இருமொழித் திட்டத்தை அமுலாக்கும் அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மீதும் சட்ட நடவடிக்கை!

தமிழ்வழிக் கல்விக்கு வழிவகுக்கும் தமிழர்களின் ஒரே காப்பகமாக இருக்கும் தமிழ்பள்ளிகளைக் காக்கும் பொருட்டு, சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்க்கல்விக்கு குரல் கொடுக்கும் ஒரு நிபுணத்துவ குழு இன்று அறிவித்துள்ளது.

அவற்றில் முக்கியமானது, இருமொழித் திட்டத்தை 2018-இல் அமுலாக்கம் செய்யும் அனைத்து தமிழ்ப்பள்ளிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதாகும். இவை இந்தத் திட்டத்தை அமுலாக்கம் செய்யும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மலேசியக் கல்வி அமைச்சின் இயக்குனர் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியவற்றின் மீது இவ்வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்படும் என்கிறார் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

2018-ஆம் ஆண்டில் எந்த அளவுக்கு இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் ஊடுருவி உள்ளது என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற பணிக்குழுவை அமைத்துள்ளதாக இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கா. ஆறுமுகம்  கூறினார். அந்தக்  குழு வெளியிட்ட விபரம் வருமாறு:

கடந்த ஆண்டு,  2017-இல் இருமொழித் திட்டத்தில்  ஈடுபட்ட 45 தமிழ்பள்ளிகளுக்கு முறையாக தமிழ் அறவாரியம் வழியாக, அந்தத் திட்டங்களை கைவிடுமாறு ஆலோசனை வழங்கி கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர்ககளுக்கு காலக்கெடுவும் கொடுக்கப்பட்டது. ஒருசில பள்ளிகள் திட்டத்தை கைவிட்ட வேளையில் மற்றப்பள்ளிகள் அவற்றை தொடர்ந்தன.

இந்த வருடம் எங்களின் வழிமுறைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம், கல்விச் சட்டம் மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு உட்பட்டு இருக்கும். அவற்றின் அடிப்படையில்தான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்படும். அதன்படிதான் எங்களின் மனுவும் கோரிக்கையும் வாதங்களும் அமையும்.

தமிழ்மொழிவழி கல்வி வழங்கும் ஒரு கட்டமைப்புதான் தமிப்பள்ளிகள். அதில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் போது தமிழ்ப்பள்ளியின் கட்டமைப்பு ஓர் ஆங்கில பள்ளியாக மாற்றம் காண்கிறது. காரணம், ஐந்து முக்கியமான பாடங்களில் மூன்று பாடங்கள் அதாவது ஆங்கிலமொழிப் பாடம், அறிவியல் மற்றும் கணிதம் ஆங்கிலத்திலும், மலாய் பாடம் மலாய்மொழியிலும் இருக்கும் தறுவாயில் தமிழ்மொழிப் பாடம் மட்டும்தான் தமிழில் இருக்கும்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழ்மொழிவழி கல்வி வழங்கி வந்த நமது தமிழ்ப்பள்ளிகள் உருமாற்றமடைந்து ஆங்கிலப்பள்ளியாக உருவாக இயலாது. ஆனால், அவை கல்விக் கொள்கையின் கீழ் தேசியப்பள்ளியின் வடிவமைப்பை பெறும்.

உதரணமாக, தேசியப்பள்ளிகளில் 15 மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தை தேர்வு செய்தால், அந்தப்பாடம் பள்ளியின் அட்டவணையில் சேர்க்கப்படும். அப்படி நிகழும் போது இருமொழித் திட்டம் கொண்ட தமிழ்ப்பள்ளிக்கும் தேசியப்பள்ளிக்கும் உள்ள வேறுபாடுகள் மிகக் குறைவானதாக அமையும்.

