சினிமாக்காரர்களால் தமிழர்களுக்குத் தலைகுனிவு

-கி. சீலதாஸ், ஜனவரி 9, 2018.

 

 

சினிமா  நடிகர்  ரஜினிகாந்த்  தமது  அரசியல்  பிரவேசத்தைப்  பிரகடனப்படுத்தி விட்டார்.  அவரது  அரசியல்  பிரவேசம்  தமிழ்  நாட்டு  எல்லையோடு  நின்று  ஒரு  மாநில  கட்சியாகத்  திகழுமா  அல்லது  அகில  இந்திய  அரசியலில்  முழுமூச்சாக  ஈடுபாடு  கொண்ட  கட்சியாகத்  திகழுமா  என்பது  தெரியவில்லை.

சினிமா  நடிகர்கள்  அரசியலில்  புகுந்து  வெளுத்துக்கட்டுவது  ஒன்றும்  புதிதல்லவே.  அதே  சமயத்தில்,  அரசியலில்  புகுந்த  எல்லா  நடிகர்களும்  புகழின்  உச்சிக்குப்  போனதாக  வரலாறு  கிடையாது.  தமிழ்  நாட்டை  எடுத்துக்கொண்டால்  எம்.ஜி. இராமச்சந்திரன்  திராவிட  முன்னேற்றக் கழகத்தில் (திமுக)  இணைந்து  தமது  அரசியல்  வாழ்க்கையைச்  செழுமையாக்கிக்  கொண்டார்.  இவர்  ஒரு  காலத்தில்    காங்கிரஸ்  கட்சியில்  இணைந்து  இருந்தார்  என்றப்  பேச்சும்  உண்டு.  திமுகவில் இவருக்குத் தனிச்சிறப்பு இருந்தது. அண்ணாதுரையின் மரணத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் தகுதியும், அண்ணாதுரையின்  நம்பிக்கைக்குப்  பாத்திரமான  இரா.நெடுஞ்செழியன்  ஒதுக்கப்பட்டு மு.கருணாநிதி தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். இந்த சூழ்நிலைக்கு முக்கியமான பங்கை நல்கியவர் நடிகர் இராமச்சந்திரன், இவரோடு  திமுகவில்  இருந்தவர்களில் எஸ். எஸ். இராஜேந்திரன், சிவாஜி கணேசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிவாஜி கணேசன் திமுகழகத்தில்  இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.  அவரால்  அரசியலில் பெரும் மாற்றத்தைக் காணமுடியவில்லை.  எஸ்.எஸ்.ஆர்  சுமாராக  அரசியல்  வாழ்க்கையை  நடத்திச்  முடித்துவிட்டு  சென்றார்.

கருணாநிதியோடு ஏற்பட்ட  கருத்துப்  பிணக்கானது இராமச்சந்திரனை புதுக் கட்சியைக் காண உசுப்பியது. அதுவே அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தமது கட்சியின் கொள்கை அண்ணாவின் கொள்கை என்றார். அரசியலில் அவர் கண்ட வெற்றி   பிரமாண்டமானது. இராமச்சந்திரனுக்கு  சிலை அமைத்து   கும்பிடும் அளவுக்கு மனநிலை கொண்ட மக்களிடம் அவரின் செல்வாக்கு வலுப்பெற்றிருந்தது.  தமிழக  அரசியல்  நடிகர்களுக்குப்  பெரும்பங்கு  உண்டு  என்பதை  உணர்த்தி  வலுப்படுத்தியது,  இராமச்சந்திரனின்  மரணத்திற்குப்  பிறகு  நடிகை  ஜெயலலிதா  அண்ணா  திராவிட  இயக்கத்தின்  பொறுப்பு,  அதோடு  சேர்ந்து  வந்த  தமிழ்  நாட்டு  முதலமைச்சர்  அந்தஸ்து  யாவும்  தமிழக  அரசியலில்  சினிமா  நடிகர்களின்  வசீகர  ஈடுபாடு  அளப்பரிது  என்ற  நிலை  உறுதியாயிற்று.  சுருக்கமாகச்  சொன்னால்  தமிழகத்தை  ஆளும்  அதிகாரத்தை  தமிழ்  மக்கள்  நடிகர்களிடம்  ஒப்படைத்துவிட்டார்களா  என்ற  சந்தேகம்  மேலிடுகிறது.  இது  போதாது  என்றால்  நடிகர்  விஜயகாந்தின்  அரசியல்  பிரவேசம்  வியப்பை  அளிக்காதது  மட்டுமட்டுமல்ல,  நடிகர்களை  விட்டால்  தமிழக  அரசியலுக்கு  விமோசனம்  இல்லை  என்ற  நிலை  உருவாகிவிட்டது  என்பதும் ஒரு  கருத்து.

இப்பொழுது,  ரஜினிகாந்த்  தமது  அரசியல்  கொள்கைகளை  வெளிப்படுத்தி  உள்ளார்.

