நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

சங்க காலத்து இலக்கியங்களில் ஒளவையார் அருளிய பாடல்கள், படைப்புகள் தமிழ் கூறும் நல் உலகத்துக்கு ஆழம் பொதிந்த பல கருத்துகளை நிறைவாக அள்ளி வழங்கியுள்ளன.

ஒளவையார் இயற்றிய உலக நீதியில் வருகின்ற, ‘நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்’ என்ற பாடலின் நான்காவது அடியாக அமைந்ததே ‘நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்’ என்பது ஆகும்.

தற்போதைய ஆட்சியாளர்கள், இந்நாட்களில் நடத்தி வருகின்ற நல்லிணக்க  வகுப்பை, மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஒளவையார் தமிழ் மக்களுக்குத் தெளிவாக நடாத்தி முடித்து விட்டார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ‘தீயினால் சுட்ட புண்’ (நீண்ட கால ஆயுதப்போர் இழப்புகள்) சற்றும் மாறாத நிலையில், அதில் மீண்டும் தேள் கடிக்க விரும்பமாட்டார்கள்.

கடந்த 2015 ஜனவரி எட்டாம் திகதி, மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும் உயர்ந்த நல்லிணக்கத்துடனும் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினர். அரசியல் கட்சிகளது தூண்டுதல்கள், வற்புறுத்தல்கள் இன்றித் தாமாகவே, நல்லிணக்கத்தைத் தமிழ் மக்கள் வேண்டி நின்றனர்; வரவேற்றனர்.

இவ்வாறாக, மக்கள் தாமாகவே உணர்ந்து, உறுதியாக, உண்மையாக, உரைத்த நல்லிணக்கம் உயர்வானது. இதுவே நீடிக்கக் கூடியது; நிலையானது.

ஆனாலும், நம் நாட்டில் நல்லிணக்கம் என்னமோ நடுக்கத்துடனும் ஏக்கத்துடனும் தொடர்ந்து நாட்களைக் கடத்திக் கொண்டு போவதாகவே, தமிழ் மக்கள் தரப்பில் உணரப்படுகின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான எட்டு வருட காலப் பகுதியில், வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலைகளை நிறுவுதல், விகாரைகளை நிர்மாணித்தல், பௌத்த புராதன இடங்கள் எனத் தமிழரின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களை அடையாளப்படுத்தல், படைக்குக் காணி பிடித்தல் போன்ற செயற்பாடுகள், கடந்த காலங்களைப் போன்று எவ்விதத்திலும் குறைவின்றி, தளர்வின்றி, ஓய்வின்றி நடைபெறுகின்றது.

இதைத்தடுக்கும் ஆற்றல் மற்றும் வல்லமை தமிழ்த் தரப்புகளிடம் அறவே இல்லை என்பதை சிங்களம் ஐயம்திரிபற அறியும். இவ்வாறாக நன்கு அறிந்தும், தெரிந்தும், மீண்டும் மீண்டும் அதைச் செய்வது, தமிழர்கள் மனங்களில் எவ்வாறு நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்கும்.

வடக்கு மாகாணத்தில் படையினர் வசமிருந்த எண்பது சதவீதமான பொது மக்களின் காணிகள், மீளவும் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஐனாதிபதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஐனாதிபதி கூறுவது ‘பச்சைப் பொய்’ என ஆதாரத்துடன், தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், ஐனாதிபதிக்கு மறுஅறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் மக்கள், கடந்த 70 வருட சுதந்திர வாழ்வில் (?) தமது பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்களின் பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் நிலத் தகராற்றில், வலுவிழந்தவர்களாகவே இன்றுவரை இருப்பது கண்கூடு.

இவ்வாறாகத் தமது பரம்பரைச் சொத்தான நிலங்களைத் தொலைத்து, மானம் இழந்து, மனம் அழுது, உள்ளம் வெதும்பி, நடைப்பிணங்களாகத் தமிழ் மக்கள் வாழும் வாழ்வை, அவர்கள் நிலையிலிருந்து அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்; விளங்கும்.

