மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.

பீட்டா உள்ளிட்ட சர்வதேச விலங்கு நல அமைப்பினர் மற்றும் இந்தியாவில் உள்ள சில விலங்கு நல ஆர்வலர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் விளையாட்டில் விலங்குகளின் உரிமை மீறப்படுவதாகக் குற்றம்சாட்டி, இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியதால் 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

சமூக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பரவி, தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு, 15 நாட்கள் நடந்த போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு அவரசச்சட்டம் ஒன்றை சட்டசபையில் பிறப்பித்து.

மத்திய அரசின் அனுமதியுடன் பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு தடையில்லாததால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

தை மாத தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவின்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மட்டும் சுமார் ஆயிரம் காளைகள் பங்கேற்கும் என விழா கமிட்டியினர் கூறுகின்றனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு விதிமுறைகள்

21 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

போட்டியில் பங்கேற்கும் காளை ஆரோக்கியமாக உள்ளதா, போட்டியிடும் நபர் 21வயதுக்கு மேற்பட்டவராக, ஆரோக்கியம் உள்ளவராக இருக்கிறாரா உள்ளிட்ட முழுமருத்துவப் பரிசோதனை செய்த பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதி தரப்படும் என ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டி உறுப்பினரான கோவிந்தராஜன் தெரிவித்தார்.

”கடந்த ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அவசரச்சட்டத்தின் படி ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. விளையாட்டைப் பொருத்தவரை, காளையின் திமில் பகுதியை பிடித்தவாறு 15மீட்டர் அல்லது 30 வினாடிகள் அளவுக்கு அல்லது மூன்று துள்ளல்கள் வரை போட்டியாளர் காளையுடன் ஓடவேண்டும். காளையின் ஓட்டத்தை வால், கொம்பு பகுதிகளைப் பிடித்து தடுத்துநிறுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

மேலும், “ஏழு மணிநேரம் நடைபெறும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு மணிநேரமும் நூறு இளைஞர்கள் மைதானத்தில் இறங்குவார்கள்” என்றார் அவர்.

காளை மற்றும் பங்கேற்கும் இளைஞர் என இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் போதைப் பொருள் பயன்பாடு இருந்தால் போட்டியில் இருந்து உடனடியாக விலக்கப்படுவார்கள் என்றும் கோவிந்தராஜன் கூறினார்.

காளைகளுக்குப் பயிற்சி

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் நாட்டுரக காளையை வளர்ப்பது குடும்ப பெருமையைக் காட்டும் என்பதாலும், கலாச்சார விளையாட்டைப் பாதுகாக்கும் நோக்கமுடையது என்பதாலும் பலநூறு குடும்பங்கள் காளைகளை வளர்த்துவருகின்றன.

காளைக்கு சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சியும் அளிப்பதாகக் கூறுகின்றனர்.

செங்கல்சூளையில் வேலைசெய்யும் முத்துக்குமார்(41) இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறார். ”எட்டு ஆண்டுகளாக இரண்டு காளைகளை வளர்க்கிறேன். போட்டியில் பங்கேற்கும் காளைக்கு ஆரோக்கியம் மிக முக்கியம். காளைக்கு பருத்தி, எள் புண்ணாக்கு, தேங்காய், பேரிச்சை, தானியங்கள் கொடுக்கிறேன். தினமும் நீச்சல் மற்றும் நடைப்பயிற்சி அளிக்கிறேன்” என்றார் முத்துக்குமார்.

போட்டியில், காளைகளை அடக்கவருபவர்களை எதிர்கொள்வது காளையின் தனித்திறன் என்றும் முத்துகுமார் தெரிவித்தார்.

”ஜல்லிக்கட்டுக்கு ஏற்ற காளையா என்று காளை சிறுவயதில் உள்ளபோதே பார்த்துத்தான் முடிவுசெய்யவேண்டும். வெறும் பயிற்சி மட்டும் உதவாது. காளைக்குச் சொந்தமான நபர்களைத் தவிர பிறரைக் கண்டு அஞ்சாத காளையாக நம் காளை இருந்தால் மட்டுமே அதை போட்டிக்கு கொண்டுபோகமுடியும்,” என்றார் முத்துக்குமார்.

பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள்

காளைகளைப் போலவே, காளையை அடக்கும் இளைஞர்களும் போட்டிக்குத் தயாராகின்றனர்.

மாடுபிடிக்கும் பயிற்சி, ஓட்டம், நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுவதாக போட்டியாளர் ரஞ்சித்(23) கூறுகிறார். பொறியியல் பட்டதாரியான ரஞ்சித் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வயிற்றுப் பகுதியில் காயம் அடைந்திருந்தாலும், வெற்றி பெற்றதால் வலி தெரியவில்லை என்றும் இந்த ஆண்டும் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ளதாகவும் கூறுகிறார்.

இதுவரை 25 காளைகளை அடக்கி போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதாகக் கூறும் ரஞ்சித், ‘ஜல்லிக்கட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடந்தாலும், நாங்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்வோம். வாரம் ஒரு முறை மாடு பிடிக்கும் பயிற்சி செய்கிறோம். யாரும் வெல்ல முடியாத காளையை அடக்கவேண்டும் என்று முடிவுசெய்து விழாவில் பங்கேற்கிறோம். பிற விளையாட்டுக்களைப் போலவே, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கும் உடற்தகுதிகள் மிக அவசியம்,” என்கிறார் ரஞ்சித்.

மூன்றுவிதமான ஏறுதழுவுதல் விளையாட்டு

மூன்று விதமான ஜல்லிக்கட்டு நடப்பதாகவும், ஒவ்வொன்றுக்கும் பயிற்சி தனிப் பயிற்சி அவசியம் என்று கூறுகிறார் மற்றொரு மாடுபிடி வீரர் முகமது அலி(20).

”வாடிவாசலில் நடக்கும் ஜல்லிக்கட்டு, வடஜல்லிக்கட்டு மற்றும் வெளிவிரட்டு என மூன்றுவிதமான மாடுபிடி விளையாட்டுகள் உண்டு. ஒரு விளையாட்டில் பழக்கப்பட்டவர்கள் மற்ற இரண்டிலும் பங்கேற்பது அவ்வளவு சுலபம் இல்லை,” என்கிறார்.

”வெளிவிரட்டு என்பது வயலில் காளையை அவிழ்த்துவிடுவார்கள். காளையை வயல்பகுதியில் ஓடிப்பிடிக்கவேண்டும். ஒன்பது பேர் மட்டும் விளையாட்டும் விளையாட்டு வடஜல்லிகட்டு. பொங்கல் திருவிழாவின்போது வாடிவாசல் ஜல்லிக்கட்டு நடக்கும். மற்ற இரண்டும் ஊர் கோயில் திருவிழாவின் போது நடக்கும்,” என்று கூறினார் முகமது அலி.

ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இருந்த தடை நீங்கியுள்ளதால், இந்த ஆண்டு சிறந்தமுறையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக விழாக் கமிட்டியினர் கூறுகின்றனர்.

மதுரையில் நடக்கும் போட்டிகளைப் பார்க்க வரும் வெளிநாட்டினருக்கு தனி அரங்கு, போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை நடத்த உதவிய இளைஞர்களுக்கு பார்வையாளர் மையத்தில் தனியிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர். -BBC_Tamil

TAGS: