தேர்தல் எல்லை மீள்வரையறை, வாக்காளர்கள் இடமாற்றம் – லங்காவிக்கு சவாலாக அமைந்துள்ளது

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர், தேர்தல் எல்லைகள் மீள்வரையறை செய்யப்பட்டு, வாக்காளர்கள் பிரிக்கப்பட்டதால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் லங்காவியைக் கைப்பற்றுவது சற்று சிரமமான வேலை என்று கூறியுள்ளார்.

இதுநாள்வரை, அம்னோவின் கோட்டை என்று கூறப்பட்ட அங்கிருந்து, சுமார் 1000 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று, ஜொகூர் கூகுப்பில் நடந்த ஒரு கூட்டத்தின்போது, “தாங்கள் பழைய இடத்தில் வாக்களிக்க முடியாது என்பது, வாக்காளர்களுக்கே இன்னும் தெரியாமல் இருக்கலாம்,” என்று மகாதீர் கூறியதாக நான்யாங் சியாங் பாவ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில், ஹராப்பான் தன்னை வேட்பாளராக அறிவித்தால், தான் லங்காவி அல்லது புத்ராஜெயாவில் போட்டியிட விரும்புவதாக, மகாதீர் மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.

மீனவர் கிராமமாக இருந்த லங்காவியை, உலகளவில் பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலாத் தளமாக உருவாக்கியப் பெருமை மகாதீரையேச் சாரும்.

2013-ம் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலின் வேட்பாளர் நவாவி அஹ்மாட் 57% வாக்குகள் பெற்று  லங்காவி நாற்காலியை வென்றார்.

ஜொகூர் தஞ்சோங் பியாய்யில் அமைந்துள்ள கூகுப் நாடாளுமன்றத் தொகுதியை, ஹராப்பான் இம்முறை பெர்சத்துவுக்கு ஒதுக்கியுள்ளது. 2013-ல், மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மசீச அத்தொகுதியை வென்றது.