இங்கு கூட, நம் ஒளவைப்பாட்டி ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அதாவது, ‘மண் நின்று, மண் ஓரம் சொல்ல வேண்டாம்’ எனத் தனது பாடலில் வலியுறுத்தி உள்ளார். இதன் கருத்து, ‘நிலத் தகராற்றில் ஒரு தலைப்பட்சமாகத் தீர்ப்பு வழங்கக் கூடாது என்பதாக உள்ளது. ஆனால், எம் நாட்டில் நடப்பதோ?
நடப்பு நாட்களில் நடந்து வருகின்ற தேர்தல் பரப்புரைகள், நல்லிணக்கத்தைச் சிதைத்து விடுமோ என்ற அச்ச நிலையும் மறுபக்கத்தில் உண்டு.

ஏனெனில், “ஒற்றை ஆட்சிக்கு உங்கள் வாக்கா அல்லது தமிழீழத்துக்கு உங்கள் வாக்கா எனச் சிந்தித்து வாக்குகளை அளிக்குமாறு” தெற்கில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் மேடையில் முன்னாள் ஐனாதிபதி மஹிந்த அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது காணப்படுகின்ற கள நிலவரங்களின் பிரகாரம் தமிழீழத்தை அடையும் நிகழ்தகவு பூச்சியத்தில் உள்ளது. இந்தவேளையில், உண்மைக்குப் புறம்பான, இவ்வாறான கருத்துகள் கொஞ்சமாக மலர்ந்து கண்திறந்து எட்டிப் பார்க்கும் நல்லிணக்க மொட்டைக் கருக்கி விடும், ஆபத்தான நிலைகள் நிறையவே உள்ளன.

ஒருபக்கத்தில் நல்லிணக்கம் தொடர்பில் கதைத்துக் கொண்டு, மறுபக்கத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்றும் வேறு திட்டங்களினூடாகச் சிங்கள மக்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றப்படுகிறது.

தமிழ் மக்களது பாரம்பரிய மீன்பிடி இடங்கள் பறிபோகின்றன; ஆளணிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி சிங்கள உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு போன்ற இடங்களில் உள்ள அரச அலுவலகங்களில் நியமிக்கப்படுகின்றார்கள். ஆனால், அங்கு பல்வேறான தரங்களில் வேலைவாய்ப்புக் கேட்டுப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.  அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்குப் பாதகமான பல திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறைந்த பட்சம் இவற்றைத் தடுத்து நிறுத்தாமல் தமிழ் மக்கள் மனதில் நல்லிணக்கம் எவ்வாறு மலரும், வளரும்?

முன்னைய ஆட்சியாளர்கள் தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்திடம் இன்னமும் சான்றுகள் அழியாமல் உள்ளன என அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஐனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் யுத்தத்தால் கொடூரமாக வேதனையை அனுபவித்தவர்கள். அது தொடர்பாக அவர்களால் முன்வைக்கப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகள் தமிழ் மக்களுக்கு இதுவரை எவ்வித நிவாரனத்தையும் பெற்றுத் தரவில்லை.

ஆனால், மறுவளமாக மஹிந்தவை மறைமுகமாக மிரட்ட அல்லது விரட்ட மட்டுமே ஐனாதிபதியால் யுத்தக்குற்றசாட்டுகள் பயன்படுத்தப்படுவது போன்றதானது வேதனையான விடயம் ஆகும்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர், அணு குண்டைத் தனது மடியில் ஏந்திய நாடு ஐப்பான். நாடே உருக்குலைந்தது என்று கூடக் கூறலாம். ஆனால்,அத்தனை இடர்கள், இழப்புகள் அனைத்தையும் ஏறி மிதித்து, இன்று பிரபஞ்சத்தில் பலம் மிக்க அபார வளர்ச்சி அடைந்த நாடாக மிளிர்கின்றது.

