உலகின் மிகவும் ஆபத்தான எல்லையில் வட கொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தை

கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன .

இரு நாட்டு எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியான பன்முன்ஜோமில் ‘சமாதான கிராமம்’ என அழைக்கப்படும் பகுதியில் உள்ள ‘அமைதி மாளிகையில்’ இந்த சந்திப்பு நடக்கிறது.

இப்பகுதி வடக்கு மற்றும் தென் கொரியாவால் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும், எல்லையாகும்.

கடந்த நவம்பர் மாதம் இங்குள்ள இணை பாதுகாப்பு பகுதியில், தென்கொரியாவின் பக்கத்தை வட கொரிய வீரர் ஒருவர் கடந்தபோது, வடகொரிய ராணுவத்தாலேயே சுட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடக்க உள்ள 2018 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் வட கொரியா கலந்துகொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் பேசப்படும்.

இரு கொரிய நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பேச உள்ளதாகத் தென் கொரியா கூறியுள்ளது.

வட கொரியா ஏவுகணை ஏவிய பிறகு, கேசோங் தொழில் மண்டலத்தின் கூட்டு பொருளாதார திட்டத்தை தென் கொரியா இடைநிறுத்தியது. அப்போது முதல் இரு நாடுகள் இடையிலான உறவுகள் மோசமடைந்தது.

இந்த சம்பவம், தென் கொரியாவுடனான தனது தொடர்புகளை வட கொரியா துண்டிக்க வழிவகுத்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடைசியாக உயர்அளவு பேச்சுவார்த்தைகள், 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்தது.

தடை செய்யப்பட்ட ஆயுத திட்டங்களை வட கொரியா தொடர்ந்து மேம்படுத்தி வந்ததால், பதற்றங்கள் அதிகரித்தன.

பேச்சுவார்த்தையின் கவனம் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து இருக்கும். ஆனால், மற்ற விஷயங்களும் பேசப்படும் தென் கொரியாவின் நல்லிணக்கதுறை அமைச்சர் சோ மியூங் -கியான் திங்கட்கிழமையன்று கூறினார்.

”இருநாட்டு உறவுகள் குறித்து பேசுகையில், போரில் பிரிந்த குடும்பங்கள் மற்றும் ராணுவ பதட்டங்களை எளிதாக்கும் வழிகள் போன்றவற்றை குறித்தும் அரசு பேசும்” என்கிறார் சோ மியூங் -கியான். இவர் தலைமையிலான ஐந்து பேர் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர்.

வட கொரியாவும் ரிசோனோ-க்வோன் தலைமையிலான ஐந்து பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்புகிறது. தென் கொரிய விவரங்களுக்கான வட கொரிய அரசு நிறுவனத்தின் தலைவராக ரி-சோனோ-க்வோன் உள்ளார்.

மூத்த பேச்சுவார்த்தையாளராக அறியப்படும் ரி, 2006 முதல் வட கொரிய பிரதிநிதிகளை வழிநடத்தி வருகிறார்.

-BBC_Tamil