப் பாடங்களை தாய்மொழியிலேயே பயிற்றுவிக்காமல் ஆங்கில மொழியில் கற்றுத் தருவது, தாய்மொழிப் பள்ளிகளின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நிலையை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்.

அதற்கும் மேலாக, தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆசிரியர்கள் வெகுவாக நியமிக்கப்படும் சூழல் எழலாம். அப்படி யென்றால், தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்மொழியை மட்டும் கற்றுக் கொடுக்க சொற்பமான அளவில் தமிழாசிரியகள்  இருந்தால் போதும் என்ற நிலையும் ஏற்படும். இதன் உடனடி விளைவாக, தமிழ் ஆசிரியர்கள் பேரளவில் வேலையை இழக்கும் அபாய நிலையும் தோன்றும்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பாராமல், அதுவும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருக்கும் ஒருவர் இப்படி அபத்தமான கருத்தைச் சொல்வதும் தமிழ்மொழிக்காகவும் தமிழ்ப்பள்ளிகளின் மேன்மைக்காகவும் குரல் கொடுப்போரைச் சாடுவதும் பொருத்தமான நடவடிக்கையாக இல்லை.

மஇகா  துணை அமைச்சரும் தேசிய உதவித் தலைவரும் இப்படி இருமொழிக் கொள்கைக்காகப் பாடாற்றுவது, தமிழ்ப் பாத்தியில் வெந்நீரைப் பாய்ச்சும் வேலைக்கு ஒப்பாகும்.