மாஹ்பூஸ் : பெரும்பாலான மக்கள் மகாதீரை ஏற்றுக்கொண்டனர்

பொதுத் தேர்தல் (ஜி.இ.) நெருங்கி வரும் வேளையில், தாங்கள் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது போலான கூற்றை வெளிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதைப் பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

பாஸ் துணைத் தலைவர் மாஹ்பூஸ் ஓமார், அனைத்து முரண்பாடான கருத்துக்களும் வாக்காளர்களுக்குத் தவறான செய்தியைக் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

“இறுதியில், ஹராப்பான் திடமான முடிவுகளை எடுக்கவில்லை என்று மக்கள் நினைப்பார்கள்,” என்று நேற்று பெட்டாலிங் ஜெயாவில் மலேசியாகினிக்கான ஒரு நேர்காணலில் அவர் கூறினார்.

ஈர்ப்புத் தன்மை கொண்டவர்

பிகேஆர் உட்பட இன்னும் சில தரப்பினர் மகாதீர் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் திருப்தியின்றி இருக்கின்றனர்.

தனிமனிதர் கருத்துகளுக்கு தாம் மதிப்பளிப்பதாகக் கூறிய மாஹ்பூஸ், அதேசமயம் தலைமைத்துவத்தின் முடிவுக்கும் கட்டுப்பட வேண்டுமென்று கூறினார்.

அண்மையில், அதிகாரப்பூர்வமாகப் பாஸ்சில் இருந்து விலகிய மாஹ்பூஸ், மக்களை ஈர்ப்பதற்கு ஹராப்பான் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஹராப்பான் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதிர் தேர்ந்தெடுக்கப்பட்டது, சரியான முடிவு என்றும், பெரும்பாலான மக்கள் அதனை வரவேற்றுள்ளதாகவும் அவர் கருதுகிறார்.

“என்னைப் பொறுத்தவரை, இது ஒரு சிறந்த முடிவாகும். இம்முடிவில் சிலர் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், பெரும்பான்மையான மக்கள் இந்த முடிவை நிராகரிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

22 ஆண்டுகளாக, அரசாங்கத்தை வெற்றிகரமாக நிர்வகித்த டாக்டர் மகாதீரின் திறமையை மறுக்க முடியாது என்றும் மாஹ்பூஸ் தெரிவித்தார்.

“மக்களின் கவனத்தை ஈர்த்து, ஹராப்பான் ஆட்சியைக் கைப்பற்ற, டாக்டர் மகாதீரே சிறந்த தேர்வு.

“வாக்காளர்களின் ஆதரவை அம்னோ-பிஎன் இழக்க, மகாதீரிடம் ஓர் ஈர்ப்புத் தன்மை உள்ளது,” என்றார் அவர்.

மகாதீருடனான ஒத்துழைப்பு, ஹராப்பானுக்கு ஓர் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், முகமட் சாபு மற்றும் அன்வார் ஆகியோருடனான டாக்டர் மகாதீரின் மோதல்கள் பற்றியும் மஹ்பூஸ் தனது கருத்தை விளக்கினார்.

தற்போது பிஎன்- ஐ தோற்கடிக்க, அவர்கள் ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

“இத்தகைய நீண்டகால விரோதப் போக்கை முடிவுக்கு கொண்டுவருவது மக்களுக்கு நல்லது. நமது நாடு ஒரு நிலையான அரசியலைக் கொண்டிருப்பது, மக்களுக்குப் புதிய நம்பிக்கையை கொண்டுவரும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார்.