ஜொகூரில் ‘பெர்சத்து’ சின்னத்தைப் பயன்படுத்த டிஏபி-க்குப் பரிந்துரை

ஜொகூர் கிராமப்புறங்களில் வசிக்கும் மலாய்க்காரர்கள், டிஏபி மீது அச்சம் கொண்டிருப்பது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கு, குறிப்பாக பெர்சத்துவுக்குத் தடையாக இருக்குமென அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

முன்னதாக, மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் இடங்களில், பெர்சத்து மூலம் வாக்குகளைத் திரட்ட ஹராப்பான் திட்டமிட்டிருந்தது. ஆனால், பாரிசானுக்கு வாக்களிக்கவில்லை என்றால், அது டிஏபி-க்கு அதிகாரத்தை வழங்கும் என பெரும்பான்மை கிராமப்புற மலாய்க்காரர்கள் தன்னிடம் தெரிவித்ததாக அந்த ஆய்வை மேற்கொண்ட வான் சைபுல் தெரிவித்தார்.

இதற்கு, ஜொகூர் பெர்சத்து ஊடகப் பொறுப்பாளர் முகமட் சொலிஹின் பட்ரி, ஜொகூரில் டிஏபி வேட்பாளர் பெர்சத்துவின் சின்னத்தில் போட்டியிட்டால் இப்பிரச்சனையைக் களைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“85 விழுக்காட்டினர் டிஏபியை விரும்பவில்லை, (வான் சைபுல் ஆய்வின் தரவு) என்பதை நான் ஏற்றுகொள்வதாகச் சொல்லவில்லை. ஆனால், டிஏபி மீது மலாய்க்காரர்களுக்கு அதிருப்தி இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

“தலைமைத்துவம் போட்டியிடுவதற்கு ஒரு சரியான சின்னத்தைத் தேர்ந்தெடுக்கும் என நான் நம்புகிறேன், அச்சின்னம் மலாய்க்காரர்களுக்கும் விருப்பமான ஒன்றாக இருப்பதை அவர்கள் உறுதி செய்யவேண்டும்,” என்றார் அவர்.

அம்னோ பிரச்சாரத்தின் விளைவு

ஹராப்பான் தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்ய, பெர்சத்துவின் சின்னம் சுலபமானதாக இருக்கும் என்றும் சொலிஹின் தெரிவித்தார்.

டிஏபி மீதான மலாய்க்காரர்களின் அச்சம், அம்னோவின் பிரச்சாரத்தினால் ஏற்பட்டது என்றும் முன்னாள் அம்னோ தொகுதி தலைவருமான அவர் தெரிவித்தார்.

டிஏபி மீதான அச்சம் அடிப்படையற்றது என்று, தான் ஜொகூர் மலாய் வாக்காளர்களிடம் விளக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஜொகூரில், மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில், டிஏபி 13-ல் மட்டுமே போட்டியிட உள்ளது, கடந்த பொதுத் தேர்தலைப் போன்று. இது நல்லது.

“ஆக, இது மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தைப் பாதிக்காது,” என்றார் அவர்.

பாரிசானைத் தவிர்த்து, வேறு கட்சிகள் ஆட்சியமைத்தால், சிங்கப்பூரில் மலாய்க்காரர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதைப் போன்று, மலேசியாவிலும் நிகழ்ந்துவிடும் என்று ஜொகூர் மலாய்க்காரர்கள் நம்புவதாக அந்த ஆய்வை மேற்கொண்ட வான் சைப்புல் தெரிவித்தார்.