ஜனநாயகம்  படுமோசமான  நிலையில்  இருக்கிறது.  பிற  மாநிலங்களில் நம்மை   (தமிழ்நாட்டை)  எள்ளிநகையாடுகிறார்கள்.  ஜனநாயகத்தின்  பேரில்  அரசியல்வாதிகள்  நம்மை,  நம்  சொந்த  நாட்டிலே  சூரையாடுகிறார்கள்.  அடிமட்டத்தில்  இருந்து  மாற்றத்தைக்  காணவேண்டும்.  மன்னர்களும்,  ஆட்சியாளர்களும்  பிறநாடுகளைச்  சூரையாடினர்.  இன்றையக்  காலகட்டத்தில்  ஆட்சிபுரிபவர்கள்  சொந்த  நாட்டையே  சுரண்டுகிறார்கள்.  உண்மை,  உழைப்பு,  உயர்வு (முன்னேற்றம்)  தமது  இயக்கத்தின்  தாரக  மந்திரங்களாக  இருக்கும்.  இந்த  கொள்கைகள்  புதியன  அல்ல.

தமிழ்  நாட்டு  அரசியல்  இந்தியாவில்  மட்டும்  கேளிக்கூத்தாக  மாறிவிடவில்லை.  உலகெங்கும்  வாழ்கின்ற  தமிழர்கள்  தலைகுனிந்து  நிற்க  வேண்டிய  நிலை  ஏற்பட்டுவிட்டது.  ஊழல்  என்பது  உலகெங்கும்  பரவி  அழிவை  வளர்க்கும்  தரத்தைக்  கொண்டிருக்கிறது.  ஊழலை  ஒழிக்க  முற்பட்டால்  அந்த  நல்ல  காரியத்தில்  ஈடுபடுவோரை  ஒழிப்பதில்  ஊழல்  கலாச்சாரத்தில்  ஊறிப்போனவர்களின்  தீவிர  கவனம்  தமிழ்  நாட்டில்  மட்டுமல்ல.  ஜனநாயகம்  பாழான  நிலையில்  இருப்பதாகக்  கூறுவது  நியாயமாக  இருக்கலாம்.  அதுபோலவே,  எங்கெல்லாம்  பணஅரசியல்,  குடும்ப  அரசியல்,  அதிகார  வெறி  காணப்படுகிறதோ  அங்கெல்லாம்  ஜனநாயகத்தைக்  காப்பாற்ற  முடியாது,  ஊழலை  ஒழிக்கமுடியாது,  குடும்ப  அரசியல்,  வாரிசு  அரசியல்  போன்ற  ஜனநாயகத்தை அழிக்கவல்ல  புல்லுருவிகளை  அழிக்க  இயலாது.  மக்கள்  மனம்  மாறவேண்டும்.  ஜனநாயகத்துக்கு  எதிராகச்   செயல்படும்  சக்திகளை  அடையாளம்  கண்டு  அவற்றை  அரசியலில்  இருந்து  ஒதுக்க  வேண்டும்.

இதை  எல்லாம்  நினைக்கும்போது  நடிகர்கள்  அரசியலைப்  பயன்படுத்தி  தலைவர்களானவர்களால்  நாடு  செழிக்காது,  அரசியலில்  நாகரிகம்  வளராது.  ஏன்  தெரியுமா?  மக்கள்    சினிமாவில்  வரும்  மாய  நிலையை  நம்பி  மோசம்  போவதால்,  அதிகாரத்தில்  இருப்பவர்களை  நம்புவதால்,  அதிகார  துஷ்பிரயோகத்தை  உணராததால்  மக்கள்  ஏமாறுகிறார்கள்.  ஏமாற்றப்படுகிறார்கள்.  இதற்குத்  துணையாக  இருப்பவர்கள்  நடிகர்கள்.  அவர்களின்  நடிக்கும்  திறமை  மாறுபடும்  தரத்தைக்  கொண்டது.  சில  நடிகர்கள்  நாணயமிக்கவர்களாக  நடிப்பதால்  அவர்கள்  வாழ்க்கையிலும்  அந்த  நாணயம்  காணப்படும்  என்பது  வெகுளித்தனம்.

தமிழ்  நாட்டில்  நிகழ்வது  வெளிநாடுகளில்  வாழும்  தமிழர்களைப்  பாதிக்கும்.  பிரபல  தமிழ்ச்  சினிமா  நடிகர்களோடு  தொடர்பு,  நட்பு  என்று  கூறி  இங்குள்ள  அரசியல்வாதிகள்  இந்திய, தமிழ்  வாக்காளர்களின்  மனதில்  குழப்பத்தை  ஏற்படுத்தலாம்.  கவனமாக  இருப்பது  நல்லது.  சிந்தித்து  செயல்பட  இந்தியர்கள் – தமிழர்கள்  எப்பொழுதும்  தயாராக  இருக்கவேண்டும்.