கைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் கூட்டுப் பரிவர்த்தனை சிறைச்சாலைகள் எதற்காக?

‘ஞாயிறு’ நக்கீரன் – நாட்டின் தென்புலத்தில் உள்ள மாநிலமான ஜோகூரைச் சேர்ந்தவர்கள், அந்த மாநிலத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘ஜோரான ஜோகூர்’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட மாநிலத்தில் உள்ள ஒரு சிறைச் சாலையில் உள்ள கைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் பாவனையிலும் பரிவர்த்தனையிலும் ஜோராக ஈடுபட்டுள்ளனர் என்னும் செய்தியை அறியும்பொழுது, வியப்பும் வேதனையும் மேலிடுகின்றன.

தவறிழைத்த மனிதன் தன்னை செப்பம் செய்து கொள்ளவும் தன்னைத் தானே மீளாய்வு செய்து கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டதுதான் சிறைச் சாலை என்ற கட்டமைப்பு; ஆனால், சிறை வளாகத்திற்குள் இருக்கும் கைதிகள் தங்களுக்குள் போதைப் பொருளை பயன்படுத்தவும் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் முற்படுகின்றனரென்றால் இதைவிட கீழ்மை வேறொன்றும் இல்லை.

சிறைச் சாலைக்குள் செல்லும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் அங்கத்தினராவர். அவர்கள், வானத்தில் இருந்து திடீரென்று குதித்தவர்களில்லை. தன் தந்தையையும் தாயையும் ஆதாரமாகக் கொண்டு இந்த மண்ணில் வலம் வரும் வாய்ப்பைப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் முதற்கண் தன் பெற்றோரைக் காப்பவனாகவும் தனக்கென்று ஒரு குடும்பக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்பவனாகவும் வாழ முற்பட்டாலே போதும். தவறிழைக்கவோ நீதிமன்ற படிக்கட்டுக்களை மிதிக்கவோ சிறைவாசம் ஏற்கவோ அவசியம் இருக்காது.

சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பாடாற்றுவது அடுத்தக் கட்டம்.

உலக உயிர்களுக்கெல்லாம் அச்சாணியாக இருக்கும் விவசாயி, தான் பயிர் செய்யும் விளை நிலத்தை எத்துணைதான் கவனத்துடன் பாதுகாத்தாலும், நெற்கதிரின் ஊடே பதரும் இருக்கத்தான் செய்கிறது. அதைப்போல, நாம் வாழும் இந்த சமுதாய வீதியில் எத்தனை வள்ளுவர் தோன்றினாலும் வள்ளலார்கள் உதித்தாலும் சாக்ரட்டீஸ்களும் கன்ஃபூசியஸ்களும் பிறந்தாலும் நெறி தவறியும் வழி தவறியும் வாழும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அப்படிப்பட்டவர்கள் திருந்தவும் மீண்டும் சமூகத்தில் கலந்து வாழவும் தோற்றுவிக்கப்பட்டதுதான் சிறைச் சாலை. மன்னர்கள் காலத்தில் இருந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சமூகத்தில் நிலைபெற்றிருக்கும் சிறைச் சாலை, நாகரிக முதிர்ச்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்ப இன்னும் சிறந்து விளங்கும் என்றால், அதற்கு மாறாக, கீழ்த்தரமாக செயல்படுகிற நிலை தோன்றினால், இது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நிருவாக இயந்திரத்திற்கும் சிறுமை பயப்பதாகும்.

குளுவாங் சிறைச்சாலைக்குள் அதன் அதிகாரிகளும் கைதிகளும் கூட்டு சேர்ந்து போதைப் பொருள் பரிவர்த்தனையில் வகைதொகையின்றி ஈடுபடுகின்ற தகவலை, எவரோ ஒரு நல்ல அதிகாரி காவல்துறைக்கு தகவல் சொல்கிறார். அதன் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் திடீரென்று குளுவாங் சிறைச் சாலையில் அதிரடி சோதனை நடத்தியபோது ஒரு கைதி போதைப் பொருளுடன் சிக்கியதும், அவரிடம் ஆய்வு மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட சிறையைச் சேர்ந்த ஓர் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு காவல்துறை ஒதுங்கிக் கொள்கிறது.

குளுவாங் சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கைதிகளைப் பற்றிய தகவல் அத்தனையையும் அந்த அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட கைதி ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் திடீரென்று விசாரனையை நிறுத்திக் கொண்ட அதிகாரியிடம், “தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது; அதனால் எனக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. ஆனால், அன்றிரவே அந்தக் கைதி மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார்.

தாயும் தந்தையும் பிணக்கு கொண்டு அவர்கள் இருவரும் வெவ்வேறு பாதையை வகுத்துக் கொண்டதால், கைவிடப்பட்ட நிலையில் தாய்வழி பாட்டியிடம் வளர்ந்த அவ்விளைஞன் கல்வி வாசம் இன்றி தவறான போக்குடன் வாழ்ந்த வேளையில், சில சார்டின் டின்களையும் அரிசிப் பொட்டலத்தையும் திருடியதற்காக குளுவாங் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்தான், அந்த இளைஞன், இப்படி பாதி வழியில் தன் வாழ்வைத் தொலைக்க நேர்ந்திருக்கிறது.

சிறை வாழ்வை மேற்கொண்ட ஓர் இளைஞன், சிறைக்குள் திருந்தி நல்மாந்தனாக வெளியே வருவதற்குப் பதிலாக, முன்னைவிட இன்னும் சீர் கெடும் நிலை இருக்குமானால், சிறைச் சாலை என்னும் சீர்திருத்தச் சாலை எதற்காக என்னும் கேள்வி சமுதாயத்தில் எழுகிறது.

சிறைச் சாலையில் பணி புரியும் அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு சமூகக் கடப்பாடும் ஒழுக்கமிகு சிந்தனையும் மிகவும் தேவை. ஏறக்குறைய குருகுலத்தை நடத்துவதைப் போன்றுதான் சிறைச் சாலையை அதன் அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் வழிநடத்த வேண்டும். மாறாக, இப்படி தவறான போக்கிற்கு துணை நிற்பதுடன், தாங்களும் அதன் கூறாக இருப்பது பச்சையான சமூக துரோகமாகும். இப்படிப்பட்ட கூட்டத்தினரை உடனே அடையாளம் கண்டு கூண்டோடு களையெடுக்க வேண்டிய அருங்கடப்பாடு அரசுக்கு உள்ளது.