எக்ஸ்சேஞ் 106 கோபுரம், கேஎல்சிசி கோபுரத்தைவிட உயரமானது

பிரதமர் நஜிப்பின் பெருமைக்குரிய மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றான, ‘எக்ஸ்சேஞ் 106 கோபுரம்’ மலேசியாவின் ஆக உயர்ந்த கட்டிடம் என்ற பெயரை எடுக்கவுள்ளது.

துன் ரசாக் எக்ஸ்சேஞ்-இன் ஒரு பகுதியான இக்கோபுரத்தின் கட்டுமானப் பணிகள், இவ்வாண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 492 மீட்டர் உயரம் கொண்ட அக்கோபுரம், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தை (452 மீட்ட்டர்) விட உயரமானது.

இந்தோனேசியாவின் மூலியா குரூப் நிறுவனத்தின் தயாரிப்பில், சீனா ஸ்டேட் கொண்ஸ்ட்ரக்சன் எஜ்ஜினரிங் கோப்பரேசனின் தலைமையிலான குத்தகையில், இக்கோபுரம் கட்டப்பட்டு வருவதாக பெரித்தா ஹரியான் செய்தி கூறுகின்றது.

துன் ரசாக் எக்ஸ்சேஞ் மேம்பாட்டுத் திட்டத்தின் மற்ற கட்டுமானப் பணிகள் 1எம்டிபி பிரச்சனையில் சிக்கியுள்ள போதும், சீன நாட்டின் இறக்குமதி தொழில்நுட்பத்தால், எக்ஸ்சேஞ்106 கோபுரம் 3 நாட்களுக்கு ஒரு மாடி என அதிவேகத்தில் வளர்ந்துவந்தது.

1எம்டிபி தொடர்பான விஷயங்களால், தி.ஆர்.எக்ஸ். கூட்டு நிறுவனப் பங்காளர்களுக்கு நிதி வழங்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன என்று, கடந்த மே 2016-ல், 2-ஆம் நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார்.

அதன்பின்னர், தி.ஆர்.எக்ஸ். நிதியமைச்சின் கீழ் மாற்றப்பட்டது.

எக்ஸ்சேஞ்106 கோபுரத்தின் 51 விழுக்காடு பங்குகளை நிதி அமைச்சு கொண்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நிதி அமைச்சுக்கு சொந்தமான 1எம்டிபி நிறுவனம் விற்ற 3.42 ஏக்கர் நிலத்தில், தற்போது எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் கட்டப்பட்டு வருகிறது.