எனவே, திட்டம் என்ற போர்வையில், தமிழ்ப்பள்ளியில் புகுத்தப்படும் இந்த இருமொழித் திட்டம், தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மையை உருமாற்றி, தமிழ்மொழிவழி கல்வி என்ற நிலைப்பாட்டை மாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும். அப்படி சட்டதிற்கு அப்பாற்பட்ட வகையில் உருமாற்றம் செய்யும் பணியை, அரசாங்கம், பெற்றோர்களின் தேர்வு என்ற வியூகயுக்கிதியைக்  கொண்டு அரங்கேற்றம் செய்கிறது. இது நமது கைகளைக் கொண்டு நாமே நமது கண்களைக் குருடாக்கிக்கொள்வதாக அமைகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் கற்பித்தலுக்கு ஒவ்வாத வகையில், இந்தத்  திட்டம் மாணவர்களைத் தரம்பிரித்து அவர்களிடையே வேற்றுமை உணர்வையும் தாழ்வு மனப்பான்யையும் உருவாக்குவதால், இத்திட்டம் தரமான கல்வி சமத்துவமான வகையில் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்ற தேசியக் கல்விக் கோட்பாடுகளுக்கு முரணாக அமைகிறது.

மேலும், தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் போதிக்க தமிழ் கற்ற ஆசியர்கள்தான் தேவை என்பதல்ல. அதை எந்த இனத்தவரும் மேற்கொள்ளலாம். அதேபோல், இருமொழித் திட்டம் வழியாக ஒரு பள்ளி உருமாற்றம் அடையும் போது, அங்கு தமிழ் என்பது ஒரே ஒரு மொழிப்பாடம் மட்டும்தான். எனவே, ஒரு தலைமை ஆசிரியராக ஒருவரை அமர்த்த முற்படும் போது அவர் தமிழ் கற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அப்பணியைச் செய்வதற்கு எந்த இனத்தவராலும் இயலும்.

இருமொழித் திட்டம் அமுலாக்கம் செய்யும் ஒரு தேசியப்பள்ளிக்கு யார் வேண்டுமானலும் தலையாசிரியராக போகலாம். அதேபோல் தமிழ்மொழிவழி கல்வி என்ற கட்டமைப்பை இழந்த தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தமிழர்தான் தலைமையாசிரியராக வரவேண்டும் என்பதில்லை.

மேலும், அறிவியல் மற்றும் கணிதம் என்பது அடிப்படையில் புரிந்து அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள். இவற்றை தமிழ்க் குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த மொழியில்தான் தரமான புரிந்துணர்வைப் பெற இயலும். எனவே, தமிழ்மொழியில் அறிவியல்  மற்றும் கணிதம் கற்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. நமது தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் அறிவியல் மற்றும் கணிதத்திறன் தேசியப்பள்ளிகளின் தேர்வு நிலைகளை அதிகமாக மிஞ்சியுள்ளன. நமது குழந்தைகளின் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றின் அடைவுநிலைகள் தேசியப்பள்ளிகளின் விகிதத்தைவிட அதிகமாக உள்ளன.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, நமது நாட்டில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் அதிகமாகப் பங்கேற்றவர்களும் பரிசுகள் பெற்றவர்களும் தமிழ்மொழியில் இப்பாடங்களைப் பயின்ற நமது தமிழ்ப்பள்ளி குழந்தைகளாவர்.

இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக கட்டிக்காக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளை உருமாற்றம் செய்யும் இந்த இருமொழித் திட்டத்தை அமுலாக்கம் செய்யும் தலைமை ஆசிரியர்கள் அதை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளின் உயிர் தமிழ்மொழிவழிக் கல்வி. ஆங்கிலமொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவோம், அதை மேம்படுத்தும் வழிமுறைகள் அதிகமாகவே அரசாங்க புத்தாக்கக் கொள்கைகளில் உள்ளன. அவற்றை அமுலாக்கம் செய்யலாம்.

தமிழ் எங்கள் உயிர் குழுவில், கா. ஆறுமுகம், செ. சில்வம், நா. இராசரத்தினம், ஆர். பாலமுரளி, வ. கௌத்தம், இலா. சேகரன், இரா. பெருமாள், ஜீவி காத்தையா, சி. பசுபதி, சி. தியாகு, தமிழிணியன், ஜெகா, சுப்பையா, கா. உதயசூரியன், தினகரன், சி. பெருமாள் உட்பட இன்னும் மாநில பிரதிநிதிகளும் உள்ளதாக ஆறுமுகம் தெரிவித்தார்.

இது சமுதாயத்தின் அடையாளமாக உள்ள தமிழ்ப்பள்ளிகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு குழு. இதற்கு தமிழ் ஆதரவாளர்கள் வரவேற்பும் ஆதரவும் நல்குமாறு, ‘தமிழ் எங்கள் உயிர்’ பணிக்குழு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.