மலேசியாகினி ரிம350,000 நிதி திரட்டும் இலக்கை அடைந்தது

 

மலேசியாகினி அதன் சட்டப் பாதுகாப்பு நிதி திரட்டல் நோக்கத்தில் வெற்றி பெற்றது. 12 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த நிதி திரட்டல் நேற்று அதன் குறிக்கோளை அடைந்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் மலேசியாகினிக்கும் ரவுப் ஆஸ்திரேலியன் தங்கச் சுரங்க நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கில் மலேசியாகினி அந்த தங்கச் சுரங்கத்திற்கு இழப்பீடாகவும் வழக்கின் செலவுத் தொகையாகவும் ரிம350,000-ஐ அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இவ்வளவு பெரிய தொகையை இரண்டு வாரத்திற்குள் திரட்டுவது மிகக் கடினமான செயலாகும்.

மலேசியாகினிக்கு பலவகையில் வருமானம் வந்தாலும் அதன் நிருவாகச் செலவுகளைச் சமாளிப்பதே ஒரு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்களிடமிருந்து நிதி திரட்ட வேண்டியதாக இருக்கிறது என்று மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கான் கூறினார்.

12 நாள்களுக்குள் ரிம350,000-ஐ 2,175 ஆதரவாளர்கள் வழங்கியுள்ளனர். முதலாளிகளோ, நிறுவனங்களோ நிதி வழங்கவில்லை. தொழிலாளர்கள், சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து இந்நிதியை வழங்கியுள்ளனர்.

ஆதரவு அளித்த அனைவருக்கும் தங்களுடைய ஆழ்ந்த நன்றியை முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கானும் தலைமை நிருவாகி ரமேஷ் சந்திரனும் தெரிவித்துக் கொண்டனர்.

மலேசியாகினிக்கு எதிரான வழக்கை எவ்விதக் கட்டணமும் கோராமல் இலவசமாக நடத்திய வழக்குரைஞர்களும் அவ்விருவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.