பிரதமர் பதவிக்கு வயது ஒரு கட்டுப்பாடா?

-கி.சீலதாஸ். ஜனவரி 16, 2018.

ஜெர்மனியின்  அதிபர்,  சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர்  மற்ற  நாடுகள்  ஆக்கிரமிப்பில்  கொம்பனாக  விளங்கினார்.  ஐரோப்பிய  நாடுகளை  தமது  கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவரவேண்டும்  என்பது  அவரின்  பேராசை.  ஜெர்மனி  வம்சமே  உயர்வானது,  தனித்தன்மை  வாய்ந்தது. அது  மட்டுமே  ஆளும்  தகுதி  கொண்டது  என்று  பிரச்சாரம்  செய்தார்.  பெரும்பான்மையான  ஜெர்மனியர்  அவரை  நம்பினர்,  முழுமையாக  ஆதரித்தனர்.

 

ஹிட்லரின்  மண்ணாசையைப்  பலர்  கண்டித்து  சாடினார்கள்  இதெல்லாம்  அன்றைய  பிரிட்டிஷ்  பிரதமர்  நெவில்  செம்பர்லெய்ன்  பொருட்படுத்தியதாகத்  தெரியவில்லை.  செவிடன்  காதில்  ஊதிய  சங்கு  போலிருந்தது.  ஹிட்லரின்  போக்கு  உலக  அமைதிக்கு  ஊறுவிளைவிக்கும்  என்று  வின்ஸ்ட்டன்  சர்ச்சில்  எச்சரித்தார்.  அதையும்  புறக்கணித்தார்  செம்பர்லெய்ன்.  ஹிட்லர்  போலந்து  மீது  போர்  நடவடிக்கை  மேற்கொண்டதும்  பிரிட்டன்  ஜெர்மனி  மீது  போர்  பிரகடனம்  செய்தது.

இரண்டாம்  உலகப்போரின்  ஆரம்பத்தில்  பிரதமராக  இருந்த  செம்பர்லெய்ன்  அந்தப்  பொறுப்பில்  இருந்து  விலகிக்  கொண்டதும்,  சர்ச்சில்  பிரதமரானார்.  சில  காலமாகவே  அரசியலில்  இருந்து  ஒதுக்கப்பட்டவர்  சர்ச்சில்.  தமது  அறுபத்தாறாம்  வயதில்  பிரதமர்  பொறுப்பை  ஏற்றதும்  அவரின்  பரம  விரோதியான  கம்யூனிஸ்ட்  ரஷ்யாவுடன்  உடன்பாடு  கண்டார்.  ஹிட்லரின்  மனநிலையை  உணர்ந்த  ரஷ்யா  பிரிட்டனோடு  இணக்கம்  காண  எடுத்துக்கொண்ட  முயற்சிகள்  செம்பர்லெய்ன்  நிர்வாகத்தின்போது  மதிப்பளிக்கப்படவில்லை.  சர்ச்சில்  நிர்வாகத்தில்  மாற்றம்  காணப்பட்டது.  அமெரிக்கா,  பிரிட்டன் மற்றும்  பிராஞ்சு  ஆகிய  நாடுகள்  கண்ட  கூட்டணி  பலத்த  உயிர்  சேதங்களுக்குப்  பிறகு  ஜெர்மனி மற்றும்  அதன்  நட்பு  நாடுகளைத் தோற்கடித்தது.

 

இரண்டாம்  உலகப்போர்   முடிவுக்கு  வந்தது.  இங்கே  கவனிக்க  வேண்டியது  என்ன?  தம்  நாட்டுக்கு  ஆபத்து  எனும்போது  சித்தாந்த  வேறுபாடுகளுக்கு  வழிவிடாமல்  பொதுநலனுக்கு  மதிப்பளிப்பதே.

 

இந்தியாவை  எடுத்துக்கொண்டால்  அங்கும்  ஒரு பெரிய  வரலாற்று  சம்பவம்  அரங்கேற்றப்பட்டது.  இந்திய  அரசியலில்  முன்னணி  வகித்தவர்  சக்கரவர்த்தி  ராஜகோபாலச்சாரியார்.  இந்தியாவின்  முதல் தலைமை  ஆளுநர் (கவர்னர்  ஜெனரல்).  காங்கிரஸ்  கட்சியின்  தலைவராகவும்  பணியாற்றினார்.  இவரை  ராஜாஜி  என்று  அழைப்பார்கள்.  இருமுறை  மதராஸ் (இப்பொழுது  தமிழ்  நாடு)  மாநிலத்தின்  முதலமைச்சராக  பதவி  வகித்துள்ளார்.  காங்கிரஸ்  கட்சியின்  போக்கு  நாட்டுக்கு  ஆபத்தை  விளைவிக்கும்  என்று  தீர்மானித்துப்  புது  அரசியல்  கட்சி  ஆரம்பித்தார்.  அதுதான்  சுதந்திரா  கட்சி.  அறிஞர்  அண்ணாதுரையின்  திராவிட  முன்னேற்றக்  கழகத்தோடு  உடன்பாடு  கண்டு  1967ஆம்  ஆண்டு  நடந்த  தேர்தலில்  வெற்றி  காணப்பட்டது.  அதற்குப்  பிறகு  தமிழகத்தில்  காங்கிரஸ்  பின்தங்கிய  நிலையில்தான்  இன்றும்  இருக்கிறது.  ராஜாஜி  காங்கிரஸ்  எதிர்ப்பு  நடவடிக்கை  மேற்கொண்டபோது  அவருக்கு  வயது  எண்பத்தெட்டு.  அந்த  வயதிலும்  அரசியல்  ஆர்வம்  மிகுந்து  காணப்பட்டதற்குக்  காரணம்  நாட்டின்  மீது  அவருக்கு  இருந்த  பற்று  என்றுதான்  சொல்ல  வேண்டும்.

இதையெல்லாம்  நினைத்துப்  பார்க்கும்போது  நாம்  சிந்திக்க  வேண்டியது  என்ன?  எதை  எல்லாம்  கவனத்தில்  கொண்டிருக்க  வேண்டும்?

நாட்டின்  நிலை  எப்படி  இருக்கிறது?  நாட்டுத்  தலைவர்களின்  நாணயம்  எந்த  அளவில்  உயர்ந்து  நிற்கிறது?  அல்லது  அவர்களின்  நாணயத்தில்  சந்தேகம்  ஏற்படுகிறதா?  நாட்டில்  ஊழல்  எந்த  அளவில்  காட்டுப்பாட்டிற்குள்  இருக்கிறது  அல்லது  ஊழலை  ஒழிக்க  எடுக்கப்படும்  நடவடிக்கைகள்  திருப்திகரமாக  இருக்கின்றனவா?  இதுவரை  நாட்டில்  நடந்த  சம்பவங்கள்  எப்படி நாட்டின்  கௌரவத்தைப்  பாதித்துவிட்டது?  இதுவரை  சம்பந்தப்பட்டது  தலைவர்களின்  விளக்கங்கள்  ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளா?  நாட்டு  நடப்பு  எந்த  அளவுக்கு  வெளிநாட்டவர்களின்  கவனத்தை  ஈர்த்துள்ளது?  அவர்கள்  மலேசியர்களைத்  திறம்  மிக்கவர்கள்  பட்டியலில்  சேர்த்தார்களா?  இல்லை,  நாட்டு  நிலவரம்  மலேசியர்களைத்  தலைகுனிய  வைக்கிறதா?  இவை  யாவும்  சிந்திக்க  வேண்டிய  கேள்விகள்,  பிரச்சனைகள்.

அதைவிடுத்து  எதிர்க்கட்சியினர்  பிரதமர்  வேட்பாளர்  துன்  மகாதீரின்  வயதை  ஒரு  பிரச்சனையாக  கிளறுவதில்  நியாயம்  இருப்பதாகத்  தெரியவில்லை.  முதிர்ந்த  வயதைக்  காரணம்  காட்டுவதைப்  பார்த்தால்  அவரின்  நிர்வாக  தகுதியை  ஏற்றுக்கொள்வதாகவே  நினைக்கச்  செய்யும்.  நாடு  போரை  எதிர்கொள்ளும்போது  போர்  வீரர்கள்  இளம்  வயதினராக  இருப்பார்கள்.  ஆனால்,  அவர்களுக்குப்  போர்  வியூகங்களை  வழங்குவது  அனுபவமிக்க  வயதானவர்கள்  என்பதை  மறந்தால்  நாட்டிற்குக்  கேடுதான்.

வாக்காளர்கள்,  ராமன்  ஆண்டால்  என்ன,  ராவணன்  ஆண்டால்  என்ன என்ற  மனநிலையைக்  கைவிட்டு  நம்மால்  என்ன  செய்ய  முடியும்  என்பதைச்  சிந்திக்க  ஆரம்பித்தால்,  நன்று.