ஜொகூர் அமானா இளைஞர் அணி : உறுப்பினர்கள் புறக்கணிக்கும்படி நடந்துகொள்ள வேண்டாம்

ஜொகூர் நாடாளுமன்ற நாற்காலி பகிர்வில் அதிருப்தியடைந்த, ஜொகூர் அமானா இளைஞர் அணி இன்று, தங்கள் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஜொகூரில் இருக்கும் 56 சட்டமன்றத் தொகுதிகளில், தங்கள் கட்சிக்கு 18 இடங்களைக் கட்டாயம் வழங்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்களிடம் போதுமான தேர்தல் இயந்திரங்கள் இருப்பதோடு, தகுதியான வேட்பாளர்களும் இருப்பதால், இந்தக் கோரிக்கை நியாயமானது என்று அக்கட்சியின் மாநில இளைஞர் தலைவர் முகமட் தக்கியுடின் செமான் கூறியுள்ளார்.

சமநிலையான இருக்கை ஒதுக்கீடு இல்லாமல் போனால், அடிமட்டத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

“தேர்தல் பணிகள் புறக்கணிப்பு ஏற்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஜொகூரில் அமானாவிற்குப் பூலாய் மற்றும் பாரிட் சுலோங் என 2 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, இது கட்சியின் மாநிலத் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜொகூரில், மற்றக் கட்சிகளுக்கு ஈடாக ஜொகூர் அமானாவும் நடத்தப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

“ஜொகூரிலும் நாற்காலி பகிர்வு எங்களுக்குச் சாதகமாக இல்லையென்றால், அமானா துணைத் தலைவர் சலாஹுட்டின் ஆயுப் மற்றும் மாநிலத் தலைவர் அமினோல்ஹூடா இருவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் அவர்.

முன்னதாக இன்று மாலை, கட்சி தலைமைத்துவத்துடன் மாநில அளவிலான ஒரு கூட்டத்தை ஆயேர் ஈத்தாமில் அவர்கள் நடத்தினர். அக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபுவும் கலந்துகொண்டார்.

அதன்பின்னர், அவர்கள் முகமட் சாபு மற்றும் அமினோல்ஹூட இருவரிடமும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவையும் கையளித்துள்ளனர்.