ஏன் ‘குற்றவாளி’ அன்வாரை பிரதமர் நஜிப் சென்று பார்த்தார்?, கேட்கிறார் சுரேந்திரன்

 

மருத்துவமனையில் குணமடைந்து வரும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்மை ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் மகாதிர் சந்திக்கச் சென்ற போது அவரை சிறைக் காவலர்கள் தடுத்து விட்டனர். அது குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் நூருல் ஜஸ்லான், அன்வார் ஒரு ‘குற்றவாளி’ என்று கூறினார். இவ்வாறு கூறியதற்காக ஜஸ்லானை அன்வாரின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் குறைகூறினார்.

“அப்படியே அவர் ஒரு குற்றவாளி என்றால், ஏன் மலேசியப் பிரதமர் அவரை சென்று கண்டார்?’, என்று சுரேந்திரன் வினவினார்.

கடந்த நவம்பரில், அன்வாருக்கு செய்யப்பட்ட அறுவைச் சிகிட்சைக்குப் பின்னர் அவரை பிரதமர் நஜிப்பும் துணைப் பிரதமர் ஸாகிட்டும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.

நூர் ஜஸ்லான் கூறியிருப்பதை ஓர் இளைய அமைச்சரின் “வெட்கக்கேடான மற்றும் நம்பிக்கை இழந்த செயல்” என்று வர்ணித்த சுரேந்திரன், அது அன்வார் மீதான அம்னோவின் அச்சத்தையும் வெளிப்படுத்துகிறது என்றார்.

அவரை ஒரு குற்றவாளி என்று இழிவுப்படுத்தும் தேவை அம்னோவுக்கு இருப்பது அன்வாரை ஓர் அரசியல் பகைவராகக் காண்பதில் அது மிகுந்த அச்சம் கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது என்று சுரேந்திரன் மேலும் கூறினார்.

மேலும், மலேசியாவில் அன்வாரை எவரும் ‘குற்றவாளி’ எனக் கருதியதில்ல.

அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு மற்று சிறைக்காவல் ஆகியவற்றை பல நாடுகள், அமைப்புகள் மற்றும் தலைவர்கள் கண்டித்துள்ளதை சுரேந்திரன் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, நூருல் ஜஸ்லானின் கூற்று நகைப்புக்குரியது என்றாரவர்.