ஶ்ரீ ராம்: அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தை அமல்படுத்த முடியாது

 

அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ அமல்படுத்த முடியாது, ஏனென்றால் அது நாடாளுமன்றத்தால் இயற்றப்படவில்லை, அதோடு அது மக்களின் பேச்சுரிமையை மீறுகிறது என்று பெடரல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் இன்று கூறினார்.

பெடரல் அரசமைப்புச் சட்டம் ஆகஸ்ட் 31, 1957 இல் நடைமுறைக்கு வந்தது. அதன் பிரிவு 10 (1) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கும் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒருங்கு கூடுதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் மீது நாடாளுமன்றம் பிரிவு 10 (2) இன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று கூறுகிறது என்றார் ஶ்ரீ ராம்.

தேச நிந்தனைச் சட்டம் 1948 பிரிட்டீஷாரிடமிருந்து சுதந்திரத்திற்கு முன்பு பெறப்பட்டது என்பதையும் அது பேச்சு சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளும் போது, அது அமலாக்கம் செய்யப்பட முடியாது என்று ஶ்ரீ ராம் வாதிட்டார்.

“பிரிவு 10 (1) இன் கீழ் அளிக்கப்பட்டிருக்கும் எந்த சுதந்தரங்களின் மீதும் கட்டுப்பாடு விதிக்கும் எந்த ஒரு சட்டமும் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

“தேச நிந்தனைச் சட்டம் 1948 சட்டப்படிச் செல்லக்கூடிய சட்டம், ஆனால் அது நாடாளுமன்றத்தால் இயற்றப்படவில்லை. ஆகையால் அதை நீங்கள் அமல்படுத்த முடியாது.

“அதனால், நீங்கள் அச்சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குத் தொடர முடியாது” என்று கோலாலம்பூரில் சிலாங்கூர் வழக்குரைஞர் மன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் ஶ்ரீ ராம் கூறினார்.