பிஎஸ்எம்: கிளந்தானில் ஆலயங்கள் தாக்கப்பட்டது ‘ஆச்சரியமளிக்கிறது’

பிஎஸ்எம்  கிளந்தான்,    நேற்று  கோட்டா  பாருவில்  கிறிஸ்துவ  தேவாலயம்  ஒன்றும்   இந்து  ஆலயம் ஒன்றும்  தாக்கப்பட்ட  சம்பவத்துக்குக்  கண்டனம்   தெரிவித்துள்ளது.

“அச்சம்பவத்தைக்  கண்டிப்பதும்   இப்படிப்பட்ட  போக்கை   வளரவிடாமல்   தடுப்பதும்   அதற்குப்  பதிலாக    அனைவரும்  எல்லாருக்கும்   பயன்படக்கூடிய  பொருளாதாரக்   கொள்கை  விவகாரங்களில்   கவனம்   செலுத்த   வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்வதும்   நம்   சமுகப்  பொறுப்பாகும்”, என  பிஎஸ்எம்   கிளந்தான்  தலைவர்  கைருல்   நிஜாம்   அப்ட்  கனி  இன்று  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

நேற்று  நீர்வடிகட்டி   போன்ற  பொருள்கள்   கோட்டா  பாரு  மெதடிஸ்ட்  தேவாலயத்தின்மீதும்   அருள்மிகு   சிவ சுப்ரமணியர்   ஆலயத்தின்மீதும்   வீசி  எறியப்பட்டதால்    அவற்றின்  கண்ணாடி  சன்னல்கள்  நொறுங்கின.

கிளந்தானில்  தொழுகை   இல்லங்கள்   தாக்கப்படுவது  “ஆச்சரிமளிக்கிறது”  என  கைருல்  கூறினார்.

“மற்ற  மலேசிய   மாநிலங்களோடு  ஒப்பிட்டால்  கிளந்தான்  நன்கு  முதிர்ச்சியடைந்த  மாநிலம்.

“மற்ற   மாநிலங்களில்    இனக்  கலவசரம்  மூண்டபோதுகூட   அது   கிளந்தானுக்குப்   பரவவில்லை”  என்றாரவர்.

தேர்தல்   நெருங்கிவரும்   வேளையில்  இப்படிப்பட்ட   சம்பவங்கள்   நிகழ்வது   ஆச்சரியமாக  உள்ளது   என்றார்.

“தேர்தல்  வேட்பாளர்கள்  உடனடியாக  ஓடோடி   வந்து   சம்பவம்   நடந்த  இடத்தில்  காட்சியளித்தார்கள்”,  என  கைருல்   தெரிவித்தார்.

முதலில்  தேவாலயத்தின்மீது  “பெட்ரோல்  குண்டு”  வீசப்பட்டதாக  கூறப்பட்டது.   பிறகு   புலனாய்வில்  வேறு   பொருள்கள்  கண்டெடுக்கப்பட்டதாக   போலீஸ்   கூறிற்று.