பிஎஸ்எம் : குறைந்தபட்ச சம்பளத்தை ரிம 1,500-ஆக உயர்த்தவும்

கடந்த ஜனவரி 15-ம் தேதி, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்), தேசியச் சம்பள தொழில்நுட்பக் குழுவுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டது. கடந்தாண்டு நவம்பர் 29-ல், தேசிய சம்பள ஆலோசனைக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் தொடர் நடவடிக்கையாக இச்சந்திப்பு நடைபெற்றது.

2018, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் தொகையை மறுஆய்வு செய்யும் ஆண்டாகும்.

2013-ல், அரசாங்கம் குறைந்தபட்ச மாதச் சம்பள சட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியது. அப்போது, தீபகற்ப மலேசியாவுக்கு ரி.ம.900-ம், சபா மற்றும் சரவாக்கிற்கு ரி.ம.820-ஆகவும் தொடங்கிய  குறைந்தபட்ச மாதச் சம்பளம், ஜூன் 2016-ல் கொஞ்சம் உயர்த்தப்பட்டு, தீபகற்ப மலேசியாவிற்கு ரி.ம.1000-மாகவும், சபா மற்றும் சரவாக்கிற்கு ரி.ம.920-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

இவ்வருடம் குறைந்தபட்ச சம்பளம் ரி.ம.1500 ஆக உயர்த்தப்பட வேண்டும் என, பிஎஸ்எம் கடந்த 29 நவம்பர் 2017-ல், மனிதவள அமைச்சின் தேசியச் சம்பள ஆலோசனைக் குழுவிடம் மனு சமர்ப்பித்திருந்தது.

அப்போது, பிஎஸ்எம் முன்வைத்த ரி.ம.1500 சம்பள உயர்வுக்கான காரணங்களைத் தேசியச் சம்பளத் தொழில்நுட்பக் குழுவிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்கள்தான் அந்தச் சம்பள கணக்கினைச் செய்கின்றனர் என்றும் மனிதவள அமைச்சு கூறியது.

பிஎஸ்எம் 4 முக்கிய காரணங்கள் அடங்கிய ஒரு மனுவைத் தேசியச் சம்பளத் தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைத்தது.

1. வறுமைக் கோட்டு வருமானக் கணக்கு

முதலாவது, தற்போது தேசியச் சம்பளத் தொழில்நுட்பக் குழு பயன்படுத்தும் கணக்கு முறையில், வறுமைக் கோட்டு வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக, அரசாங்கத்தின் புள்ளி விபரப்படி, தற்போதைய தீபகற்ப மலேசியாவின் வறுமைக் கோட்டு வருமானம் ரி.ம.980, சபா ரி.ம.1180 மற்றும் சரவாக் ரி.ம.1020 ஆகும். இந்தத் தொகையைக் கொண்டு புதிய குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்தால், தீபகற்ப மலேசியாவிற்கு ரி.ம.1368, சபாவிற்கு ரி.ம.1175 மற்றும் சரவாக்கிற்கு ரி.ம1185 ஆக, குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படும்.

ஆனால், இந்த வறுமைக் கோட்டு வருமானம் நியாயமான ஒன்றாக இல்லை என்பது பிஎஸ்எம்-இன் கருத்து.  உலகில் உயர் வருவாய் நாடுகளில், வருமைக் கோட்டு வருமானம் வேறு வகையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கூற்றுப்படி, ஒரு நடுத்தர குடும்பத்தின் மொத்த வருமானத்தின் சம்பள அளவில் 60% கணக்கெடுத்தால், அதுதான் வறுமைக் கோட்டு வருமானமாக நிர்ணயிக்கப்படும்.

அதன் அடிப்படையில், அட்டவணை 1, ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மொத்த வருமானம்

அட்டவணை 1

ரி.ம.5228. இதில் 60%, ரி.ம.3136. இதை வறுமைக் கோட்டு வறுமானமாக நிர்ணயித்து, குறைந்தபட்ச சம்பளம் கணக்கிடப்பட்டால், தீபகற்ப மலேசியாவிற்கு ரி.ம. 2071, சபாவிற்கு ரி.ம.1720 மற்றும் சரவாக்கிற்கு ரி.ம 1767 என்ற தொகை கிடைக்கப்பெறும். இதுதான் உண்மையான கணக்கு.

ஆனால், பி.எஸ்.எம் கேட்பதோ வெறும் ரி.ம.1500 மட்டுமே. திடீரென்று ரி.ம.1000 வெள்ளியிலிருந்து அதிகமான தொகைக்குச் சம்பளத்தை ஏற்றுவது கடினமான ஒன்றுதான். அதைக் கருத்தில் கொண்டுதான், நாங்கள் நியாயமான ஒரு தொகையை அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்கிறோம்.

2. வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்பு

பிஎஸ்எம் 4 மாநிலங்களில் அதாவது சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் சுமார் 30 குடும்பத்தினரிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் நமக்கு கிடைத்த சில முக்கியப் புள்ளி விபரங்கள் பின்வறுமாறு:

  • ஆய்வில் பங்குபெற்ற 73 விழுக்காட்டினரின் குடும்ப வருமானம் ரி.ம.3000-க்கும் குறைவாக உள்ளது.
  • 60 விழுக்காட்டினரின் மாதச் செலவினங்கள், வரும் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
  • 33 விழுக்காட்டினர் தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, கடன் வாங்குகின்றனர்.
  • 83 விழுக்காட்டினருக்கு அவசர நேரத்தில் பயன்படுத்த ஒரு சேமிப்பும் இல்லை.
  • 50 விழுக்காட்டினர், வருமானத்தில் 40 விழுக்காட்டை சாப்பாட்டிற்கு மட்டுமே செலவிடுகின்றனர்.             விலை வாசி ஏற்றத்தின் தாக்கத்தை இது நமக்கு உணர்த்துகிறது.

ஆக மொத்தத்தில், ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் வேலை செய்தும் அவர்களின் குடும்ப வருமானம் ரி.ம3000-டிற்கும் கீழ்தான் உள்ளது. இதனால், இவர்கள் வட்டி முதலைகளிடம் கடன்பட்டு பெரும் துன்பத்தில் வாழ்கின்றனர்.

அண்மையில் பெரித்தா ஹரியான் நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தியில், மலேசியாவில் சேமநிதியில் 22% தொழிலாளர்களுக்கு மட்டுமே, அவர்கள் பணி ஓய்வு பெறும்போது சேமிப்பு உள்ளதாகக் கூறியுள்ளது. இது உத்தரவாதமில்லாத ஓர் எதிர்காலத்தையே நமக்கு அளிக்கிறது. மேலும், நாட்டில் 60% தனியார்துறை தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியத் திட்டமும் இல்லை. இவர்களின் எதிர்கால நிலை என்ன?

ஆக, குறைந்தபட்ச சம்பளம் ரி.ம.1500 ஆக உயர்த்தப்பட்டால், தொழிலாளர்களின் ஏழ்மையை குறைக்கலாம்.

3. மற்ற நாடுகளின் குறந்தபட்ச சம்பள வேறுபாடு

ஆசிய நாடுகளில், மலேசியாவில்தான் குறைந்தபட்ச சம்பளம் அதிகமாக வழங்கப்படுவதாக பலமுறை நம் நாடு மார்தட்டிக் கொண்டுள்ளது. ஆனால் அது உண்மையா?

ஒரு நாட்டில், குறைந்தபட்ச சம்பளத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், அந்தச் சம்பளத்தைக் கொண்டு ஒரு தொழிலாளிக்குப் பொருளையும் சேவைகளையும் வாங்கும் சக்தி எவ்வாறு உள்ளது என்பதையும் ஒப்பீடு செய்ய வேண்டும். அதுதான் ஒரு தொழிலாளியின் சம்பள அளவும், அதைக் கொண்டு அவனால் வாழ்க்கைச் செலவினத்தைச் சரிகட்ட முடிகிறதா என்பதையும் அறிந்துகொள்ள உதவும்.

அப்படிப் பார்த்தால் ஆசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் – அதாவது பிலிப்பைன்ஸ், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, லாவோஸ், தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளைவிட நம் நாட்டின் குறைந்தபட்ச சம்பளம் அதிகமாக இருந்தாலும்; வாங்கும் சக்தியோடு ஒப்பிடுகையில் நாம்தான் ஆக மோசமாக நிலையில் உள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

4. மக்களுக்கான சமூக ஊதியம் எங்கே

அரசாங்கம் சம்பளத்தை அதிகம் உயர்த்த முடியாது, அது முதலாளிகளின் செலவை அதிகரிக்கும், அந்தச் செலவைப் பொருட்களில் திணித்து விலைவாசியை அதிகரிக்கும் நிலையும் ஏற்படும் என்பது எங்களுக்குத் தெரியும்.

அதனால், மக்கள் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க, அரசாங்கம் சமூக ஊதியத்தை வழங்க வேண்டும்.

சமூக ஊதியம் என்பது மக்களின் சமூக நலனைப் பாதுகாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளாகும். உதாரணத்திற்கு, மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குதல், இதனால் தொழிலாளர்கள் மாதந்தோரும், பெரும் செலவில்  மருத்துவக் காப்புறுதிக் கட்டணம் செலுத்தும் செலவைக் கட்டுப்படுத்தலாம். அடிப்படை கல்வியிலிருந்து, பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி, அடிப்படை பொருட்களுக்கு உதவித்தொகை வழங்குதல், போன்ற பல சமூக ஊதியங்களை அரசாங்கம் சிறப்பாக வழங்கினால், சம்பளம் குறைவாக இருப்பினும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க முடியும்.

ஆனால், இன்றையச் சூழ்நிலை அப்படியல்ல. சம்பளம் குறைவு, ஆனால் அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இது தொழிலாளர்களை மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளுகிறது.

ஆக, இந்த நான்கு காரணங்களை முன்வைத்து, அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளத்தை ரி.ம.1500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மலேசிய சோசலிசக் கட்சி அரசாங்கத்திடம் வைத்துள்ளது.

  • சிவரஞ்சனி மாணிக்கம்

மலேசிய சோசலிசக் கட்சி,

தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்