ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முதல்-மந்திரியான சில நாட்களிலேயே 20 எம்.எல்.ஏக்களை பாராளுமன்ற செயலாளர்களாக நியமித்தார்.  இதனால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள் ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தல் ஆணையத்திலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.  இரட்டை ஆதாய புகாரில் 21 எம்.எல்.ஏக்களில் ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால் அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மீதி 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.  ஆதாயம் தரும் பதவியில் இருப்பதால் எம்.எல்.ஏ. தகுதியை 20 பேரும் இழக்கிறார்கள்.   70 பேர் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் 66 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனையடுத்து, அந்த தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் வாய்ப்பு உள்ளது.  இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: