தமிழர்களிடம் மன்றாடுகிறார் மகிந்த

தன் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, யாழ்ப்பாணத்தில் நேற்றுக்காலை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2015 அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக யாழ்ப்பாணம் வந்திருந்த மகிந்த ராஜபக்ச, இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய போது,

“ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், வடக்கில் அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயிருக்கின்றன. தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தற்போதைய அரசாங்கம் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கம் ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய நான்கு கட்சிகளாலும் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது.  தொடர்ந்து தமிழ்மக்கள் மத்தியில் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.

இன்று சம்பந்தன், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் ஆக இருக்கிறார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சு நடத்த வருமாறு முன்னர் நான் சம்பந்தனை அழைத்தேன்.

சுமந்திரனை அனுப்புவதாக அவர் கூறினார். ஆனால் சுமந்திரன் என்னிடம் வரவேயில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: