அமெரிக்காவிற்கு பல்பு கொடுத்த ஜூலியன் அசாஞ்சே.. குடியுரிமை பெற்றார் விக்கி லீக்ஸ் மன்னன்!

லண்டன்: 5 வருடம், மிக நீண்ட 5 வருடம் லண்டனில் இருக்கும் ஈகுவடார் தூதரகத்தில் சிறிய அறையில் ஒடுங்கி கிடந்தார் ஜூலியன் அசாஞ்சே. உலகத்தை இணையத்தால் கலக்கியவனுக்கு சில நாட்கள் இணையதள சேவைகூட மறுக்கப்பட்டது.

அமெரிக்கா ஒரு பக்கம் தேட, ஸ்வீடன் ஒரு பக்கம் வலைவிரிக்க என்ன செய்வது என தெரியாமல் அடங்கி போய் இருந்தார் அசாஞ்சே. ஒபாமா தொடங்கி அழகிரி வரை ஒருத்தர் விடாமல் இவர் மீது கோபமாக இருந்தனர்.

எல்லோரின் கோபத்தின் காரணமாக குடியுரிமை கூட இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தார். இதோ இப்போதுதான் ஈகுவடார் அவருக்கு குடியுரிமை வழங்கி இருக்கிறது.

விக்கி மன்னன்

உலகத்தில் இருக்கும் முக்கால்வாசி தலைவர்களை விக்கி லீக்ஸ் இணையம்தான் பயமுறுத்திக் கொண்டு இருந்தது. எப்போது யாரை பற்றி தகவல் வெளியாகும் என்பது கூட தெரியாமல் அனைவரும் பயந்து கொண்டு இருந்தனர். வாராவாரம் அமெரிக்க உளவுத்துறை ஆவணங்களை கெத்தாக தன் இணையத்தில் வெளியிட்டுக் கொண்டு இருந்தார்.

நாட்டை விட்டு ஓடினார்

இவரை உடனே கைது செய்து அமைதியாக்க முயற்சி செய்தது அமெரிக்கா. ஆனால் அசாஞ்சே உடனே நாட்டை விட்டு வெளியேறி ஸ்வீடன் சென்றார். அங்கு வீடு எடுத்து தங்கி வாழ்ந்தார். அதற்கு அங்கு இரண்டு பெண்கள் உதவியாக இருந்துள்ளனர். அமெரிக்கா இவரை தீவிரமாக தேடி வந்தது.

வழக்கு

இந்த நிலையில் அவருக்கு உதவி செய்த அந்த இரண்டு பெண்களும் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் புகார் கொடுத்தார்கள். எங்களிடம் பணத்தை அபகரித்து விட்டார், பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறினார்கள். இதனால் ஸ்வீடன் போலீஸ் அவர் மீது வழக்கு பதிவு செய்தது. அமெரிக்கா அவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப சொன்னது.

எஸ்கேப்

ஆனால் கொஞ்ச நேரம் கூட தாமதிக்காமல் உடனடியாக அவர் நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்றார். லண்டனில் புத்திசாலி தனமாக ஈகுவடார் தூதரகத்தில் சென்று மறைந்து கொண்டார். தூதரகம் என்பதால் அங்கு அவரை யாரும் கைது செய்ய முடியாது. அவருக்கு அது மட்டுமே பின் வாழ்விடமாக மாறியது.

5 வருட வாழ்க்கை

அவர் தொடர்ந்து குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் கிடைக்கவேயில்லை. அதன் காரணமாகவே அவர் தூதரக அறைக்குள் முடங்கினார். ஒரு ஐந்துக்கு ஐந்து அறையில் 5 வருடமாக காலத்தை கழித்தார். அமெரிக்காவும், லண்டனும் அவர் எப்போது வெளியே வருவார் என்று எதிர்பார்த்தது.

நீக்கம்

இந்த நிலையில் அவர் மீது இருந்த வழக்கை ஸ்வீடன் திரும்ப பெற்றது. ஆனாலும் லண்டனில் அவர் மீது சில வழக்குகள் இருந்தது. மேலும் அவர் பெயில் வாங்கி தப்பித்த வழக்கு வேறு நிலுவையில் இருந்தது. இதனால் அவர் மீண்டும் ஈகுவடார் தூதரகம் உள்ளேயே முடங்கும் நிலை உருவானது.

மீண்டும்

ஆனால் அவர் அப்போதும் அமைதியாக இல்லை. ஈகுவடாரில் இருந்து கொண்டே அவர் பல முக்கிய தகவல்களை தன் இணையதளத்தில் வெளியிட்டார். மேலும் டிவிட்டரில் பல முக்கிய போஸ்டுகளை போட்டு மக்களை கலங்கடித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து கூட பேசி இருந்தார். இதனால் ஈகுவடாருக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது.

நோ இணையம்

உலகத்தை இணையத்தால் கலக்கியவன் இணையம் இல்லாமல் இருக்கும் நிலை வந்தது. ஈகுவடார் அவருக்கு அளித்த கணினியை பிடுங்கியது. மொபைல் போனில் இணைய சேவையை நிறுத்தியது. அவருக்கும் அந்த நாட்டின் தலைவர்களுக்கு இடையிலேயே கூட நிறைய பிரச்சனைகள் வந்தது. ஆனாலும் அவர் பாதுகாப்பிற்கு குறைவு இல்லாமல் இருந்தார்.

வந்தது குடியுரிமை

இந்த நிலையில் தற்போது ஈகுவடார் அவருக்கு குடியுரிமை வழங்கி இருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மரியா கூறும் போது ”நாங்கள் அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இது அவருக்கு அதிக பாதுகாப்பை அளிக்கும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆட்டமே இனிதான்

இவ்வளவு நாள் அடங்கி இருந்த அசாஞ்சே மீண்டும் இதன் மூலம் புத்துணர்வு அடைந்து இருக்கிறார். ஐந்துக்கு ஐந்து அறையில் இருந்து அகிலத்தையும் பயமுறுத்தியவர் தற்போது வெளியில் நடமாட முடியும். இனி அவரின் விக்கி லீக்ஸ் எதை எல்லாம் லீக் செய்யப்போகிறதோ என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

tamil.oneindia.com