மியான்மர் அரசுக்கு எதிரான எங்கள் சண்டை தொடரும்: அர்சா கிளர்ச்சியாளர்கள்

மியான்மர் அரசுக்கு எதிரான எங்கள் சண்டை தொடரும் என சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லிம்களை கொண்ட அர்சா என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அரக்கான் ரோஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி (அர்சா) தொடுத்த ஒரு தாக்குதல், கடுமையான ராணுவ நடவடிக்கைக்கு காரணமாக அமைந்தது. ராணுவ நடவடிக்கையின் காரணமாக 6,50,000 அதிகமான ரோஹிஞ்சாக்கள் வங்க தேசத்திற்கு அடைக்கலம் புகுந்தனர்.

தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ஒரு ராணுவ ட்ரக்கின் மீது நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளைக் கொண்டு 20 வங்காளத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக மியான்மர் அரசு கூறியது.

இந்த தாக்குதலுக்கு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுள்ளது அர்சா அமைப்பு. அதன் தலைவர் அடா உல்லா தன் ட்விட்டர் கணக்கில், “ரோஹிஞ்சா மக்களுக்கு எதிரான பர்மீஸ் அரசு ஆதரவு தீவிரவாதத்தை எதிர்கொள்ள எங்களுக்கு வேறு வழியில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.

ரோஹிஞ்சாக்களின் அரசியல் உரிமைக்காக போராடுவதாக சொல்லும் இந்த அர்சா அமைப்பை மியான்மர் அரசு தீவிரவாத குழுவாக பார்க்கிறது.

ஆதரிக்கவில்லை

பிபிசியின் தென் கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜொனாதான் ஹெட், அனைத்து ரோஹிஞ்சா மக்களும் அர்சா அமைப்பை ஆதரிக்கவில்லை என்கிறார்.

இந்த தாக்குதலின் காரணமாக ரக்கைன் மாகாணத்திற்கு சர்வதேச உதவிகள் கிடைப்பதும், ஊடகங்கள் அங்கு செல்வதும் தடுக்கபடலாம் என்கிறார் ஜொனாதான். -BBC_Tamil