மலேசிய சோசலிசக் கட்சியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

திருவள்ளுவர் ஆண்டின் தை முதல் நாளைத் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக அனுசரித்து வருகின்றனர். இந்நாளைப் பொங்கல் விழாவாகவும் தமிழர் திருநாளாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.

நமது முன்னோர்கள் பொங்கலை அறுவடைக்குப் பின்னர் கொண்டாடி வந்ததால், இதற்கு அறுவடைத் திருநாள் என்ற பெயரும் உண்டு. அன்று இந்தப் பொங்கல் திருநாள் வெறும் விழாவாக மட்டும் அல்லாமல், நம் முன்னோர்களின் தொழில், வாழ்வியல், பொருளாதாரம் என அனைத்தோடும் பிணைந்து இருந்தது. அவர்கள் தங்கள் வாழ்வியலில் இருந்து, பொங்கலைப் பிரித்தெடுத்து ஒரு விழாவாக மட்டும் கொண்டாடியது இல்லை.

ஆனால், இன்றைய மக்கள் பொங்கல் ஒரு கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விழா மட்டுமே என்று கருதுகின்றனர். காலையில் எழுந்து கோயிலுக்குச் செல்லுதல், வீட்டில் பொங்கல் இட்டு சூரியனுக்குப் படையல் இடுதல், அனைவரும் உண்டு களித்தல் இவற்றோடு பொங்கல் விழா நமக்கு நிறைவடைந்துவிடுகிறது.

நம் முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்த, பொங்கல் திருநாளின் உண்மையான நோக்கத்தை நாம் உணராமல் போய்விட்டோம், நமக்கு உணவளித்துவரும் விவசாயிகள், விவசாய நிலம் இவற்றை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டோம்.

இதற்குக் காரணம் மக்களின் அறியாமை, இது ஒரு பக்கம் இருக்க, ஆட்சியில் இருப்பவர்கள் நாம் பொருளாதார பிரச்சனை, உரிமை போராட்டம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், பொங்கலை ஒரு கலாச்சார நிகழ்ச்சியாக மட்டும் கொண்டாடி மகிழ அனைத்தையும் ஏற்பாடு செய்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, மக்கள் தங்கள் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல், ஆட்சியில் இருப்பவர்களைச் சிரமப்படுத்தாமல் இருந்தால் போதும். இதற்கான பல வேலைகளைத் தெளிவாகத் திட்டமிட்டே அவர்கள் செய்து வருகின்றனர்.

நமது முன்னோர்கள், ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்தப் பின், அறுவடை நாளில் கையில் பணம் சேர்ந்தபின், பொங்கலைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், இன்று நம் நிலை அப்படியானதா?

இன்றையப் பொருளாதார நெருக்கடியில், அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைச் சமாளிக்க நாம் போராடிவருகிறோம். ஆனால், இந்தப் பொங்கல் திருநாளில் அதற்காக நாம் குரல் எழுப்புகிறோமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம், பொங்கலை நாம் பொருளாதாரத்தில் இருந்து பிரித்தெடுத்து, ஒரு பண்பாட்டு விழாவாக மட்டுமே உணர்ந்து, கொண்டாடி வருகிறோம்.

ஆக, மக்களிடையே பொங்கல், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் பணியாற்ற வேண்டும். பொங்கல் திருநாளில் மண்பானையில் சோறு பொங்குவதை மட்டும் கருதாமல், அதற்குக் காரணமான விவசாயி மற்றும் இன்னும் பிற தொழிலாளர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்குப் போதிய விவசாய நிலம் உண்டா, நீர் வளம் இருக்கிறதா, தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுகிறதா, அவர்களின் உரிமை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுகிறதா? இவற்றையெல்லாம் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவர்களின் நலன் பேணப்பட்டால்தானே நமது வாழ்வு சீராக அமையும், அதற்காகவாவது அவர்களையும் இந்நந்நாளில் நினைத்து பார்ப்போம்.

நாம் இவற்றையெல்லாம் உணராமல் இருக்க, ஆளும் வர்க்கம் பல கேளிக்கைகளை நமக்கு வழங்கி, நம்மை மகிழ்வித்து வருகிறது. குறிப்பாக, இவ்வாண்டு தேர்தல் நெருங்கி வருவதால், மக்களின் அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சனைகளை மூடிமறைத்து, பொங்கலை மிகச் சிறப்பாகக் கொண்டாட ஆயத்த பணிகளை அரசியல்வாதிகள் இந்நேரம் தொடங்கி இருப்பார்கள். ஆனால், இது தவறான அணுகுமுறை என்பதை அவர்களுக்கும் உணர்த்த வேண்டும்.

பொங்கல் வெறும் பண்பாட்டு நிகழ்ச்சி அல்ல, நம் முன்னோர்கள் அதற்காக அதனைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது தற்போது கட்டாயமான ஒன்றாகிவிட்டது.

ஆக, பொங்கலை பண்பாட்டு விழாவாகக் கொண்டாடாமல், நமது முன்னோர்களின் ஆழ்ந்த கருத்தை நினைவு கூர்ந்து, மக்களின் உரிமைகளைத் தட்டி கேட்கும் ஒரு நாளாக, மக்கள் நலனைப் பேணி காக்கும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் ஒரு நாளாக நாம் அணுசரிக்க வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.

அனைவருக்கும் தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

சிவராஜன் ஆறுமுகம்

தேசியத் தலைமைச் செயலாளர்

மலேசிய சோசலிசக் கட்சி