பூசாட் கொமாஸ்: இன அடிப்படையிலான கட்சிகள் காலனிய காலத்தின் எச்சங்கள்

மலேசியாவில்   இன  அடிப்படையிலான  கட்சிகளுக்கு   இன்னும்   தேவை   இருப்பதாகக்  கூறிய   கெராக்கான்  தலைவர்  மா  சியு   கியோங்கை   சிவில்   உரிமைகளுக்காக  போராடும்  என்ஜிஓ-வான  பூசாட்  கொமாஸ்  சாடியது.

“மாவின்  கூற்று  கலங்க  வைக்கிறது,  ஏமாற்றமளிக்கிறது.

“பல இனங்களைக்   கொண்டு  அமைக்கப்பட்ட   கட்சி   என்ற  முறையில்  கெராக்கான்    வேற்றுமையின்  முக்கியத்துவத்தை   உணர்ந்து   அரசியல்  கட்சிகள்  குறுகிய    இனவாதச்  சிந்தனையிலிருந்து  விடுபடுவதற்காக   அல்லவா   குரல்   கொடுத்திருக்க   வேண்டும்”,  என  பூசாட்  கொமாஸ்   ஓர்    அறிக்கையில்   கூறியது.

மா,   இதற்கு  முன்னர்    மலாய்-முஸ்லிம்   கட்சியாக   பெர்சத்து   அமைக்கப்பட்டது    இன  அடிப்படையிலான   கட்சிகளுக்கு   இன்னும்  தேவையிருப்பதைக்   காட்டுவதாகக்  கூறினார்   என   அறிவிக்கப்பட்டிருந்தது.

மாவின்  கூற்று,  அரசியல்   கட்சிகள்     இனவாத    அரசியலைப்  பயன்படுத்தி   ஆதரவுதேட      முனைவது   மக்களின்  பிரச்னைகளைத்   தீர்க்கும்   அரசியல்  உறுதிப்பாடு   அவற்றுக்குக்  கொஞ்சமும்  இல்லை   என்பதைக்  காட்டுவதாக  பூசாட்  கொமாஸ்   கூறிற்று.

இன  அடிப்படையிலான   கட்சிகளுக்கு   என்றும்   எப்போதும்   தேவை  இருக்காது    என்று   வலியுறுத்திய   அந்த   என்ஜிஓ,     அவை  தேவை   என்ற  நினைப்பே   “பிரித்து  ஆளும்”  காலனியகாலக்  கொள்கையைக்  காண்பிக்கிறது   என்றது.