டாக்டர் ஜெயக்குமார் போட்டியிட்டால், சுங்கை சிப்புட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மலேசிய சோசலிசக் கட்சிக்கு (பிஎஸ்எம்) இடையே பேச்சுவார்த்தைகள் நடத்த இன்னும் கொஞ்சம் வாய்ப்புள்ளது, ஆனால் சுங்கை சிப்புட்டில் தற்போதைய எம்பி டாக்டர் ஜெயக்குமாரையே அத்தொகுதி வேட்பாளராக பிஎஸ்எம் நிறுத்தினால், ஹராப்பான் விட்டுக்கொடுக்க தயார் என்று டிஏபி கூறியுள்ளது.

14-வது பொதுத் தேர்தலில், பிஎஸ்எம் போட்டியிடும் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில், நான்கில் மும்முணைப் போட்டி நடைபெறவுள்ளது, அதனைச் சந்திக்க தாங்கள் தயார் என்று டிஏபியைச் சார்ந்த அந்தோணி லோக் தி மலேசியன் இன்சைட்-டிடம் தெரிவித்துள்ளார்.

“அவர்களை (பிஎஸ்எம்) முழுமையாகப் புறக்கணிக்க மாட்டோம், குறைந்தபட்சம் சுங்கை சிப்புட்டில், டாக்டர் ஜெயகுமார் பிகேஆர் டிக்கெட்டில் தொடர்ந்து போட்டியிட, ஹராப்பான் கூட்டணிக்கட்சிகள் ஓர் உடன்பாட்டைச் செய்துள்ளன,” என்று அவர் கூறினார்.

பேராக் டிஏபி அத்தொகுதியில் போட்டியிட விரும்பியபோதும், பிகேஆர் டிக்கெட்டில் டாக்டர் ஜெயக்குமார் போட்டியிட்டால், அத்தொகுதியை விட்டுக்கொடுக்க டிஏபி முடிவுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மற்ற நான்கு இடங்களிலும் – பத்து காஜா, சுபாங், கேமரன் மலை மற்றும்  உலு லங்காட்- ஹராப்பான் பிஎஸ்எம்-உடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது, காரணம் தீபகற்பத்தில் தனது இருக்கைகளுக்கான இறுதி பேச்சுவார்த்தையை ஹராப்பான் முடித்துகொண்டது என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, பிஎஸ்எம் ஹராப்பானுடன் ஒத்துழைக்காது என்றும், சுங்கை சிப்புட்டில் பிஎஸ்எம் சின்னத்திலேயேப் போட்டியிடவுள்ளதாகவும் டாக்டர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பிஎஸ்எம் மற்ற இடங்களில் போட்டியிடாமல் இருந்தால் மட்டுமே, சுங்கை சிப்புட்டை தங்களுக்குக் கொடுப்பதாக ஹராப்பான் கூறியுள்ளது என்று டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

“ஆக, எங்களால் நிச்சயமாக அதற்கு உடன்பட முடியாது,” என்று அவர் கூறினார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பிஎஸ்எம் 5 நாடாளுமன்றம் மற்றும் 15 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.