நம் நாட்டில், துட்டகைமுனு, எல்லாள மன்னனை வெற்றி கொண்டது முதல், மஹிந்த, பிரபாகரனை வெற்றி கொண்டது வரை, அதிகம் பேசப்படுகின்றது. துட்டகைமுனுவின் வெற்றி தொடர்பில் பாடசாலை மாணவர்களது வரலாற்று பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்தவின் வெற்றி தொடர்பில் பாடப்புத்தகங்களில் பாடப்பரப்பாக அமைந்தாலும், ஆச்சரியப்படுவதற்கு என ஒன்றும் இல்லை.

ஆனால், இந்த வெற்றிகள் எம் தேசத்தில் அனைவர் மனங்களிலும் சமாதனத்தை ஏற்படுத்தவில்லை. அத்துடன் இவ்வாறான வெற்றிகள் நல்லிணக்கத்தையும் தோற்றுவிக்கவில்லை.

எமது நாட்டில், ஒவ்வோர் இன மக்களும் ஒவ்வொரு துருவங்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மற்றைய இனத்து மக்களது மன நிலையை அறியாதவர்களாகவே கணிசமானோர் வாழ்கின்றனர்.

சிங்கள மக்கள், தமிழ் மக்களது வீடுகளுக்குத் தயவு கூர்ந்து வருகை தர வேண்டும். அவ்வேளையில் தங்களது உறவுகளை யாரிடம் பறிகொடுத்தோம், எவ்வாறு பறிகொடுத்தோம் எனப் பாதிக்கப்பட்டவர்கள் விலாவாரியாகக் கூறுவார்கள்.

அவர்களது கதைகள் நிச்சயமாக சிங்கள மக்களைக் குற்ற உணர்ச்சியை நோக்கித் தள்ளும்; தள்ள வேண்டும். அவர்களது குற்றஉணர்ச்சி அவர்களை அரசியல் தீர்வு நோக்கித் தள்ளலாம்.

நம்நாட்டு மக்கள் இன ரீதியான பாகுபாடுகள், மத ரீதியான வேறுபாடுகள் பிரதேசவாதங்கள் என  வெவ்வேறு வகையான வேறுபாடுகளோடும் வேற்றுமைகளோடும் மட்டுமே நீண்ட காலமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், பிற இனங்களை மற்றும் மதங்களை மதிக்கும் தன்மைகள், சகோதர மனப்பான்மைகள் நம் நாட்டில் மிகவும் தட்டுப்பாடான அருந்தலாக உள்ள அம்சங்களே ஆகும்.

இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நலமான, நன்மை பயக்கும், நடுக்கமற்ற நல்லிணக்கம் மலர்வது சுலபமான விடயம் அல்ல. ஆனாலும் இனங்களுக்கிடையில் உண்மையான சக வாழ்வு மலர, அது நீடிக்க ஆரோக்கியமான கருத்து ஒருமைப்பாடு மிகவும் அவசியமானதாகும்.

எது, எவ்வாறு, எப்படிக் காணப்படினும் நல்லிணக்க முயற்சிகள் மேலும் வலுவூட்டப்பட வேண்டும். தற்போது பெரும்பான்மை மக்களது விருப்பங்களை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுகின்றார்கள்.

அதேபோலவே, இன மத வேறுபாடுகளைக் கடந்து நல்லிணக்கத்தை மட்டும் நேசிப்பவர்கள் பெரும்பான்மையினராகத் தோற்றம் பெற வேண்டும்.

அந்த நல்லிணக்கத்தை விரும்பும் பெரும்பான்மையினரது விருப்பங்களை நிறைவேற்றுமாறு ஆட்சியாளர்களை நிர்ப்பந்திக்க வேண்டும்.

அந்தவகையில் நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் என்ற ஒளவையின் மொழிக்கு மறுமொழி சிங்கள மக்கள் மற்றும் சிங்கள ஆட்சியாளர் கைகளிலேயே உள்ளது.

தமிழ் மக்களது கை சமாதான ஓசை ஒலிக்க (தட்ட) எவ்வேளையிலும் தயாராக உள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் கையை நீட்டுவார்களா?

-tamilmirror.lk

TAGS: