உண்மையில் அவை சிறையில் இருக்கும் அன்வாரின் அறிக்கைகளா, நூர் ஜஸ்லான் கேள்வி

சிறையில் இருந்துகொண்டு அறிக்கைகள் விடும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் நடவடிக்கைகள் குறித்து, உள்துறை துணையமைச்சர் நூர் ஜஸ்லான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறைக் கைதிகள் வெளியிடும், எந்த வகையிலான தகவலும் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று, சிறைச்சாலை தலைமை இயக்குநரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“அண்மைகாலமாக, அன்வார் வெளியிட்டதாகக் கூறப்படும் பல அறிக்கைகளைப் பார்க்கிறேன், அவை உண்மையில் அன்வாரால் வெளியிடப்பட்டவையா,” என்று இன்று ஜொகூர் பாருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீரை நியமிக்க, பிகேஆர் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது, அதற்கு அன்வாரின் ‘ஆசியும்’ கிடைத்துள்ளது எனும் அண்மைய செய்தி குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

“மகாதீரைப் பிரதமர் வேட்பாளராகவும் பக்காத்தான் ஹராப்பான் தலைவராகவும் அறிவிக்க,  3 நிபந்தனைகளை அன்வார் விதிப்பதாக வந்த அறிக்கை உண்மையானதா?

“சிறைச்சாலை இலாகாவால் அங்கீகரிக்கப்படாத அன்வாரின் செய்தியை, மத்தியஸ்தர் யாராவது வெளிகொண்டு வந்தனர் என்றால், அது ஒரு குற்றமாகும், அவரின் தடுப்புக் காலத்தைப் பாதிக்கும்,” என அவர் மேலும் தெரிவித்தார்,

அதுமட்டுமின்றி, அன்வாரின் செய்தியை வெளிகொண்டுவரும் நபர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம், அந்நபர் அன்வாரைச் சந்திப்பதற்குத் தடை விதிக்கப்படலாம்,” என்றும் நூர் ஜஸ்லான் சொன்னார்.

பெர்னாமா